ஊழ்(6)

தொடர்கதை

- Advertisement -

இத்தொடரின் எல்லா பாகங்களையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…!

கத்தீப் இரயில் நிலையத்தில் அமுதன் அவன் நண்பர்களுடன் இரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் சிங்கப்பூரில் இரயில் நிலையங்கள் நிரம்பி வழிந்துகொண்டு தானிருக்கும். அதுவும் மாதத்தின் முதல் ஞாயிறு சொல்லவே வேண்டாம். ஐந்து நிமிடங்களுக்கு ஒரு இரயில் வந்துகொண்டே இருந்தாலும் அவற்றை நிறைக்க பயணிகளும் வந்துகொண்டே இருப்பார்கள்.

அமுதனின் கண்கள் சற்று தூரத்தில் நின்றிருந்த ஆண்ட்ரியாவை அடிக்கடி சந்தித்துக்கொண்டே இருந்தன. அன்று தான் அவளை அவன் முதல் முதலில் பார்த்தான். அவள் அவனைப் பார்க்காததுபோல் அங்கே இங்கே கண்களை அலையவிட்டு, நக்கலாக அவள் தோழிகளிடம் ஏதோ சொல்லிச் சிரித்தாள். அவள் உதடுகளில் பூசியிருந்த அடர் சிவப்புச்சாயம் அவளை மேலும் கவர்ச்சியாக்கியது. ஒற்றை நாடி கொண்ட நீள்வட்ட முகம். ஊசியாக இல்லாவிட்டாலும் அவளுக்கு சப்பை மூக்கும் இல்லை. கயல்விழியோ காந்தக் கண்ணழகியோ தெரியவில்லை அந்தக் கண்களை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் அது அமுதனுக்குள் ஊடுருவி அடிவயிற்றில் வருடி விடுவது போல் அவன் உடல் சிலிர்த்தது. ஒல்லியான தேகம் அதை ஒட்டிக் கடித்துகொண்டிருந்தது டீசர்ட். டீசர்ட்டில் ஒரு பட்டாம்பூச்சி குறுக்குவாட்டில் பறந்துகொண்டிருந்தது. அவ்வப்போது அவள் குலுங்கிச் சிரிக்கும்போது அந்தப் பட்டாம்பூச்சி மேலும் சிறகடித்தது. நீலநிற ஜீன்ஸ் கால்களாக மாறியிருந்தது. காலுக்கு அடியில் இருந்த ஹீல்ஸ் நாலு இஞ்சையும் சேர்த்து அவள் எப்படியும் ஐந்தரை அடி இருப்பாள். 

அமுதனின் நண்பர்களான ரகுவும் யுவனும்,

” டேய்…. உன்னைத் தான்டா பாக்குறா” என்று சீண்டினார்கள். 

அனைவரும் அடுத்து வந்த இரயிலில் ஏறினார்கள். அப்படி என்னதான் அந்தப் பெண்கள் பேசிக்கொண்டார்களோ தெரியவில்லை. இரயிலே குலுங்குவது போல் சிரித்து சிரித்து மகிழ்ந்தார்கள். ஒவ்வொரு முறையும் சிரித்துவிட்டு ஆண்ட்ரியா அமுதனை ஓரப்பார்வையில் பார்த்து இரசித்தாள். அவளின் பார்வை அவன் நுரையீரல் வீங்கி வீங்கி வற்றுவதுபோல் பெருமூச்சு விட்டுக்கொண்டே இருந்தான். 

ஆர்சர்டு இரயில் நிலையம் வந்தவுடன் ஆண்ட்ரியா தோழிகளோடு இறங்கினாள். ரகு அமுதனைப்ப் பிடித்து இரயிலுக்கு வெளியே தள்ளினான். 

“டேய் விவோசிட்டி தானேடா போவோம்ன்னு சொன்ன. இங்க ஏன்டா தள்ற?” 

“விவோசிட்டிக்கு இன்னொரு நாள் போவோம். இன்னைக்கு ஆர்சர்டு தான் வேலை… வா…”

அவர்கள் மூவரும் யார் யாருக்கு யார் என முடிவு செய்துகொண்டே அந்தப் பெண்களைப் பின் தொடர்ந்தார்கள். 

“டேய்… அவ உன்னையே தான்டா பார்த்துக்கிட்டு இருக்கா… இன்னைக்கு எப்படியாவது அவகிட்ட நம்பர் வாங்கிடு” ரகு அமுதனைத் தூண்டிக்கொண்டே வந்தான். 

லக்கி பிளாசா கும்பல்களால் நிரம்பி வழிந்தது. அங்கிருப்பதில் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் பெண்கள் தான். அதில் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். நாலாவது மாடியில் ஒரு பெரிய வரிசை நின்றது. ஆண்ட்ரியாவும் அவள் தோழிகளும் அந்த வரிசையில் சேர்ந்துகொண்டார்கள். அது பிலிப்பைன்ஸ் நாட்டுக்குப் பணம் அனுப்பும் ஒரு நிறுவனம். அந்த வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் அதற்காகத்தான் நிற்கிறார்கள். ஆண்ட்ரியாவின் கண்கள் மட்டும் அடிக்கடி வந்து அமுதனின் கண்களை சந்தித்துச் சென்றன. ஒவ்வொரு முறை அவைகள் சந்தித்த போதும் அவள் தோழிகளுக்குள் ஏதோ சலசலப்பும் சிரிப்பும் ஏற்பட்டது. 

“டேய் போடா… போடா… நம்பர் வாங்கிட்டு வா…” யுவனும் ரகுவும் பிடித்துத் தள்ளினார்கள். 

அவன் அவளருகில் சென்றான் அவள் ‘ஐயையோ வர்றான்…’ என்பது போல் பாவனை செய்துவிட்டு வேறுபக்கம் திரும்பிக்கொண்டாள். 

“ஹலோ…” 

அவள் திரும்பவேயில்லை. கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது. அந்த அவமானத்தை மறைக்க ஒருமுறை முகத்தைச் சொரிந்துவிட்டு பின்னால் இருக்கும் நண்பர்களைத் திரும்பிப் பார்த்தான். ‘போடா போய் பேசு… பேசு…’ என்று செய்கை காண்பித்தார்கள்.

அமுதனையும் இதுவரை இப்படி எந்தப் பெண்ணும் பார்த்ததும் இல்லை அவனும் மயங்கியதும் இல்லை. அவளின் சின்ன இதழ்களும் காந்தப் பார்வையும் அழகிய முகமும் அதைவிட அழகான அவள் வடிவமும் அவளுக்காக அவமானப்பட அவனைத் தயார்படுத்தியது. 

அவள் பின்னால் இருந்தவள் என்ன என்றாள். அமுதன் ஆண்ட்ரியாவை கை காண்பித்து அவளுடன் பேச வேண்டும் என்றான். ஆண்ட்ரியா வேகமாக திரும்பி இதுவரை அவள் அவனை ஒருமுறை கூட பார்க்காதவள் போல் 

“வாட்… வாட் யூ வான்ட்?” என்றாள். 

“யுவர் நேம்… அண்ட் யுவர் மொபைல் நம்பர்” என்றான். 

அவள் “நோ… நோ… ப்ளீஸ் கோ…” என்றாள். 

அவள் சொன்ன ‘நோ’க்களில் உண்மை இல்லை. அவனால் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. இப்போது அவள் பணம் செலுத்தும் முறை வந்தது ஒரு அட்டையில் எழுதி பணத்தோடு கண்ணாடிக் கூண்டிற்குள் அமர்ந்திருப்பவரிடம் நீட்டினாள். அவன் அங்கிருந்த ஒரு துண்டுக் காகிதத்தில் அவன் அலைபேசி எண்ணை எழுதி அவளிடம் நீட்டினான். டக் என அதை வாங்கிக்கொண்டு “ப்ளீஸ் கோ…” என்றாள். 

அவன் அவளிடம் ஒரு புன்னகையை வீசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

“சூப்பர் டா கலக்கிட்ட…” தோளில் குத்தினான் ரகு.

அமுதன் வெட்கத்தோடு புன்னகைத்துக்கொண்டே ஒரு பெருமிதப் பார்வையை வீசினான்.

யுவன் “டேய் அவ பேசினா அந்த ரெட் டீ-சர்ட் நம்பர எனக்கு வாங்கி குடுத்துரு” என்றான்.

மூன்று பேரும் சிரித்துக்கொண்டே ஒரு கொண்டாட்ட மனநிலையோடு லக்கிப் பிளாசாவில் இருந்து வெளியேறினர்.. 

***************************************
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்….

***************************************

அடுத்த பாகத்தை பார்க்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்

ஊழ்…! – 7

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -