பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 17

விடை என்ன விளக்கம் என்ன விரல் பின்ன நாணம் என்ன..!

- Advertisement -

கண்கள் சொன்ன மொழி என்னவென்று ஆராயச்சென்ற எஸ்.பி.பியைப் பார்ப்போம் வாருங்கள். காதலோடும் பாடலோடும் எந்த ஆய்வினைச்செய்தாலும் அது இன்பமாகத்தானே இருக்கும். அவ்வகையில் இன்றைய ஆய்வும் ஒரு காதலாய்வுதான்..

தான் உருகி உருகிக் காதலித்த பெண் பதிலேதும் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை.. பல நேரங்களில் அவனையே தவறாக எண்ணிச் சினத்தில் வார்த்தைகளைக் கொட்டிக் கொட்டும் நிலை உருவாகிவிடும்போதுதான் ஒருவன் மிக உடைந்து போகின்றான்.. அதற்கு மருந்தே கிடையாது. ஆனால் சுக்கல்சுக்கலாகச் சிதறிய அவனின் மனம் அவளாகத் தேடிவந்து இயல்பாகப் பேசினாலே ஒட்டிகொள்ளத் தொடங்குகிறது.. அவள் காதலை ஏற்றுக்கொண்டு பேசினால் சொல்லவே வேண்டாம். பிரிக்கவே முடியாத அளவுக்கு தன்னைத்தானே ஒட்டிக்கொண்டு உடனே அவள் மனத்துடனும் சென்று ஒட்டிக்கொள்ளும். அதுதான் காதலின் சிறப்பு.

தன்னைப் பிடிக்காத ஒருத்தி தானாக முன்வந்து தன்னிடம் காதலைச் சொல்லும்போது நாயகன் பாடத் தொடங்குகிறான். புதுக்காதல் முதற்காதல்.. இணைந்துதான் பாடவேண்டும். அப்படித்தான் தொடங்குகிறது இப்பாடல்.

தேடிவந்து காதல் சொன்னதால் முதல் சரணம் பாடும் வாய்ப்பினைப் பெண்ணுக்கே அளித்திருக்கிறார் எஸ்.பி.பி. இணைப்பாட்டு அதுவும் காதலிணைப்பாட்டு என்றால் எஸ்.பி.பி – ஜானகியம்மா தான் இயல்பாகவே எல்லோருடைய நினைவிலும் வந்திருக்குமோ? இப்பாடலை நம் பாடும்நிலாவோடு பாடுகிறார் ஜானகியம்மா.

விரல்கள் தீண்ட மெழுகாய் ஆனேன்

விலகி இருந்தால் என்ன?

என்று கேள்வியொன்றை வைக்கிறார். மெழுகின் பிறப்பே எரிவதற்காகப் படைக்கப்பட்டதுதானே.. நெருப்பைச் சுமந்துகொண்டிருப்பது தானே அதன் பிறவியிலக்கு. ஆனாலும் அது எப்போதும் தாங்கும் சூட்டைவிடவும் காதலன் விரல்வழியே கடத்துகின்ற காதற்சூடு மிகுதியாய் இருக்கிறதாம். நெருப்பைப் பற்றவைக்காமலேயே அச்சூடு மெழுகை உருகவைத்து விடுமாம்.. அப்படிப்பட்ட நிலையில் நானிருக்கிறேன் நீ கொஞ்சம் தள்ளித்தான் இருந்தாலென்ன? என்று கேட்கிறாள்.

பொதுவாகவே பதில் சொல்வதில் ஆண்கள் கொஞ்சம் கடைநிலையினர்தான், கேள்வி கேட்பது காதலியாகவோ மனைவியாகவோ இருக்கும்போது…!. புத்திசாலி ஆண்கள் என்ன செய்வார்கள் என்றால் கேள்விக்குப் பதில் சொல்லாமல் வேறொரு கேள்வியைக் கேட்டுவிடுவார்கள். அதுதான் இங்கேயும் நடக்கிறது.

*உறவைத் தேடும் உயிராய்

நானும் உருகிக் கிடந்தால் என்ன?*

என்று திரும்பக் கேட்கிறான் நாயகன்.. என்னை ஏன் உருக வைக்கிறாய்? என்று நாயகி கேட்டதற்கு உனக்குப் பதில் நான் உருகிக் கொள்ளட்டுமா? என்று கேட்கிறான்.. இந்த ஒரு கேள்வி போதாதா அவள் அவன்பால் மொத்தமாய் உருகிவிட!!! கேள்வி கேட்கும்போது பதில் தெரியாமல் எதையோ உளறி எரியும் தீயில் எரிநெய்யை ஊற்றுவதை விட்டுவிட்டு, கேட்ட கேள்வியையே மறந்து அவள் மனத்தைத் தன்பால் ஈர்க்கும் பதில் கேள்வி ஒன்றைக் கேட்கப் பழகுங்கள் ஆண்களே. வாழ்வு மகிழ்வாய் மலரும்.

* இது ஆசை பேச்சா என்ன நான்

வாங்கும் மூச்சா என்ன?*

அவன் பதில் கேள்வி கேட்டதிலேயே அவனின் மனத்தை ஊடுருவி அறிந்துகொள்கிறாள்.. நீ ஆசையாய்ப் பேசப்பேச எனக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது.. அத்தனை வேகமாய் உன் ஆசைக்காற்று என்னைச் சுற்றிலும் வீசுகிறது என்கிறாள்.

*இள வேனில் காற்றா என்ன இவள்

தேனின் ஊற்றா என்ன?

அடி போடி காதலியே.. நீதான் இளவேனிற் காற்றாக என்மீது வீசுகிறாய் என்று நினைக்கும்போது இன்பத்தேன் ஊற்றின் சுவையையும் மணத்தையும் அடர்வையும் வழவழுப்பையும் எனக்குள் உணர்த்தி என்னைக் குழப்புகிறாய்.. நீ காற்றா ஊற்றா? என்று சொல்லடி என்கிறான் நாயகன்.

*இனி என்ன கேள்வி என்ன?

என்னைத் தந்தேன் வேறு என்ன?

இத்தனைக்குப் பிறகும் நாம் மாற்றி மாற்றிக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்க வேண்டுமா? என்னையே நான் தந்துவிட்டேன்.. உறவாக உயிராக இளவேனிற் காற்றாக இன்பத்தேன் ஊற்றாக எதுவாக வேண்டுமானாலும் நீயே எண்ணிக்கொள் என்று தன்னை முழுமையாய் ஒப்புக்கொடுத்துவிடுகிறாள்.. இங்குதான் காதல் கடவுளுக்கு இணையாய் உயர்கிறது.. தன்னையே முழுமையாய் ஒப்புக்கொடுத்தல் என்பது கடவுளிடமும் காதலிடமும் மட்டுமே நடக்கக்கூடிய ஒன்று..!

அடுத்த சரணத்தின் போக்கினைத் தீர்மானம் செய்யும் உரிமை எஸ்.பி.பிக்கு என்பதால் அவர்தான் தொடங்குகிறார்.

மார்பில் நீந்தும் நிலவே

உன்னை வானம் மறந்தால் என்ன? *

என்று கேட்கிறார்.. நிலாவுக்குப் பிறந்தவீடு வானம்தானே! பிறந்த வீட்டினர் கூட உன்னை நினைக்க வேண்டாம்.. அந்த உரிமையையும் சேர்த்து நானே எடுத்துக் கொள்கிறேன். நீ என்னோடு மட்டுமே இருந்துகொள்ளேன் என்று காதலின் உச்சம்கொட்டிப் பாடும் வரிகள் அவை.

வரும் கால வரலாற்றிலே இனி

நாமும் கலந்தால் என்ன?*

காவியக்காதல், இலக்கியக்காதல் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட வரலாற்றுக்காதலாக நம் காதலை மாற்றி இவ்வுலக வளிமண்டலம் எங்கும் நிறைந்திருப்போம் என்று கூறுவதோடு நில்லாமல்

இனி என்ன கேள்வி என்ன?

என்னைத் தந்தேன் வேறு என்ன?*

என்று அவள் சொன்னதையே அவளிடம் திரும்பச்சொல்லி அவளை மயக்க முனைகிறார்.

முகம் என்ன மோகம் என்ன?

விழி சொன்ன பாஷை

என்ன வேறென்ன? *

என்பதுதான் பல்லவி.. பல்லவியைத் தொடங்கிவைத்துப் பாட்டுக்குள் நம்மை இழுத்துப் பறக்கவிடுகிறார் நம் எஸ்.பி.பி … மெல்லிய பட்டுநூல்களால் செய்த சிறகுகள் பறப்பதற்கு நடுவே நாமும் பறந்து கொண்டிருத்தல்போல எடையிழந்து போகிறோம் இப்பாடலைக் கேட்கும்போது. அதிலும்

*விடை என்ன விளக்கம் என்ன?

விரல் பின்ன நாணம் என்ன?*

என்ற வரியைப் பாடும்போது விரல்பின்ன என்று சொல்வதற்கு முன் ஒரு சிரிப்பு சிரிக்கிறார் நம் எஸ்.பி.பி. அது அந்த மாயோனின் புல்லாங்குழலைப்போல நம்மை மயங்கவைத்து வேறுலகுக்கு அழைத்துச்செல்லும் தன்மை கொண்டது.. வேறெந்தப் பாடகனுக்கும் கிட்டாத தனிச்சிறப்பாய் எஸ்.பி.பியின் “பாட்டிடைச் சிரிப்பினைச்” சொல்லலாம். அதனால்தான் அவர் பாட்டுத்தலைவன் என்று எல்லோராலும் புகழப்படுகிறார். காதல் என்ற சொல்லையே வெறுக்கும் ஒருவன்கூட அந்தச்சிரிப்பில் மயங்கி எஸ்.பி.பியின் குரலைக் காதலிக்கத் தொடங்கிவிடுவான்.

சுபாஷ் என்னும் திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் மற்றும் நடிகை ரேவதி இணைந்து பாடிநடித்த இப்பாடல் முழுக்க முழுக்க மென்மையான குரலிலேயே பாடியிருப்பார் பாடும் நிலா.. கூர்ந்து கவனித்தால் மென்மையை மெருகேற்றுவதில் ஜானகியம்மாவையே மிஞ்சித்தான் பாடல் முழுக்க கோலோச்சியிருப்பார்..

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் எடுத்த படங்களில் இது சிற்றூர்ப் பின்னணியில் எடுக்கப்பட்ட படமல்ல. அதனாலேயே அது அவ்வளவாகப் பேசப்படவில்லையோ என்று தோன்றியது. ஆனால் இப்பாடல் வரிகளைக் கேட்டுப்பாருங்கள் .. காதல் தேனில் முக்கியெடுத்து அப்படியே தேன் சொட்ட சொட்ட இப்பாடலில் வரிகளாகியிருக்கிறார்.

எஸ்.பி.பி-வித்யாசாகர்-அர்ஜுன் எனும் மூவர் இணையில் சட்டென்று நினைவுக்கு வரும் மலரே மௌனமா மௌனமே வேதமா? என்னும் பாடலைப்போலவே முழுக்க முழுக்க மென்மையில் தோய்த்தெடுத்த பாடல் இது. கணீர்க்குரலிலும் பாடுவார் காந்தக் குரலிலும் பாடுவார் இந்தப்பாட்டில் வருவதைப்போல காற்றுக்குரலிலும் பாடுவார்.. அதனால்தான் அவர் பாடும் நிலா!

பாடும் நிலா என்று பெயர் வைத்துக்கொண்டு வான் நிலாவோடு உறவாடாமல் இருக்க முடியுமா? ஆயிரம் கவலைகள் அணிவகுத்து நின்றாலும் அத்தனையையும் தன் பாட்டால் அழித்துவிடுவாரே எஸ்.பி.பி. வான்நிலாவின் வாட்டத்தைப் போக்கிவிட்டுத்தான் அடுத்தவேலை என்று உறுதிமொழிபோல ஏதோ சொல்கிறார் எஸ்.பி.பி. என்னவென்றுதான் நாமும் காத்திருந்து பார்ப்போமே.

மகிழ்வின் உதயத்தில் நிலா சோறூட்டும் விரைவில்..!

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

2 COMMENTS

  1. மீண்டும் ஒரு சிறப்பான பாடலை விமர்சித்து அதன் கவித்துவத்தையும் வருடும் குரலையும் மெல்லிசையும் மிகச்சிறப்பாக விமர்சித்து அந்த பாடலை தேடி நம்மை பார்க்கத் தூண்டிய கவிதாயினி பிரபாதேவி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ???

    • வணக்கம்,

      மீண்டும் நல்லதொரு பாடலைப் பற்றிய
      ஆய்வுக் கட்டுரை..

      ஆனால் இதில் பாடும் நிலா பாடிய விதத்தை விவரிக்கும் முறையில் சற்று போதாமைகள் இருப்பதாகவே உணர்கிறேன். வெறுமனே வரிகளுக்கான விளக்கங்களை மட்டுமே பெரிதாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஒருவேளை இது பாடலாசிரியருக்கான பதிவு என்றால் இப்படி எழுதுவது பொருந்தும். இவ்வளவு நீண்ட பதிவில் பாட்டிடைச் சிரிப்பைப் பற்றி விளக்கும் இடம் மட்டுமே எஸ்.பி.பிக்கானதாக உள்ளது.

      இன்னும் புதிய புதிய தகவல்களைச் சேர்த்து எழுத முயலுங்கள் உங்கள் வாழ்வில் நடந்த சின்னச் சின்ன நிகழ்வுகள் அப்படியான நிகழ்வுகளில் இதுபோன்ற பாடல்கள் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தின என்பதைப் பற்றியெல்லாம் எழுதுங்கள்.கட்டாயம் இதுபோன்ற பாடல்களை ஒரு பேருந்துப்பயணத்திலோ, ஒரு தேநீர்க்கடையிலோ இரவுநேர வேலையிலோ(overtime), இப்படியான ஏதோவொரு இடத்தில்தான் முதன்முறையாகக் கேட்டிருப்போம் அப்போது இந்தக்குரல் நமக்குள் ஏற்படுத்திய மெய்சிலிர்க்க வைக்கும் உணர்வுகளைப் பற்றிய நினைவுகளை எழுதுங்கள் அப்பொழுதுதான் படிப்பதற்கு சுவைமிக்கதாய் இருக்கும் எடுத்துக்காட்டிற்கு ராஜூ முருகனின் வட்டியும் முதலும்,நா.முத்துக்குமாரின் வேடிக்கை பார்ப்பவன்,அணிலாடும் முன்றில் ஆகிய தொடர்களைப்போல் உங்களுடைய இந்தப் பாடும்நிலாவைப் பற்றிய தொடரும் இருக்க வேண்டுமென்று அவா. பின்னாளில் நீங்கள் இவற்றைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டால் அனைத்துத் தரப்பினரும் படிக்கும் வகையில் சலிப்புத் தட்டாமல் இருக்க வேண்டும் அப்படிப் பார்த்துக் கொள்ளுங்கள்..

      தங்கள் எழுத்தைத் தொடர்ந்து படித்துச் சுவைப்பவனாகவும், தங்கள் எழுத்துத்திறன் மேம்படுவதில் அக்கறையுடையவனாகவும் மேற்கண்ட என் கருத்தை முன் வைக்கிறேன்
      பொறுத்தருள்க.

      நன்றி

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -