இசைக்குறிப்புகள்

மூன்று கவிதைகள்

இசைக்குறிப்புகள்

- Advertisement -

பிச்சைக் கலயங்கள்
ஏந்தித் திரிகின்றன
தம்பூராக்கள்.

பிணங்களுக்காக
அழுது புலம்பும்
பம்பை , உடுக்கை வகையறாக்கள்.

துகிலுரிப்புக்குள்
துதி பாடும்
கிதார் , பியானோக்கள்.

வர்ண மெட்டுகளில்..
இட்டுக் கட்டிய பாடல்களில்..
வங்கொலையாய் பசியில் செத்த
மூதாதையரின் குருதி நாற்றம்.

ஒட்டிய வயிறு..
தீப்பறக்கும் கண்கள்..
தீய்ந்து போயினர்
தியாகப் பிருமம் போன்றோர்.

காற்றலைகளில்
கவிதைகளின் மெளனங்களாய்..
பிரவகித்து
பசித்தலையும் சிம்பொனிகள்.

ராகங்கள் முகிழ்த்த
ஜீவன்களின் சாம்பல்
தங்கப் பேழைகளில்
நினைவுகளுக்கு.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

களித்துத் துள்ளும் நதி

அந்தியில் மிதந்த
அன்பின் துளிகள்
அழகிய
சித்திரங்களாய் விரிந்தன.

பூக்களின் கனவுகளில்
தோய்த்தெடுத்த
நீர்க்குமிழியின் மென்மை
அதில் வண்ணங்களாய்
ஒளிர்ந்தன.

வார்த்தைகள் உறைந்திட
மழைநாளில் திறந்தது
சப்தங்கள் பெருகும்
ஓர் கலைக்கூடம்.

பேதலிக்கும் மனவெளியில்
ஏக்கங்கள் உதிர்க்கும்
வேட்கையின் வனத்துள்…
தனிமையின்
நிசப்தம் படர்ந்திட
விடாய் தீர்த்தபடி
திரிகிறது சுகவனப் பட்சி.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

அவன் ஏமாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறான்

அவனுக்கு
வயிறு மட்டுமல்ல
இரண்டு கைகளும் இருக்கின்றன
அவன் பட்டினி கிடக்கிறான்
இரவும் பகலும் உழைக்கிறான்
ஓய்வு அறியாமல் அவனது நிமிடங்கள் கரைகின்றன
உற்பத்திகள் கொசுக்களாய் வளர்கின்றன
அமீபாவை யானையாக்குகிறான்
பணம் அவன் கைக்கு வருவது போல் வந்து
சூடுபட்ட நீராய் மறைந்து போகிறது
ஆடைகளை மாற்றுவது போல கட்டிடங்கள் விளை நிலங்களின்
அடையாளங்களை மாற்றுகின்றன
மின்னணு யுகம்
அவனைப் போன்றவர்களின் ஆன்மாவைத் தின்கிறது
மூளைகளை வேதனைகளிடம் குடிக்கக் கொடுத்துவிட்டு
இயந்திரங்களாய் நடமாடுகின்றனர்
பலூன்களாய் உடைந்த படி அவனிடம் கனவுகள் இருக்கின்றன
அவன் தினமும் வேலைக்குப் போகிறான்
விரக்தியான இருதயத்தோடே திரும்புகிறான்
தொழிலகம் அவனது உயிரை மெல்ல உறிஞ்சிக் கொண்டேயிருக்கிறது
அவனது குடும்பம் வெறுமையில் இடைவிடாது வேகுகிறது
எங்கையோ செழிப்பின் களியாட்டத்தின் ஆராவரம் ஒலிக்கிறது
அந்த உற்சவத்தின் பாடல்களை
இவன் தான் எழுதி இசையமைத்தான்
காலியான அரிசிப் பானைகளில்
காற்று விளையாடும் சப்தம் கேட்கிறது
அவனுக்கு வயிறுமட்டுமல்ல
இரண்டு கைகளும் இருக்கிறது
அவன் பட்டினி கிடக்கிறான்
அசதி மறந்து உழைக்கிறான்
பசியில் தன்னோடு
குடும்பத்தையும் எரிக்கிறான்

+1
வசந்ததீபன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்சமயம் சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறார். ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மணிப்பூரில் நாகா மலைவாழ் மக்கள் பள்ளியில் ஏழு வருடங்கள் வேலை பார்த்தார். நீண்ட காலங்களாக கவிதைகள் , கதைகள் எழுதி வருகிறார். 2010 ல் " கொளிஞ்சி" எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. அன்பைத் தேடிக் கண்டடைவதே படைப்பாக்கமாக நம்புகிறார்.
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -
0
Would love your thoughts, please comment.x
()
x