அழுக்குக்கண்ணாடி – 16

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

இந்த தொடரின் அனைத்துப் பகுதிகளையும் படிக்க இங்கே சொடுக்கவும்

மனம் நலமாக வளமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை கடந்த 15 வாரங்களாக பார்த்தோம். இந்த நிறைவுப் பகுதியோடு அழுக்குக்கண்ணாடி பகுதி – 1 ஐ முடித்துக்கொள்கிறேன். மீண்டும் சிறிய இடைவேளைக்குப் பிறகு பாகம் இரண்டில் சந்திப்போம். நன்றி.

மனதை நம் வசப்படுத்துவதால் ஏதாவது பணம் கிடைக்குமா? தொழில் சிறக்குமா? நினைத்தது நடக்குமா? வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா? இவை அனைத்திற்கும் பதில், அதற்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்பதுதான். பிறகு எதற்கு தியானமோ, வழிபாடோ செய்து நேரத்தை வீணடிக்க வேண்டும், என்ற ஒரு சிந்தனை எளிதாக அனைவருக்குள்ளும் உதிக்கும். பணத்தை, பொருளை, புகழை, வெற்றியை தருவதற்கான உத்தரவாதமில்லாத ஒரு செயல் உபயோகமில்லாத செயல்தானே. தர்க்கப் படி இது சரியென்று தோன்றினாலும் உண்மையென்னவென்றால் இவையனைத்தையும் விட விலைமதிப்பில்லாத, பணம் கொடுத்தால்கூட எங்கும் கிடைக்காத, மிக அரிதான ஒரு விஷயத்தை நிச்சயம் அடையப்பெறலாம். அதன் பெயர் ஆனந்தம். இதை சந்தோஷம் என்ற பொருளில் எடுத்துக்கொண்டால் தவறான புரிதல்தான் ஏற்படும். சந்தோஷம் அல்லது மகிழ்ச்சி என்பது எதையாவது சார்ந்திருப்பதால் உண்டாவது. நமக்குப் பிடித்தது கிடைத்தால், நினைத்தது நடந்தால் மட்டுமே அது நிலைக்கும். மாறாக நடந்தால் உடனே துக்கம் வந்துவிடும். 

ஆனால் ஆனந்தம் என்பது வெளியே எதையும் சாராதது. வெளி விஷயத்தால் உண்டாவதல்ல. பரபரப்பாக எப்போதும் எதன் பின்னாலாவது மனதை அலையவிட்டு, நிம்மதியில்லாமல் இருப்பதற்கு நேர்மாறானது. வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் நிம்மதியாக இருப்பது. உலகில் பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை என்பதை கண்கூடாக கண்டபிறகும், மனம் தொடர்ந்து நம்மை ஏமாற்றுவது மிகப் பெரும் ஆச்சர்யம்தான். அப்படியென்றால் நாம் எந்த முயற்சியும் செய்யக்கூடாதா? வாழ்வில் முன்னேற நினைப்பது தவறா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை. எந்த முயற்சியும், ஆசையும் இன்றி இந்த உலகம் இயங்காது. ஆனால் அதே முயற்சிகளை முறையாக பழக்கப்படுத்தப்பட்ட மனதோடு அணுகும்போது, அதன் பலன்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் பெரிதாக பாதிக்கப்படாமல் இருக்கலாம். ஜெயித்தால் வானுக்கும் பூமிக்கும் குதிக்காமல், மற்றவர்களை கீழாகப் பார்த்து அவமானப்படுத்தாமல், தோற்றாலும் கூனிக்குறுகி, அவமானப்பட்டது போல் துடிக்காமல் நிதானமாக இருக்கலாம். மனம் எப்போதும் ஊசலாடாமல் இருக்கும் இத்தகைய நிலையை, ஆழ்ந்த இறை நம்பிக்கை உடையவர்கள் மிக எளிதாக அடைகிறார்கள். அதற்குக் காரணம் தன் வெற்றிக்குத் தான் காரணமில்லை என்று நினைப்பதுதான். தோற்றாலும் அது இறைவனின் விருப்பம் என்று அதே அமைதியோடு இருக்கிறார்கள். வெற்றியோ தோல்வியோ அவர்களது EGOவை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. கடவுள் என்கிற கோட்பாடு அவர்கள் மனதை சமநிலையில் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. எப்போதும் நிம்மதியாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் முகத்தைப் பாருங்கள். அவருக்குள்ளிருக்கும் நிதானம் முகத்தில் தெளிவாகத் தெரியும். அத்தகைய ஆழ்ந்த இறை நம்பிக்கையுடையவர்கள் எது நடந்தாலும் இறைவனின் செயல் என்றே நினைத்து வாழ்க்கையை நடத்துவார்கள். கவனிக்கவும் இங்கே ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்கள் என்றே குறிப்பிடுகிறேன். மிக மேலோட்டமாக வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வந்துவிட்டு, ஏதாவது பிரச்சனை என்றவுடன், “கடவுளே நீ என்ன கல்லா?” என்ற வசனம் பேசுபவர்கள் இதில் சேர்த்தி இல்லை.

இவர்களைப் போன்றே கடவுள் மறுப்பாளர்களின் நிலையும் மிகக் கடினம்தான். வெற்றி தோல்வி அனைத்தையும் தன் மீதே போட்டுக்கொள்வதால், வெற்றி அராஜகமாகவும், தோல்வி அவமானமாகவும் நேரடியாக மனதைத் தாக்கும். தியானம் போன்ற மனப் பயிற்சிகளை பயின்றவர்கள் மட்டுமே தப்பிக்க முடியும். இல்லாவிட்டால் முறைப்படுத்தப்படாத மனம் தன் இஷடம்போல் இழுத்துச்சென்று அதலபாதாளத்தில் தள்ளிவிட்டு விடும். வாழ்வில் வெற்றி தோல்விகள் மாறி மாறி வரும் என்பதை நெறிப்படுத்தப்பட்ட மனதால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். இல்லையென்றால் வெற்றி பெரும்போது தன்னுடைய திறமை என்றும்,  தோல்வியடையும் போது பிறர்தான் காரணம் என்றும் கைகாட்டி தப்பிக்கப் பார்க்கும் மனம். அல்லது இரண்டையுமே தன் EGOவில் ஏற்றிக்கொண்டு நிதானத்தை இழக்கும்.

கொண்டாட்டமான நேரங்களில் நம்மைச் சுற்றி நிறைய மனிதர்கள் இருப்பார்கள், ஆனால் வாழ்வு எப்போதும் மகிழ்ச்சியாகவே செல்வதில்லையே. தோல்வியின் போது தனித்துவிடப்படும் நேரங்களும் சம்பவிக்கத் தான் செய்கிறது. அப்போது துணைக்கு யாரைச் சென்று தேடுவீர்கள்? மனிதன் மீண்டு வர அவனுக்கு அவனைத் தவிர வேறு யாரும் உண்மையில் துணை இல்லை. ஒருவேளை இருந்தாலும் நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. ஆனால் மனமோ, எதையாவது பற்றிக்கொள்ளத் துடிக்கும். யார் யாரையோ சார்ந்து, அல்லது போதை போன்ற விஷயங்களில் மூழ்கி பரிதாபமான நிலையில் தன்னைத்தானே வருத்திக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையில் தான் இறை நம்பிக்கையுடையவர்கள் இவற்றில் வீழாமல் தப்பிக்கிறார்கள். புயல் ஓயும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இங்கே மனதின் நம்பிக்கைதான் முக்கியமே தவிர எந்தக் கடவுள், எந்த மதம் என்பதெல்லாம் அவசியமே இல்லை. நேர்மாறாக வெற்றிகரமான நேரங்களில், மனம் யாரையும் மதிக்காது. அளவுக்கதிகமான சுயமதிப்பீட்டால் மிகுந்த திமிரோடு பிறரை காயப்படுத்தும். இதுதான் நிரந்தரம் என்ற போலியான ஒரு உணர்வை அளவுக்கதிகமாகத் தூண்டி விடும். எண்ணங்கள் கட்டுக்கடங்காமல் கிளர்ந்தெழும். உலகையே வென்றதுபோன்ற மாயத்தோற்றம் ஏற்படும். ஆனால் தியானம் செய்பவர்களோ இதுவும் கடந்துபோகுமென்ற பக்குவத்தோடு வெற்றியை மென்மையாக அணுகுவார்கள்.

வாழ்வில் எத்தகைய சூழ்நிலையிலும் தடுமாறாமல், நிதானமாக, மென்மையாக கடந்துசெல்வதற்கு மனதின் எண்ண ஓட்டங்கள் அளவாக இருக்க வேண்டும். அதை இறைவழிபாட்டிலோ அல்லது தியானத்திலோ தவிர வேறு எந்த வழியாலும் அடையமுடியாது. எதை அடைந்தாலும் அதையும் சேர்த்து இங்கேயே தொலைத்துவிட்டுத் தான் செல்லப்போகிறோம். அதனால் இலக்கு முக்கியமில்லை, வழிதான் முக்கியம். எதை அடையப்போகிறோம் என்பதைவிட, எப்படி அடையப்போகிறோம் என்பதிலேதான் வாழ்வின் ரகசியம் இருக்கிறது. அழுக்குக்கண்ணாடியை தினமும் முடிந்த அளவு சுத்தம் செய்வோம். நன்றி நண்பர்களே.

பாகம் – 1  நிறைவு.

Previous article
Next article
ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -