ஒரு நாள் கூத்து

சிறுகதை

- Advertisement -

ட்டு மாத காலமாக எங்கோ ஊருக்குப் போயிருந்த புன்னகை இன்று என் தாயின் முகத்தில் மீண்டும் பிறந்து தவழ்ந்தது.  பயணக்களைப்போ என்னவோ எப்போதும் போல் இயல்பாக இல்லாமல் இறுக்கத்தோடு அந்தப் புன்னகை இருந்தது. வருவோரை எல்லாம் “வாங்க… வாங்க…” என்று ஓடி ஓடி வரவேற்றுக் கொண்டிருந்தாள் அம்மா.

“பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுடா…” நூற்றி இருபதாவது முறையாகச் சொல்லிவிட்டு என் முதுகில் தட்டினார் அப்பா. அக்கா மாமா சித்தி பெரியப்பா குழந்தைகள் என வீடு நிரம்பிக்கொண்டிருந்தது. ஏழு மாதத்திற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த என் திருமணத்தை இப்போது எப்படியும் நடத்திவிட வேண்டும் என்பதே அவர்கள் அனைவரின் அவா.

ணினிப் பொறியியல், பணம் கொழிக்கும் துறை.  எல்லோருக்கும் கொழிக்கவில்லை என்றாலும் எனக்குக் கொழித்தது. படிக்கும்போதே பெரிய நிறுவனம் ஒன்று வாரி அணைத்துக்கொண்டது. ஆறு ஆண்டுகளில் சிங்கப்பூர் அனுப்பியது. என் நிலை உயர உயர எத்தனையோ பேர் என் மாமனார் ஆகிவிடும் ஆவலில் எங்கள் வீட்டுக்கதவைத் தட்டினர். யாருக்கும் திறக்காமல் நாலு வீடு தள்ளி இருக்கும் ரங்கராஜன் மாமா வந்து தட்டட்டுமென்று காத்துக்கொண்டிருந்தேன்.

வளைத்தால் ஒடிந்துவிடுவது போல் இருந்த அருள்மொழி வளர வளரப் பேரழகியாகியிருந்தாள். கல்லூரிக்கு வாரம் ஒருமுறை விடுமுறையிருந்தாலும், விடுதி எங்களை மாதம் ஒருமுறை தான் வீட்டிற்கு அனுமதித்தது. அப்படி வரும் காலங்களில் ஆறரை மணிக்கு மேல் அரைவெளிச்சத்தில் பூக்கும் அந்தப் பூவை ரசிப்பதற்காகவே கர்லா கட்டையையும் ‘தம்புள்ஸ்’களையும் வாங்கி மொட்டை மாடியில் போட்டிருந்தேன். புத்தகத்துக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு இங்கும் அங்கும் உலாவிக்கொண்டே இருப்பாள். திடீர் திடீரென கண்களினால் என் இதயத்திற்குள்  மின்னலைப் பாய்ச்சுவாள். அந்த ஒன்றிரண்டு தருணங்களுக்காகவே மூன்று மணி நேரத்திற்கு மேல் மொட்டை மாடியில் கர்லா கட்டையைச் சுற்றிக்கொண்டிருப்பேன். கண்களுக்குள் தேங்கிக்கிடந்த காதல் வாய்க்கு மட்டும் வரவே இல்லை.

னக்காய் வரன் பார்த்த தரகரிடம் தனியே பேசினேன் ரங்கராஜன் மாமா வீட்டுக்கதவை அவர் மூலம் தட்டினேன். கதவு திறந்தது அருள்மொழியின் அழகிய புகைப்படம் எங்கள் வீட்டு டீப்பாயில் தவழ்ந்தது. முத்துப் பல்வரிசையும் ரோஜா இதழ்களும் ஆப்பிள் கன்னங்களும் நீண்ட கழுத்தும் சாண்டில்யனின் மொத்தக் கதாநாயகிகளின் ஒற்றை உருவமாய் அவளைக் காட்டியது. 

“பொண்ணு அஞ்சே முக்கால் பையன் ஆறடி… சூப்பர் ஜோடி…” தரகர் பதினோராவது பொருத்தத்தையும் எடுத்து அளந்துவிட்டார். 

“பொண்ணு நல்ல பொண்ணு தான்… அந்த ரங்கராஜன் கொஞ்சம் சிடு சிடு… அவர் ஒத்துக்குவாரா?”

“ஐயோ அந்தப் பொம்பள அதை விட…” அப்பாவும் அம்மாவும் என் காதலை நொறுக்கத்தொடங்கினார்கள். வேறுவழியின்றி நானே களத்தில் இறங்கி ‘கட்டினால் இவளைத் தான் கட்டுவேன்’ என்று கொக்காய் நின்றேன்.

அப்படி இப்படி என்று எப்படியோ ஒருவழியாக இருவீட்டார் சம்மதத்தோடு வைகாசித் திங்கள் பதினோராம் நாள் திருமணம் நிச்சயக்கப்பட்டது. அதற்கு நாலு மாதங்கள் இருந்ததால் மீண்டும் சிங்கப்பூர் பறந்தேன். 

“நிச்சியம் தான் முடிஞ்சிருச்சே… இனி பேசலாம் ஒன்னும் தப்பில்லை..”  தயங்கி தயங்கித் தொடங்கிய எங்கள் அலைபேசி உரையாடல்கள் சில நாட்களிலேயே பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் அளவிற்கு வளர்ந்தது. அதிலும் அவள் பெயரைப்போல தமிழ் பெயராகத் தான் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். மூன்றாவது மாத இறுதியில் “சொல்லு…. நீ சொல்லு…. நீங்க சொல்லுங்க…..”  அத்தனையும் தீர்ந்து அடுத்த வாக்கியம் கிடைக்காமல் அல்லாடினோம்.

பரீஷ், வாசன், ஜோசப் சிங்கப்பூரில் எனக்கு கிடைத்த நெருங்கிய நண்பர்கள். நாங்கள் நால்வரும் தெம்பனிசில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டறை கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். நாங்கள் நால்வரும் நாலுமாதிரி என்றாலும் குடி என்று வந்துவிட்டால் அவர்கள் மூவரும் ஒரே மாதிரி. அவர்கள் குடிப்பதில் எனக்கு இருந்த இரண்டே பிரச்சனைகளில் ஒன்று ஜோசப்பின் முறிந்துபோன காதல் கதை இன்னொன்று மூன்று ரவுண்ட் முடிந்தவுடன் மூவரும் சேர்ந்து என்னைக் குடிக்கச் சொல்லி கொடுக்கும் இம்சை. இத்தனை நாள் இவர்களிடமிருந்து எப்படியோ தப்பிவிட்டேன். 

“இனிமேல் உன் வீட்டுக்கு விருந்தாளியா தான் வர முடியும்…” 

“எங்களை எல்லாம் கண்டுக்க மாட்ட…””

பேச்சுலர் பார்ட்டியை ஃபேர்வெல் ஆக்கிக்கொண்டிருந்தார்கள். சிஸில் ஸ்ட்ரீட்டில் இரகசிய கடற்கன்னி என்ற பொருள்படும் படியிருந்த பப்புக்குள் நுழைந்தோம். காண்டாமிருகத்திற்கு கறுப்புச்சட்டை போட்டதுபோல் இருந்த இரண்டு குண்டாந்தடியர்கள் வரவேற்று உள்ளே அனுப்பினர். வெளிச்சம் என்பது மிக மெதுவாக ஒரு மூலையில் இருந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. யாரையும் ஒரு அரைமணிநேரம் உற்றுப்பார்த்தால் தான் அடையாளம் காணமுடியும். ஒரு கறுப்பு பெண்ணுருவம் எங்களது இருக்கைக்கு அழைத்துச் சென்றது. நெஞ்சளவுள்ள மேசை இடுப்பளவுள்ள சுற்றும்படியான இருக்கை. அமர்ந்தவுடன் ஒரு சுற்று சுற்றினேன். அந்த கறுப்புருவம் சிறிய கண்ணாடிக் கிண்ணத்தில் வறுத்த நிலக்கடலையையும் முறுக்கு போன்ற நொறுக்குத்தீனியையும் மேசை மீது வைத்துவிட்டு மார்பு என்மீது படும்படி நின்று “ஆர்டர் ப்ளீஸ்” என்றது. 

மெனுவைப் பார்த்த வாசன் “ஸ்பார்க்கிள் டாங்கி சில்வர் டக்கீலா, டூ ப்ளேட் ஸ்ரீரச்சா சிக்கன் விங்ஸ்” எங்கள் உணவை எப்போதும் தேர்ந்தெடுப்பது அவன் தான். கடமைக்காக “ஓக்கே வாடா… ஓக்கேவா…” என்று கேட்டுக்கொள்வான்.

நடுநாயகமாக இருந்த மேடை ஒளியூட்டப்பட்டது அதில் ஒரு அழகி ஆடத் தயாராக நின்றாள். அவள் உடலின் பளபளப்பு உடையிலும் மின்னியது. அவள் வெளிச்சத்தில் அறை இன்னும் கொஞ்சம் பிரகாசமானது. 

இரண்டு தட்டுகளில் கோழியின் செட்டைகளை வரிசை வரிசையாக அடுக்கி எங்கள் முன் வைத்தாள். எனக்கு நாக்கில் ஊறியது. நீளக்கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் போலிருந்த டக்கீலாவை நான்கு கோப்பைகளுக்கும் பகிர்ந்தாள். 

“நோ…ஒன்லி த்ரி” எனக்கு வேண்டாமென்று தடுக்க முயன்றேன். எப்போதும் மூன்றாவது ரவுண்டில் ஆரம்பிப்பவர்கள் “இது உன் பார்ட்டி. நீ குடிச்சே ஆகனும்” என தொடங்கும் முன்னே ஆரம்பித்தனர்.

“ப்ளீஸ் டா, இதுக்கப்பறம் இந்தமாதிரி எப்ப மீட் பண்ண போறம். அட் லீஸ்ட் சியர்ஸ் சொல்றதுக்கு மட்டும் ஒரே ஒரு கிளாஸ்” சபரீஷ் கெஞ்சினான். 

“சியயயயயர்ர்ர்ர்ர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…..” உயர்ந்த எங்கள் கண்ணாடிக் கோப்பைகள் ‘கிணிங்’ என முட்டிக்கொண்டன. அவர்கள் மூவரும் மீண்டும் “சியர்ஸ் ஃபார் அகிலன் மேரேஜ்…” கத்திவிட்டு குடிக்கத்தொடங்கினார்கள். வாசனும் சபரீசும் அனுப்பவித்து ரசித்துச் சுவைத்தனர். ஜோசப் கண்களை மூடிக்கொண்டு மடக் என்று குடித்துவிட்டு கோழி செட்டையை வேக வேகமாகக் கடித்தான். முதல் மிடறைத் தொட்ட என் நாக்கு கரும்புகையைக் கரைத்துக் குடிப்பதுபோல் உணர்ந்தது. அழுகிய வெங்காய மணம் வேறு கொமட்டிக்கொண்டு வந்தது. ஜோசப் கோழி செட்டை ஒன்றை என் பக்கம் நீட்டினான் வேகமாக வாங்கிக் கடித்தேன்.

 ‘திம்..திம்..திம்..திதிம்..திம்..திம்’ என மெதுவாக இசை காதுகளுக்குள் நுழைந்தவுடன் மேடையில் ஆடிக்கொண்டிருந்தவளின் மேனியில் அத்தனை பேர் பார்வையும் குத்தியது. உச்சஸ்தாயியில் யாரோ ஆங்கிலப் பாடகி அலறத்தொடன்கினாள். இசையின் வேகத்தைத் தொடர்ந்து ஆட்டக்காரியின் அங்க அசைவுகளும் வேகமெடுத்தது. அவள் மேனியில் அங்காங்கே ஒட்டிக்கொண்டிருந்த ஆடைகள் பிய்த்துக்கொண்டு பறந்துவிட  அங்கிருந்த அத்தனை பேரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அடுத்து அரபு இசைக்கு இடுப்பை ஆட்டிக்கொண்டே இருந்தார்கள் இரண்டு இடுப்பழகிகள். இரண்டாவது கோப்பையிலிருந்து ஜோசப்பின் பாணியைப் பின்பற்றினேன் மூன்று நான்கு என வரிசையாகச் சென்றது. மேலும் ஒரு டக்கீலாவும் சில கோழிக் கால்களும் வந்தன. ‘ஜெய் ஹோ…’ ஒலிக்க ஆங்காங்கே அமர்ந்திருந்த இந்தியர்களில் சிலர் ஆடினார்கள். இரத்தத்தைச் சூடேற்றிய ஆல்ஹகால் ஒரு கருந்தொப்பையை ஆட்டக்காரிக்கு இணையாக ஆட்ட வைத்தது. அந்த கருந்தொப்பைக்காரர் அவர் நண்பர்களின் அலைபேசிக்குள் படமாகிக்கொண்டிருந்தார்.

பின்னந்தலையில் இருந்து யாரோ மயிலிறகால் வருடி விடுவது போல் இருந்தது. கன்னத்துச் சதைகளின் கனம் கூடியது கை கால்களில் உள்ள ஒவ்வொரு செல்லும் விரைத்துக்கொண்டு நின்றது. அறையில் யாரும் இல்லாதது போல் என்னைச் சூழ்ந்து நின்றது ஒரு இருட்டு. 

ண்களைத் திறக்க முயற்சித்தேன் உச்சந்தலையில் இருந்து ஒரு வலி முகம் முழுவதும் பரவியது. ஒரு கண் மட்டும் லேசாக திறந்து வாசனை மங்கலாக காட்டியது. வாயைத்திறந்து அவனை அழைக்கமுடியவில்லை கைகளை அசைத்தேன். வேகமாக அருகில் வந்தவன் என் தோளைப்பிடித்து அமைதிப்படுத்திப் படுக்கவைத்தான். என்ன என்று கைகளால் வினவினேன்.

“ஒண்ணுமில்லடா… சின்ன ஆக்சிடன்ட்… கீழ விழுந்துட்ட… கொஞ்சம் வெய்ட் பண்ணு டாக்டர கூட்டிட்டு வரேன்” வெளியே ஓடினான்.

ஒன்றும் புரியவில்லை கன்னத்தைத் தடவிப்பார்த்தேன் அழுகிய தக்காளியை அமுக்குவது போலிருந்தது. வலித்தது. வலதுபக்கம் கன்னத்தின் வீக்கம் கண்ணை மறைத்திருந்தது இடதுபக்கம் கொஞ்சம் பரவாயில்லை.

மருத்துவர் வாசனிடம் பேசியதை வைத்து மூக்கு எலும்பு உட்பட என் கன்னத்தில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை அறிந்தேன். நான் அமர்ந்திருந்த ரோலிங் சேரில் ஏறி நின்று அப்படியே மரம் போல் சாய்ந்து விழுந்தேனாம். சத்தியமாக வாசன் மருத்துவரிடம் விளக்கும் போது தான் எனக்குத் தெரியும்.

அறுவைசிகிச்சை முடிந்து ஆறு வாரங்கள் ஆன நிலையில் சிங்கப்பூர் கேகே மருத்துவமனையில் இருந்து என்னை ‘டிஸ்சார்ஜ்’ செய்தார்கள். அழைத்துபோக அப்பா வந்து காத்துக்கொண்டிருந்தார். என் புகழை உலகறியச் செய்திருந்தான் யாரோ ஒரு புண்ணியவான். பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஒரு இடம் பாக்கியில்லை. ஒரே ஒரு குறை. எந்த தொலைகாட்சியிலும் நான் பரம்பரைக் குடிகாரனா இல்லை பஞ்சத்துக் குடிகாரனா என விவாதம் நடத்தவில்லை.

மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தொடர்ந்தது. இரண்டு மாதங்களுக்குப் பின் என் முகம் ஒரு நெளிவெடுக்கப்பட்ட குண்டாச்சட்டியைப் போல் ஒரு வடிவத்திற்கு வந்திருந்தது. கண்ணாடிக்கு முன் நின்று பழைய புகைப்படத்தை ஒப்பிட்டுப்பார்ப்பேன். வடுக்கள் வலிகளாய் மாறும். இது எனக்குள் இருந்த இன்னொரு முகம் என என்னைத் தேற்றிக்கொள்வேன்.

என் சிங்கப்பூர் விசாவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது என் நிறுவனம். இந்தியாவில் என் சேவையின் தேவை இருப்பதாகக் காரணம் கூறியது.

ன் முகத்தின் வடிவம் கொஞ்சம் மாறியதாலோ என்னவோ இப்போதெல்லாம் நான் சாதரணமாக இருந்தாலும் சோகத்தில் இருக்கிறேன் என்று நினைத்து என் வீட்டு ஆட்கள் ஆறுதல் சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள்.

என் அப்பா என் அருகில் வந்து “அந்த ரங்கராஜன் இருக்கானே பயங்கர மோசமான ஆளுடா… அவன் பொண்ணு அந்த அருள்மொழி அதைவிட…” இப்போது நூற்றி இருபத்தி ஒன்றாவது முறையாக “ரொம்ப லக்கி டா நீ… இந்தப் பொண்ணு பவித்ரா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு… டா… கண்டதை நெனச்சுகிட்டு இருக்காத” என்று முதுகில் தட்டினார்.

அருகில் அமர்ந்திருந்த வாசன் கையைப்பிடித்துக்கொண்டு மெதுவான குரலில் “சாரி டா” என்றான்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -