காந்தி

கதையாசிரியர்: அசோகமித்திரன்

- Advertisement -

தன்னைப் பற்றி எல்லோரிடமும் பொய்யான தகவலைப் பரப்பும் நெருங்கிய நண்பன் தந்த மனக் கசப்பைப் போக்க ஒரு ஹோட்டலுக்குள் நுழைகிறான் அவன். வாங்கிய காபியின் கசப்பும் சேர்ந்து கொள்ள நண்பனுடனான தனது உறவை எண்ணிப் பார்க்கிறான். தற்செயலாக அங்கே மாட்டப்பட்டிருக்கும் காந்தி படத்தின் மீது அவன் கவனம் விழுகிறது. அவன் சிந்தனை உடனே காந்தி பற்றி அவனுக்கும் நண்பனுக்கு இடையே நடந்த உரையாடலுக்குத் தாவுகிறது. பிறகு காபியில் விழப்போன ஈயின் மீதும் திடீரென அவனுக்குக் கரிசனம் பொங்குகிறது. எண்ணத்தில் வந்த அந்தச் சிறிது நேர சலனம் அவன் வேதனையைச் சற்று தணிக்கிறது. கதை முடிந்தது.

சிறுகதை வடிவத்திற்கு உண்டான கோட்பாடுகளை மீறி எழுதப்பட்ட கதைகளில் ஒன்றுதான் ‘ காந்தி ‘. அமி தனது பல கதைகளில் இந்த முயற்சியைத் தொடர்ந்து செய்துள்ளார். மன ஓட்டங்களைக் கொண்டே நகரும் கதைகள் இன்று அதிகம் வந்தாலும் அமி இந்தக் கதை எழுதிய காலகட்டத்தில் தமிழ் இலக்கிய உலகில் அது ஒரு புதிய பாய்ச்சல் தான்.

கதையின் கரு எதைப் பற்றியது என்ற குழப்பம் படிப்பவருக்கு ஏற்படலாம். காந்தி என்கிற தலைப்பும், அவர் பற்றிய நீண்ட விவாதங்களும் இது காந்தியை முன்னிலைப்படுத்தும் படைப்பு என்ற எண்ணத்தைத் தரலாம். ஆனால் உண்மையில் கதை அவரைப் பற்றியதல்ல என்றே தோன்றுகிறது.

பெரும் மனச் சஞ்சலத்தோடு நாம் குழம்பித் தவிக்கையில் நம் எண்ணங்கள் எங்கெங்கோ அலைபாய்ந்து இறுதியில் அந்தப் பிரச்சனைக்கே வந்து சேரும். ஆனால் அந்தக் கணத்தில் நாம் எதுவும் செய்யாமலேயே நம் மனதில் அந்தப் பிரச்சினையின் வீரியம் குறைந்து இருக்கும். ஒன்றுமேயில்லை என்று கூட ஆகியிருக்கலாம். அந்தத் தருணத்தை தான் அமி இந்தக் கதையில் பதிவு செய்திருக்கிறார். சாதாரணமாக சென்று கொண்டிருக்கும் ஒருவனின் வாழ்கையின் சில நிமிடங்களைப் பூதக் கண்ணாடி கொண்டு காட்டுவதைப் போல.

கதையில் காந்தி பற்றி வரும் உரையாடல் மிகவும் முக்கியமானது. இன்றளவும் காந்தியின் செயல்பாடுகள் குறித்து அதே போன்ற வாக்குவாதங்கள் நடைபெறுவதை பார்க்கலாம். பெரிய மாற்றம் ஒன்றும் இருப்பதில்லை. அந்த உரையாடல்களை நினைத்துப் பார்ப்பதன் வழி, காந்திக்கே இந்த நிலைமை எனும்போது தன் போன்ற சாதாரணனுக்கு அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்ற ஞானம் தோன்றிவிடுகிறது அவனுக்கு.

அமியின் கதைகளில் அதிகம் வசீகரிப்பது அவர் தரும் நுண்விவரணைகள் தான். அவையே அவர் கதைகளை மீண்டும் மீண்டும் படிக்கும் அவாவை அதிகரிக்கின்றன. இந்தக் கதையிலும் அவற்றிற்கு பஞ்சமில்லை. அவன் பிரக்ஞையில் ஆழ்ந்து போனவர்கள் விபரம் தருகையில் ஒவ்வொருவரையும் அவர் விவரிக்கும் விதம் அவருக்கு மட்டுமே உண்டானது. அந்தப் பத்தியை மட்டும் சில முறைகள் திரும்பத் திரும்ப வாசித்தேன்.

‘ கட்டுரை போல இருக்கிறது ‘, ‘ கதை என்ற ஒன்றே இல்லை ‘ என்பது போன்ற விமர்சனங்களை இந்தக் கதையின் மீது பலர் வைத்தாலும் அமியின் எழுத்தை நேசிக்கும் என் போன்ற ரசிகர்களுக்கு இந்தச் சிறுகதையும் மனதுக்கு நெருக்கமாக அமைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -