அழுக்குக்கண்ணாடி – 13

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

மனம் நமக்கு வேலைக்காரனாக செயல்பட வேண்டியிருக்க, மாறாக நம்மை அடிமைப்படுத்தி ஆண்டுகொண்டிருக்கிறது. இந்த உண்மை தெரிந்துகொண்டவுடன் பெரிய மாற்றம் நிகழப்போகிறதா என்று கேட்டால் இல்லை. காரணம் அதன் கையில் “ஆசை” என்னும் மகுடி இருக்கிறது. மனம் தொடர்ந்து ஆசைகளைத் தூண்டிக்கொண்டிருப்பதால் நமக்கு அவற்றை நிறைவேற்றுவதில் காலம் விரயமாகிறது. நாம் யார் என்பதை தெரிந்துகொள்ளாமலேயே ஆயுளும் முடிந்துவிடுகிறது.

ஒரு புதிய பொருள் வாங்க வேண்டுமென்றாலே அதைப் பற்றி நிறைய விசாரிப்போம். நிறைய பேரிடம் கேட்டு ஒரு திருப்திகரமான முடிவுக்கு வந்தபின்பே அதை வாங்குவோம். வீடு போன்ற மிகப் பெரிய முதலீடாக இருந்தால் கேட்கவே வேண்டாம், ஆயிரம் முறையாவது அது சரியான வீடுதானா என்பதை முடிந்தவரை சரி பார்த்துக்கொள்வோம். எங்கே நாம் ஏமாந்து விடுவோமோ, நமக்கு நஷ்டம் வந்து விடுமோ என்ற பயத்தில் மிகவும் கவனமாக இருப்போம். வெளி விஷயங்களில் இவ்வளவு அக்கறையை வைக்கும் மனிதன் தனக்குள்ளே அனுமதிக்கும் விஷயங்களில் மிக மிக அலட்சியமாக இருக்கிறான். அவன் பார்ப்பது, கேட்பது, பேசுவது என்று அனைத்தையும் துல்லியமாக பதிவு செய்துகொள்ளும் மனம், நேரம் வரும்போது அந்த விஷயங்களைப் பயன்படுத்தி மனிதனை எளிதாக அடிமையாக்குகிறது. உங்களுடைய password எதிரிக்குத் தெரிந்தால் என்ன செய்வானோ அதைத் தான் மனம் சிறப்பாக செய்கிறது.

ஒவ்வொரு நாளும் நமக்குப் பிடித்தவை, பிடிக்காதவை என்று அனைத்து ரகசியங்களையும் மனம் தெரிந்து வைத்துக்கொள்கிறது. உங்கள் விருப்பு வெறுப்புகள் தெரிந்த பிறகு, உங்களை அடிமைப்படுத்துவது என்பது கண்ணிமைக்கும் நேரம்தான். உங்களுக்கு விருப்பமானவற்றைப் பற்றிய சிந்தனைகளை தூண்டிவிட்டு, தன்மீது கவனம் படாமல் மிக சாமர்த்தியமாக திசை திருப்பிவிடுகிறது மனம். நம் சக்தி அனைத்தும் அந்த ஆசையை நாம் அடைய பாடுபடுவதிலேயே செலவாகிறது. ஒரு வேளை ஒரு ஆசை நிறைவேறினாலும் அதன் Data baseல் எக்கச்சக்க உள்ளீடுகள் இருப்பதால் மிக எளிதாக அடுத்த இலக்கை நிர்ணயித்து நம்மை அதன் பின்னால் ஓட விடும். அப்படி இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது நமக்கு பிடிக்காத விஷயங்கள். அவற்றை பற்றிய நினைவுகளைத் தூண்டிவிட்டு வருத்தமடையச் செய்யும். மனதின் இந்தப் பொறியிலிருந்து  சிக்காமல் தப்பிக்க வேண்டுமென்றால் முதலில் ஒரு உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். அது என்னவென்றால், நமக்குப் பிடித்தவையும் பிடிக்காதவையும் ஒன்றேதான். ஆச்சர்யமாக இருந்தாலும் அதுதான் உண்மை. நம் வாழ்க்கையிலேயே இதை கண்கூடாக காணலாம். ஒரு சமயம் நமக்க மிகவும் பிடித்த விஷயங்களையே மற்றொரு சமயத்தில் வெறுக்கிறோம் . பிடிக்காத ஒரு விஷயம் நமக்கு மிகவும் நெருக்கமாகிறது. அதை நாம் ஒன்றாக இணைத்துப் பார்க்கத் தவறுவதால்தான் தனித் தனி விஷயங்களாகத் தோன்றுகிறது. இந்த காரணத்தால் தான் மிக நெருங்கிய நண்பர்கள்கூட விரோதிகளாகிறார்கள், நிரந்தர பகையாளிகள் எதிர்பாராத நேரத்தில் நெருங்கிய நண்பர்களாகிறார்கள்.

உண்மையில் நம்மை எப்போதும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக, மனம் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சிதான் விருப்பும் வெறுப்பும். நம்மை ஒரு பக்க சார்பாக முடிவெடுக்க வைப்பதற்கும், நமக்குள்ளே ஒரு மோதலை உருவாக்குவதற்கும் இந்த இரட்டை நிலைகளையே ஆயுதமாக பயன்படுத்துகிறது. ஒரு எண்ணத்திற்கு எதிராக மற்றொன்றை திருப்பி விட்டு, உள்ளே எப்போதும் ஒரு மோதலை தொடர்ந்து உருவாக்கி வைத்திருப்பதால்தான் மனிதன் நிம்மதியற்று இருக்கிறான். வெளிப்பார்வைக்கு மிக அமைதியாக தோன்றுபவர்களுக்குக்கூட, உள்ளே மனம் எப்போதும் கொதி நிலையில் இருப்பதற்கு இந்த இரட்டை நிலையே காரணம். இதுவே மனதின் எரிபொருள்.

தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு வாகனத்தை நிறுத்த வேண்டுமென்றால் முதலில் அதற்கு எரிபொருள் ஊற்றாமல் இருந்தாலே போதும். மற்ற எத்தனை பாகங்கள் இருந்தாலும் எரிபொருள் இல்லாமல் எந்த வாகனமும் ஓட முடியாது. அதே போல் மனதிடமிருந்து விடுதலை பெற முதலில் அதன் எரிபொருளான “விருப்பு” “வெறுப்பு”களைக் குறைக்க வேண்டியது அவசியமாகிறது. கவனிக்கவும், இங்கே நான் “குறைக்க” என்று எழுதுவது, எண்ணங்களைக் குறைப்பதன் மூலம் நாம் உருவாக்கிக்கொள்ளும் ஒரு அமைதியான வாழ்க்கை முறையைப் பற்றியது தானே தவிர, மொத்தமாக எண்ணங்களே இல்லாத நிலையைப் பற்றியதல்ல. அது புத்தர் போன்ற யுக புருஷர்களின் ஞான நிலை. எரிபொருளே இல்லாத நின்று போன வாகனத்தின் நிலையில் இருக்கும், புத்தர் போன்ற உயர்ந்த நிலையில் உள்ளவர்களை உதாரணமாக எடுத்துக்கொள்வது, தினம் தினம் அன்றாடப் பிரச்சனைகளைச் சந்திக்கும் நம்மைப் போன்றவர்களுக்கு, எவ்விதத்திலும் நடைமுறை உபயோகமில்லையென்பதால் அவ்வாறான மேற்கோள் காட்டுவதைத் தவிர்க்கிறேன்.

எண்ணங்களைக் குறைத்துத் தான் ஆகவேண்டுமா? இல்லையென்றால் என்னாகிவிடும் என்று தோன்றலாம். எண்ணத்திற்கு உருவம் இல்லாததால் அதனால் வரும் ஆபத்துகளைக் கணக்கிட முடியாமல் போகிறது.  ஒரு உதாரணத்தின் மூலம் இதைப் பார்க்கலாம். ஒவ்வொரு தனி நபரின் உணவுத் தேவையைத் தீர்ப்பதற்கும் ஒரு பிரத்யேகமான உணவு இயந்திரம் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அது விடாமல் வருடக்கணக்காக 24 மணிநேரமும் உணவுகளைத் தயாரித்துத் தள்ளினால் எப்படி இருக்கும்? தேவைக்கதிகமான அந்த உணவுகள் வீணாவதைத் தவிர்த்து, எப்பேர்ப்பட்ட பிரம்மாண்டமான குப்பைத் தொட்டியாக உலகம் மாறும் என்பதை யோசித்துப் பாருங்கள். அப்படித்தான் இருக்கிறது நம் எல்லோருடைய உள் உலகமும். எண்ணங்களே அந்த உணவு. மனமே அதை தயாரிக்கும் இயந்திரம். உணவு சத்தானதாக, ருசியானதாக, அதே சமயம் அளவானதாக இருப்பது அவசியமல்லவா. உணவு எல்லை மீறினால் எப்படி உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகுமோ அதே போல் தான், கட்டுக்கடங்காத எண்ண உற்பத்தியால் மன ஆரோக்கியம் கெட்டுப்போகிறது. நம்மைக் கேட்காமலே, நம் அனுமதியோ நமது விழிப்புணர்வோ இல்லாமல் ஆயிரம் வகையான கேடுகளைத் தரும் junk food factoryயாக மனம் இருப்பதை எவ்வாறு அனுமதிப்பது?

– தொடரும்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -