யமுனா வீடு – 14

தொடர் கவிதை - 14

- Advertisement -

அருணாவைத் தெரிந்திருக்கும்
உங்களுக்குத் தெரிந்த அருணாவை எனக்குத் தெரியாது
அருணா நம்மைப்போலத்தான் ஒரு பணியிலிருக்கிறாள்
அவளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில்
பரிந்துரை செய்யப்படாத பாடலுக்கு
நெளிந்து உருகி ஆடிக்கொண்டிருப்பாள்
நீங்கள் ஒரு பாடலை பரிந்துரைக்கலாம்
நெளிந்து உருகி ஆடிக்கொண்டிருப்பாள்
இசைக்கான வேகம் கொண்டவள்
அருணாவிற்கு ஒரு கதையிருக்கும்
உங்களுக்கு ஒரு கதையிருக்கும்
இருவருக்குமான கதைவெளியை கலைத்துப்போடும் இரவது
நீங்கள் அருணாவைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள்
அருணா உங்களையும் பார்ப்பாள்
இரவைக் கொண்டாடுபவரா நீங்கள்
இந்த இரவைத் தவறவிட்டாலும்
அருணாவைப் பார்க்கலாம்
யோசித்துப்பார்த்தாலும் அந்த நெளிந்த நடனமாக இருக்காது
நெளிந்து உருகி ஆடிக்கொண்டிருக்கும் அருணா, யமுனாவாகவோ! யாமினியாகவோ! தூரதேசத்தின் இரவில்
நெளிந்து உருகி ஆடிக்கொண்டிருப்பாள்.

பாண்டித்துரை
பாண்டித்துரைhttps://minkirukkal.com/author/pandiidurai/
பெயர் இராஜேந்திரன் நீதிப்பாண்டி. (அப்பா பெயர் இராஜேந்திரன்). சொந்த ஊர் அ.காளாப்பூர் (சிவகங்கை மாவட்டம்) வணிகவியல் இளங்கலை படித்த நான் தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத்துறையில் கட்டுமான பாதுகாப்பு பிரிவில் மேலாளராக பணிபுறிகிறேன். 2006 முதல் பாண்டித்துரை எனும் பெயரில் எழுதிவருகிறேன். அவநிதாவின் சொல் & மாயா மது உதயா எனும் இரண்டு கவிதை நூல்களை எழுதியிருக்கிறேன். குறும்படம் மீது உள்ள ஆர்வத்தில் நண்பர்களுடன் இணைந்து சில குறும்பட முயற்சிகள் செய்துள்ளேன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -