ஊழ் (12)

தொடர்கதை

- Advertisement -

இத்தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…!

காலை பயணத்திற்கு தேவையானதை எடுத்து ஒரு பெட்டியில் கட்டினான் அமுதன். அவன் மாமா சீனுவிற்கு அழைத்து அவன் பயணம் பற்றிக் கூறினான்.

“சரி மாப்ள நாங்க காலைல பத்து மணிக்கெல்லாம் திருச்சி ஏர்போர்ட்டுக்கு வந்துறோம். நாங்க வராம நீங்க வேற யார் கூடையும் போய்டாதீங்க. சரியா?” என்றார் சீனு மாமா.

“ஏன் மாமா? உங்களுக்கு ஏன் சிரமம். நானே ஒரு டாக்சி புடிச்சு வந்துறேன் மாமா”

“ஐயய்யோ மாப்ள. அதெல்லாம் ஒன்னும் சிரமம் கிடையாது. நாங்க வராம நீங்க யார் கூடவும் போக கூடாது. காலைல பத்து மணிக்கெல்லாம் ஏர்போர்ட் வாசல்லையே நின்னுகிட்டு இருப்பேன். வாங்க மிச்சத்தை நாளைக்கு பேசிக்குவோம். அப்பறம் இன்னொரு விஷயம் இப்போதைக்கு நீங்க வர்றீங்கன்னு யார்ட்டையும் சொல்ல வேணாம்.”

சீனு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று காரணமில்லாமல் எதுவும் சொல்ல மாட்டார். அமுதனுக்கு அவரை நன்றாகத் தெரியும். அதற்கு மேல் அவரிடம் எந்த கேள்வியும் கேட்காமல்.

“சரிங்க மாமா” என்று அழைப்பைத் துண்டித்தான்.

பகலில் அதிகம் தூங்கிவிட்டதாலோ என்னவோ இரவு வெகுநேரம் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தான். ரகுவும் அவனுடனே தங்கிக்கொண்டான்.

அதிகாலை 5.20க் கெல்லாம் எழுந்து குளித்து முடித்து வந்து ரகுவை 6 மணிக்கு எழுப்பினான். அவனும் வேகவேகமாகக் கிளம்பினான். அமுதனை வழியனுப்ப விமானநிலையம் வரையில் வந்தான். அங்கிருந்த மெக்டோனால்ட்ஸில் வற்புறுத்தி ஒரு பர்கர் சாப்பிட வைத்தான். அவனும் சாப்பிட்டான். அமுதன்ன் உடுப்புகளை மட்டும் ஒரு சிறிய பெட்டியில் போட்டுக் கிளம்பியதால் அவனுக்கு வேறு எந்த லக்கேஜும் இல்லை. குடியேற்றச் சோதனையை முடித்து விமானம் காத்திருக்கும் பகுதிக்குச் சென்று அழைப்பிற்காகக் காத்துகொண்டிருந்தான்.

விமானம் மேகக்கூட்டங்களைப் பின்னுக்குத்தள்ளி தன் வேகத்தையும் உயரத்தையும் கூட்டிக்கொண்டே சென்றது. மதியில்லாத அந்த வானம் முழுவதும் மதுமதியே நிறைந்து இருந்தாள்.

‘இந்த விமானம் இப்படியே வெடித்துச் சிதறிவிட்டால், மது எனக்காக அழுவாளா? இல்லை தொலைந்தான் துரோகி என்று மகிழ்ச்சியடைவாளா? ச்சீ எனக்கேன் இந்த கற்பனை. மது எனக்காக அழத்தான் செய்வாள் அவளுக்கு என் மீது கோபம் இருக்கலாம் வெறுப்பிருக்காது என்ற நம்பிக்கையில்தான் இந்தப் பயணத்தையே மேற்கொள்கிறேன். இருந்தாலும் விமானம் வெடித்துவிட்டால் இப்படியே தப்பித்துக்கொள்வேன். எந்தப் போராட்டமும் தேவையில்லை. மதுவும் அவளுக்குப் பிடித்த வாழ்வை அமைத்துக்கொள்ளலாம்.’ அவன் சிந்தனையின் ஊடே இடையிடையில் அவ்வப்போது தூக்கம் குறுக்கிட்டுக் கொண்டே இருந்தது. அது மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அவன் தலை எப்போதோ வெடித்திருக்கும்.

ஜன்னலோர இருக்கையில் இருந்ததால் அருகில் இருப்பவர் தொல்லையில் இருந்து தப்பித்துக்கொண்டான். அவன் அருகில் அமர்ந்திருந்தவர் அடிக்கடி எழுந்து சென்றுகொண்டே இருந்தார். அவன் பின் இருக்கைகளில் ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது அப்பா, அம்மா, பத்து வயது மதிக்கத்தக்கப் பெண் குழந்தை. அவன் ஆழ்ந்து தூங்கும் போதெல்லாம் அந்த குட்டிப் பெண்ணின் உதை அவன் இருக்கையை அதிரச்செய்து தூக்கத்தைக் கலைக்கும். அந்தப் பயணம் முழுவதும் தூக்கமும் மதுவும் அவனை மாறிமாறி ஆக்கிரமித்துக்கொண்டே இருந்தார்கள்.

குறிந்த நேரத்தில் அவன் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கி விமானம் தரையிறங்கியது. இனி அமுதன் அவன் பிரச்சனைகளைச் சந்தித்துதான் ஆகவேண்டும். தப்பித்துக்கொள்ள எந்த வழியும் இல்லை. குடியுரிமைச் சோதனைகளை முடித்து விமானநிலைய வாயிலை அடைந்தான். சீனு மாமா அங்கே காத்துக்கொண்டிருந்தார். அவனைப் பார்த்தவுடன் புன்னகையோடு வேகவேகமாக வந்து “வாங்க மாப்ள” என்று அவன் கையில் இருந்த பெட்டியை வாங்கினார்.

“பரவால்ல மாமா” என்று அவன் சொல்லிகொண்டிருக்கயில் அவன் மாமாவின் கையில் இருந்த பையை இன்னொருவர் வாங்கினார். அப்போதுதான் கவனித்தான் அவனைச் சுற்றி ஐந்துபேர் வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் அவன் மாமா ஊர்க்காரர்கள். இவர்களை இதற்குமுன் அவன் பார்த்திருக்கிறான். அவன் திருமணத்திற்குக் கூட வந்திருந்தார்கள். நினைவுகளை மெல்ல அசைபோட்டு அந்த நபர்களை ஞாபகப்படுத்திக்கொண்டான்.

அவன் மாமாவின் குவாலிஸ் காத்துக்கொண்டிருந்தது. அவன் மாமாவும் டிரைவரும் முன்னிருக்கைகளில் அமர்ந்துகொண்டனர். நடுவில் இருந்த இருக்கைகளில் அமுதன் நடுவிலும் அவன் இரண்டு பக்கத்திலும் இருவரும் அமர்ந்துகொண்டார்கள். பின் இருக்கையில் மேலும் இருவர் அமர்ந்திருந்தனர். இவர்கள் எல்லாம் அவனை எங்கோ கடத்திக் கொண்டு போகப்போவது போலவே அவனுக்கு ஒரு பிரம்மை.

வண்டி கிளம்பியது அங்கு நிலவிய அமைதியைப் பின்னால் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் கலைத்தார்.

“அந்த ராஜசேகர் பயல்லாம் ஒரு ஆள்ன்னு. வீட்ல வந்து சத்தம் போட்ட அன்னிக்கே அவனை தூக்கிப்போட்டு மிதிச்சிருக்கணும்யா.”

ராஜசேகர் மதுமதியின் அண்ணன்.

“விடுங்கப்பு ஒருநாள் சிக்காமலா போயிருவான் அன்னிக்கு இருக்கு அவனுக்கு” இது அமுதன் அருகில் இருந்தவர்.

“கொஞ்சம் அமைதியா வாங்க அப்பறம் பேசிக்குவோம்…” சீனு மாமா அவர்களை அமைதிப்படுத்தினார்.

“என்ன மாமா அந்த ராஜசேகர் வந்து ரொம்ப பிரச்சனை பண்ணிட்டானா?” என்று அமுதன் அவரிடம் கேட்டான்.

“அந்தப் பயல்லாம் நம்மகிட்ட வந்து பிரச்சனை பண்ற ஆளா தம்பி. ஆள்பேர் இல்லாதப்போ சும்மா வந்து சவுண்ட குடுத்துட்டு போயிருக்கான். நாய்க்கு நாலு எடுபுடி வேற.” அமுதன் பின்னால் இருந்த பெரியவர் பதில் சொன்னார்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. வீட்டுக்குப் போய் பேசிக்குவோம்” இது சீனு மாமா.

“அப்பா ஏன் மாமா வரல?” என்றான். அவர் வராததும் அதிகம் அறிமுகமில்லாதவர்கள் பலர் அவனுடன் வருவதும் அவனுக்கு எதையோ எச்சரிக்கை செய்துகொண்டே இருந்தது.

“அவர் வர்றேன்னு தான் சொன்னாரு. நான்தான் வீட்ல இருக்க சொன்னேன்.” என்றார் சீனு மாமா.

“அந்த ராஜசேகர் கட்சிலலாம் இருக்கான்ல. அவன் பாட்டுக்கு உங்களை வந்து ஏதாவது செஞ்சுட்டா? அதான் அவரை வீட்ல இருக்கச் சொல்லிட்டு நாங்க வந்தோம்” அமுதன் அருகில் இருந்தவர் சொன்னார்.

“ஆமா அது ஒரு கட்சி அவன் ஒரு ஆளு… பத்து அல்லக்கை கூடத்திரிஞ்சா அவன்லாம் பெரியாளாடா?” பின் சீட்டில் அமர்ந்திருந்த பெரியவர்.

“ஆமா அவர் பெரிய சூரப்புலில. அப்படியே நம்ம எல்லாத்தையும் ஒரே சீவா சீவிருவாரு” என்றார் டிரைவர்.

“நம்மள தான் அவனால சீவ முடியும் நம்ம மச்சக்காளை ஐயாவ சீவிருவானோ?” என்று அமுதன் பக்கத்தில் இருந்தவன் சொல்ல அவர்கள் அத்தனை பேரும் வெடித்துச் சிரித்தனர். பின் சீட்டில் இருந்த பெரியவர் தன் வழுக்கை தலையைத் தடவிக்கொண்டு “வண்டிய ஒழுங்கா ஒட்டுங்கடா. சோக்கு அடிக்கிரீகளோ சோக்கு” என்று அமுதன் அருகில் இருந்தவனின் பிடரியில் அடித்தார்.

சீனு மாமா ஆழ்ந்த சிந்தனையில் அமைதியாகவே வந்தார். அவர் இவர்கள் அடித்த நகைச்சுவையில் கலந்துகொள்ளவும் இல்லை சிரிக்கவும் இல்லை.

வீடு வந்தது எப்போதும் அமுதனுக்காக வாசலில் காத்துக்கொண்டிருக்கும் அவன் அம்மா இப்போது இல்லை. மகன்மீது பட்ட அத்தனை திருஷ்டிகளும் கழிந்துவிட்டது என்று நினைத்துவிட்டாள் போல. அவன் குனிந்த தலை நிமிராமல் விறுவிறுவென வீட்டிற்குள் சென்றுவிட்டான். அவர்களோடு வந்தவர்களில் மூன்றுபேர் மட்டும் சீனு மாமாவுடன் சென்று வீட்டிற்குள் அமர்ந்தார்கள்.

அமுதனின் அக்கா முகத்தில் ஒருவித வாட்டத்துடன் “வாடா…” என்று அவனைப் பார்த்து சொல்லிவிட்டு. “அவங்களையும் கூப்பிடுங்க எல்லாருக்கும்தான் காபி போட்டிருக்கு” என்று உள்ளே வராமல் வெளியில் நின்றவர்களையும் அழைக்கச் சொன்னாள்.

அவன் பிறந்து வளர்ந்த சொந்த வீடே இப்போது அமுதனுக்கு ஒரு அந்நியரின் வீட்டைப் போல் இருந்தது. அவன் இரத்த சொந்தங்களை ஏறெடுத்துப் பார்ப்பதே பெரும் துன்பமாக இருந்தது. வரும் போது மதுவை மட்டும் சமாளித்துக் கூட்டிக்கொண்டு போகலாம் என்று வந்தவனுக்கு இப்போது சமாளிக்க பலர் இருந்தனர். என்ன தான் சொந்த பந்தம் என்பதற்காக அவனை ஆதரித்தாலும் அவனுக்கு முன்னர் இருந்த அந்த நற்பெயர் இப்போது அங்கிருக்கும் யாருக்கும் இல்லை என்பதை அவன் அறிந்தே இருந்தான்.

**************************************

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்….

**************************************

அடுத்த பாகத்தை பார்க்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…! – 13

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -