ஊழ் (17)

தொடர்கதை

- Advertisement -

இத்தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…!

“வேற ஏதாவது வழில முயற்சி பண்ணி பாக்கலாமா சார்” சீனு மாமா வக்கீல் பரமசிவத்திடம் வினவினார்.

“ம்ம்ம் நானும் அதைத்தான் சொல்லலாம்ன்னு நினைச்சேன்.” என்ற பரமசிவம் தொடர்ந்து. “அவங்க வக்கீல் ஸ்டீபன்கிட்ட நான் பேசுறேன். நம்ம எம்.எல்.ஏ. சபாபதிய வச்சு ஒரு பஞ்சாயத்து பண்ணிப் பார்ப்போம். அந்த பொண்ணோட அண்ணன் கூட அந்தக் கட்சி தானாம்ல அவர் சொன்னா கேட்க வாய்ப்பிருக்கு. என்ன சொல்றீங்க” என்றார்.

“அவங்க கட்சி ஆளா இருக்கதால அவங்களுக்கு சாதகமாத்தானே பேசுவாரு .” என்றார் சீனு மாமா.

குறுக்கிட்ட அப்பா. “என்ன அவங்க கட்சி ஆளு. நாமளும் அந்தக் கட்சிக்குத் தானே ஓட்டு போட்டோம். சபாபதிட்ட நான் பேசுறேன். அவரை வச்சுப்பேசுனா சரியாத்தான் வரும். அந்தப்பய ராஜசேகரும் அவரு சொன்னால் கேப்பான்.” என்றார்.

“கரெக்ட்டா சொன்னீங்க. சபாபதிக்காக நானே நாலு கேஸு பாக்குறேன். நானும் அவர்ட்ட பேசுறேன். நீங்களும் பேசுங்க. அவர் தோப்புலகூட வச்சு பஞ்சாயத்து பேசி முடிச்சிரலாம். ஒன்னும் பயப்புட வேண்டாம்.” சொல்லிவிட்டு பரமசிவம் அமுதனைப் பார்த்தார்.

அவன் மனதிற்குள் ‘எனக்குத் தெரிந்த ஒரே வழி மதுவின் கால்களில் விழுந்து மன்றாடி அவளை சம்மதிக்க வைப்பதுதான். இவர்கள் பேசுவதெல்லாம் மதுவின் குடும்பத்தை சரிக்கட்டவே. அவர்கள் சம்மதித்தாலும் மது சம்மதிப்பாளா?’ என்ற கேள்வி தான் எழுந்தது. இதற்குமுன் அவன் எந்த ஒரு பஞ்சயாத்தையும் வேடிக்கைகூடப் பார்த்தவன் இல்லை. ‘அங்கு என்ன செய்வார்கள்? நாட்டாமை மாதிரி சபாபதி ‘தம்பி நீ செஞ்சது எல்லாம் தப்பு அந்த பொண்ணுட்ட மன்னிப்பு கேளு…..’, ‘ஏன்மா அந்தபையன் மன்னிப்பு கேட்டுட்டான் இனி அந்தப் பையன் தப்பு பண்ண மாட்டான். ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோசமா இருங்க’ என்று பஞ்சாயத்தை முடித்து வைத்துவிடுவாரா? அவர் அப்படி சொல்லும் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு மது உடனே என்னுடன் வந்துவிடுவாளா?’ கேள்விகள் அவன் மனதிற்குள் அலையலையாக எழுந்துகொண்டே இருந்தன.

“என்னப்பா எதுவும் பேச மாட்ர?” என்றார் பரமசிவம்.

“ஓகே சார்…” என்று அவர்கள் செய்யப்போவதற்கு அவன் சம்மதத்தைத் தெரிவித்தான். அவன் சம்மதம் என்பது அங்கு ஒரு சடங்கு போலத்தான். அவனைமீறி என்ன நடக்கிறது என்றே தெரியாமல்தான் அவனைச் சுற்றி ஏதேதோ நடந்துகொண்டே இருக்கின்றன. இத்தனையும் முடிந்து அவனுடன் மது வரச் சம்மதித்தாலே அவனுக்குப் போதும் என்றிருந்தது. அவன் பக்கம் இருக்கும் அனைவருமே அவன் நியாயத்தைப் புரிந்துகொள்கிறார்கள். அவனுக்காக பரிந்து பேசுகிறார்கள். ஆனால் மதுவின் வீட்டில் அவனைப் புரிந்துகொள்ள ஒரு ஆள் கூட இல்லை. மதுவைத் தவிர வேறு யாரும் அவனை அங்கு புரிந்துகொள்ள முடியாது. அவளிடம் எப்படியாவது பேசி அவன் பக்கத்து ஞாயத்தைப் புரியவைத்துவிட வேண்டும் என்று அவனுக்குள்ளே அவனை தயார்படுத்திக்கொண்டிருந்தான். அவனுக்கு வேண்டியதெல்லாம் அவளிடம் பேச ஒரு சந்தர்ப்பம் மட்டுமே.

ஞ்சாயத்துக்கு நாள் குறிக்கப்படுவதற்காக காத்துக்கொண்டிருந்தார்கள். ஒருநாள் அமுதனின் அம்மா விம்மிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. “இப்படியா பன்னுவாளுக? இவளுக நல்லா இருப்பாளுகளா? நாசமா போயிருவாளுக?” என்று யாரையோ வசை மொழியில் நனைத்துக்கொண்டிருந்தாள்.

அவன் அக்காவிடம் “என்னக்கா? திடீர்ன்னு இப்ப யார அம்மா வையுது?” என்று வினவினான் அமுதன்.

“உன் மாமியாரைத்தான்” என்றாள் அவள்.

மதுவின் அம்மாவை இப்போது எதற்கு திட்டவேண்டும்? புரியாமல் “ஏன் க்கா?” என்றான்.

“என்னத்த சொல்றது. மூக்காயி அக்கா அது மகளைக் கூட்டிக்கிட்டு பிரசவ ஆஸ்பத்திரிக்கு செக்கப்புக்கு போச்சாம். அங்க உன் மாமியாரையும் பொண்டாட்டியும் பாத்துச்சாம்.” அது வந்து இங்க சொன்னதுல இருந்து இது பெனாத்திக்கிட்டு கெடக்கு.

‘மதுவிற்கு மகப்பேறு மருத்துவனையில் என்ன வேலை?’ யோசித்துவிட்டு “யாருக்காவது குழந்தை பிறந்திருக்கும் பார்க்க போயிருப்பாங்க?” என்றான்

“ம்ம்ம்ம்…. பிள்ளை பிறந்தத பார்க்க போறவங்க என்ன டாக்டர் ரூமுகுள்ளயா போவாங்க? அங்குனகுள்ள இருந்த நர்ஸ் கிட்ட மூக்காயி கேட்டுச்சாம். கலைச்சுட்டு போறாங்கன்னு சொல்லிருக்கு.” அவன் அக்காவின் கேள்வியில் ஒரு அதீத கோபமும் ஆதங்கமும் இருந்தது. கண்கள் கலங்கி இருந்தன.

அதற்கு மேல் அக்காவிடம் கேட்க அவனுக்கு மனமில்லை. புரிந்துவிட்டதை அவள் வாயால் சொல்ல வைப்பதில் என்ன பலன் இருக்கப்போகிறது என்று நினைத்தான். அடுப்படிக்குள் எட்டிப் பார்த்தான் அவன் அம்மா ஒரு ஓரத்தில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள். அவள் அருகே சென்று அமர்ந்து அவள் மடியில் படுத்துக்கொண்டான். அவள் முந்தானையால் அவன் கண்ணீரைத் துடைத்துவிட்டாள். இத்தனை நாளுக்குப்பின் அவள் ஸ்பரிசம் கிடைத்ததே அவனுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.

ரியாக பத்து நாள்கள் கழிந்து பஞ்சாயத்துக்கான நேரம் முடிவு செய்யப்பட்டது. அமுதன் குடும்பத்தாரோடு அவர்கள் உறவினர்கள் ஒரு நாற்பது கிளம்பி வந்தார்கள். சபாபதியின் தோப்பை நெருங்கிக்கொண்டிருந்தார்கள்.

அங்கே அவர்கள் வருமுன்னே நாலைந்து லாரிகள் சபாபதியின் கட்சிக் கொடியை தாங்கி நின்றுகொண்டிருந்தன.

“பாத்தியா ஒரு பஞ்சாயத்துக்கு எம்புட்டு பேரை கூட்டிட்டு வந்திருக்கான்னு. இந்த ராஜாசெகரு பொல்லா பயயா. பூராம் அவம்புட்டு லாரி தான் நிக்குது.” என்றார் மச்சக்காளை பின் சீட்டில் அமர்ந்துகொண்டு.

**************************************

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்….

**************************************

அடுத்த பாகத்தை பார்க்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…! – 18

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -