ஊழ் (14)

தொடர்கதை

- Advertisement -

இத்தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…!

அமுதன் குனிந்த தலை நிமிராமல் கட்டிலில் அப்படியே அமர்ந்திருந்தான். அவன் அருகில் வந்து தோளைத்தொட்டு. “உனக்கும் அந்த புள்ளைக்கும் வேற எந்தப் பிரச்சனையும் இல்லைல. அந்த புள்ளைகூட நீ சேர்ந்து வாழனும்ன்னுதானே நினைக்கிற?” என்றார் அவன் மாமா சீனு.

“சத்தியமா அவகூட வாழனும்ன்னு தான் மாமா நினைக்கிறேன். அவள் இல்லாத வாழ்க்கைய என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியல மாமா…” சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவன் கண்கள் கலங்கின.

“சரிப்பா… சரிப்பா… எல்லாத்தையும் பேசி முடிச்சுரலாம். தைரியமா மட்டும் இரு” என்று கூறிவிட்டு அவர் அறையை விட்டு வெளியே சென்றார்.

சிறிது நேரத்தில் அவன் அக்கா சாப்பாட்டுடன் வந்தாள். “என்னடா இன்னும் குளிக்கலியா. சரி சாப்பிடு அப்பறம் குளிச்சுக்கலாம்.”

“இல்லக்கா இல்லக்கா நீ வச்சுட்டுப் போக்கா நான் குளிச்சுட்டு சாப்ட்டுக்கிறேன்.”

“ரொம்ப நேரம் ஆக்கிராதடா இட்லி ஆறிப்போயிடும்.”

“உன் பிள்ளைகள் எல்லாம் எங்கக்கா? “

“மூத்தவ பக்கத்து வீட்டுக்கு விளையாட போயிருக்கா. வருண்குட்டி அம்மாகிட்ட இருக்கான். அதுகளுக்கு என்ன ஜாலியா தான் இருக்குக”

“ஏன்க்கா அம்மா என்கூட பேசாதா? மேல வரும்ன்னு நினைச்சேன் “

“நான் பொறந்து ஏழு வருஷம் கழிச்சு பொறந்தவன் நீ. ஒத்த மகன்னு உன்மேல தானேடா அம்புட்டு பாசம் வச்சிருந்துச்சு. அது அண்ணன் மகளை நீ கட்டிக்க மாட்டைன்னு சொன்னதும். அண்ணன பகைச்சுதானே நீ நல்லா இருக்கனும்ன்னு வெளில பொண்ணு பாத்து வச்சுச்சு. இப்படி நாலு மாசத்துலையே இவளோ பெரிய பிரச்சனை வந்தா அதால எப்படி தாங்க முடியும். உன்னைப் பார்த்தா ரொம்ப நொறுங்கிப் போயிடும்டா. அதான் அது வெளில வராம கெடக்கு. ஒரு நாலுநாள் போனா எல்லாம் சரியாகிடும். சரி இட்லி ஆறிடும் நீ வேகமா சாப்பிடு” என்று கூறிவிட்டு அவளும் வெளியேறினாள்.

குளித்து முடித்து அவனுக்காக காத்துகொண்டிருந்த இட்லிகளை சாம்பாரோடு சேர்த்து உண்டான். சொம்பில் இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு கையைக் கழுவினான். கீழே என்ன பேசுகிறார்கள் என்ன முடிவு செய்யப் போகிறார்கள் என்று அறிய ஆவல் இருந்தாலும். அங்கு செல்வதை தவிர்க்கவே விரும்பினான்.

ரகு அலைபேசியில் அழைத்தான்.

“டேய் என்னடா ஆச்சு? வீட்டுக்கு போயிட்டயா?” என்றான்.

அவனிடம் இங்கு நடந்தவற்றைக் கூறினான் அமுதன். “டேய் யூ ஹாவ் ட்டு ஸ்பீக் வித் யுவர் ஒய்ப்டா. அவங்ககிட்ட நீ பேசினா மட்டும்தான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு வரும். இந்த பஞ்சயாத்து பேசுறவங்களை எல்லாம் நம்பாத. அவங்க பிரச்சனையை பெருசாக்குவாங்களே தவிர தீர்க்க மாட்டாங்க. எப்படியாவது உன் ஒய்ப்கிட்ட பேசுடா” என்றான்.

அவனிடம் பேசி முடித்துவிட்டு. அவன் மனைவியின் அலைபேசி எண்ணுக்கு முயற்சி செய்தான். அது இப்போதும் அமத்தி வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னது.

“மாமா சாப்ட்டு முடிச்சுட்டீங்களா? அம்மா கேட்டு வர சொல்லுச்சு” என்றவாறே என் அக்காவின் ஆறுவயது மகள் ஐஸ்வர்யா உள்ளே நுழைந்தாள்.

அவளைப் பக்கத்தில் அழைத்து தூக்கி மடியில் வைத்துக்கொண்டு “மாமா சாப்ட்டேன் நீ சாப்ட்டியா?” என்றான்.

“நான் சாப்ட்டேன் மாமா. நீங்க எனக்கு சிங்கப்பூர் சாக்லேட் வாங்கிட்டு வந்தீங்களா?” என்று கொஞ்சினாள்.

“இல்லைடா செல்லம். மாமா அடுத்த தடவை வரும்போது வாங்கிட்டு வரேன்” என்று சொல்லி முடிக்க அவனிடமிருந்து தாவி இறங்கி “சரி மாமா நான் கீழப்போய் விளையாடப் போறேன் பாய்….” என்று கத்திவிட்டு ஓடிவிட்டாள்.

அமுதன் சார்பாக அவன் உறவினர்கள் நான்குபேர் மதுவின் வீட்டிற்கு சென்று சமாதானம் பேச முடிவு செய்யப்பட்டது. அதில் ஒருஆள் பின்சீட்டுப் பெரியவர் மச்சக்காளை. அவன் அப்பாவோ சீனு மாமாவோ கண்டிப்பாக அங்கு செல்ல வேண்டாம் என்றும் முடிவு செய்தார்கள். ஆக அமுதன் குடும்பத்தில் இருந்து யாருமே போகாமல் அவர்கள் சார்பாக ஒரு குழு செல்கிறது. அவர்கள் வரும்வரை அமுதன் காத்திருந்துதான் ஆகவேண்டும்.

மறுநாள் பிற்பகலில் சமாதானம் பேசச் சென்றவர்வர்கள் திரும்பி வந்தார்கள். இப்போதுவரை அவன் அம்மா அவனிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அப்பாவும் வந்தபோது சொன்ன ‘வாப்பா’வோடு சரி. அக்கா மட்டும்தான் அவ்வப்போது வந்து அவனை சமாதானப்படுத்த ஏதாவது பேசிச் செல்கிறாள். சிங்கப்பூரில் யாரும் இல்லாமல் இருக்கும் தனிமையைவிட அனைவரும் இருக்கும்போது ஏற்படும் இந்தத் தனிமை அவனுக்கு மேலும் கொடுமையாக இருந்தது.

இப்போதும் அந்த மச்சக்காளைதான் பேச்சை ஆரமித்தார். “அவிங்க ஒன்னும் பிள்ளைய வாழவைக்கிறது மாதிரி பேச மாட்றாய்ங்களேப்பா. ஆத்தாளும் அப்பனும் டைவாஸ் வாங்கிக்குடு டைவாஸ் வாங்கிக்குடுன்னு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிராய்ங்க. அந்த புள்ளை அண்ணே அந்த சண்டியரு அதைவிட குதிக்கிறான். கொலைபன்னிட்டு செயிலுக்குகூட போவானாம். நாங்கல்லாம் பாக்காத கொலையா மிரட்டிப் பாக்குறான் பொடிப்பய”

இன்னொரு பெரியவர் என் அப்பாவைப் பார்த்து “சந்திரா அவனுக நாம பேசுறது எதையும் காதுல வாங்க மாட்றானுகபா. ஒரு முடிவோடையே பேசிக்கிட்டு இருக்காய்ங்க. அனேகமா அவிங்க ஊர் பிரசிடென்ட்டு இல்லை சா.மு.க கட்சி எம்.எல்.ஏ சபாபதிய வச்சு பஞ்சாயத்தை கூட்டுவாய்ங்கன்னு நினைக்கிறேன்.” ஆதங்கத்தோடு சொல்லி முடித்தார்.

அமுதனின் அப்பா எதுவும் பதில் சொல்லாமல் சிந்தனையிலேயே இருந்தார். சீனு மாமா “புதுசா கல்யாணம் ஆனதுக இன்னும் உலகத்தை புரிஞ்சுக்க எவளவோ இருக்கு. இப்போ போய் பஞ்சாயத்து கிஞ்சாயத்துன்னு நிப்பாட்டுனா அதுக நாளை பின்ன சேர்ந்து வாழ வேணாம்?” என தயங்கினார்.

“அப்பு அவக சேர்ந்து வாழனும்ன்னே சொல்லலப்பு. அத்துவிடத்தான் சொல்றாக. நாமதான் சேக்கணும் சேக்கணும்ன்னு துடிச்சுக்கிட்டு இருக்கோம். பொண்ண பெத்தவன்தான் நம்ம கால்ல விழனும் நாம அவிங்க கால்ல விழுந்துகிட்டு இருக்கோம்.” தான் ஒரு ஆண் என்ற கர்வம் இதைச் சொன்ன மூன்றாவது பெரியவரின் மீசையில் மட்டுமல்ல பேச்சிலும் இருந்தது.

“அவிங்க கால்ல நாம ஏன்யா விழப்போறம். நம்ம பய நல்லா சம்பாதிக்கிறான் வயசு இருக்கு இவனுக்கு என்ன பொண்ணா கிடைக்காது?” என்றார் இன்னொரு பெரியவர்.

இது இப்போது அமுதன் வாழ்க்கை பிரச்சனை என்பதிலிருந்து பெரியவர்கள் தன்மானப் பிரச்சனை என்பதுபோல் திசை திரும்பிக்கொண்டிருந்தது. அவன் அப்பா இப்போது வரை மௌனம் கலைக்கவில்லை.

“இல்லை சித்தப்பா பொண்ணு நல்ல பொண்ணுதான் அவக வீட்டாளுகளும் நல்ல ஆளுகதான். இந்த ஒரு மேட்டர்தான். அந்தப் பொண்ணை அமுதன் கூட பேச வச்சுட்டோம்ன்னா பிரச்சனை முடிஞ்சா மாதிரிதான்.” சீனு மாமா அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார்.

“ஆமா ஆமா நல்ல…. ஆளுகையா. மருவாதை தெரியாத ஆளுக” என்றார் அந்தப் பெரியவர்.

பேசிக்கொண்டிருக்கும் போது அமுதன் அப்பாவின் அலைபேசி அழைத்தது.

“ஹெலோ ஆமா நான் சந்திரன் தான் பேசுறேன். நீங்க…”

“ஓ அப்படியா. சரிங்க… ஓ… சரிங்க வர்றேன்…”

“இப்போ வெளில இருக்கேன்… சாயங்காலம் ஒரு ஆறு எழு மணிக்கு வர்றேன்…”

“யார் யார் மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க?”

“சரிங்க… சரி…”

“அனைத்து மகளிர் காவல்நிலையம் தானே சரிங்க சாயந்தரம் வர்றோம்…”

**************************************

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்….

**************************************

அடுத்த பாகத்தை பார்க்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…! – 15

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -