சகடக் கவிதைகள் – 13

ஜீவ நதி…

- Advertisement -

இந்த கவிதைத் தொகுப்பின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்

ஜீவ நதி…

தலை தான் மேலே இருப்பதால்
தற்பெருமை கொண்டதாம்

கால்கள் தான் சேற்றில் படுவதால்
கழிவிரக்கம் கொண்டதாம்

தலை தான் நினைத்ததை
கால்களை வைத்து நடத்துவதால்
தானே எஜமானன் என்று திமிரோடு அலைந்ததாம்

காலோ தான் ஏன் தலையின்
கட்டளைக்கு சேவை செய்ய வேண்டுமென
கலகம் செய்யத் துவங்கியதாம்

தலைக்கும் காலுக்கும்
தகராறு முற்றியதில்
தடம் புரண்டதாம் மொத்த இயக்கமும்

தலைக்கு ஒரு கோஷ்டியும்
காலுக்கு ஒரு கோஷ்டியுமாய்
உடல் இரண்டாய்ப் பிரிய
உள்ளம் மட்டும் நடுநிலையாய்
உண்மையை உரக்கச் சொன்னதாம்

வெறுப்பு வீச்சின் மிகுதியால்
வாய்மை அமிழ்ந்து போனதாம்

தாங்கள் செல்லும் பாதையைத்
தலை முடிவு செய்யலாகாதென்று
கால்கள் போட்டதாம் ஒரு தீர்மானம்

கால்களின் முடிவுக்கு தலை இணங்க மறுத்ததாம்
தலை பார்த்த எதிர் திசையில் கால்கள் நடக்கத் துவங்கியதாம்
கால்கள் பின்னால் நகர்ந்தாலும்
தலை திரும்ப மறுத்ததால்
உடல் முட்டி விழுந்ததாம்
தலையில் அடிபட்டதாம்…

ரத்தம் பெருகித் தலை மண்ணில் சாய
கால்கள் ஆட்டம் போட்டதாம்
தலை தன் உதவிக்கு கால்களிடம் சரணடைந்ததாம்
கால்கள் தன் பெருமையை உணர்ந்தாலும்
தலை செய்த அதே தவற்றை
தன்னிறைவுடன் செய்ததாம்…

கால்கள் தலையை நடக்கச் சொன்னதாம்
தலை தன் இயலாமையால் குனிந்து கொண்டதாம்
ரத்தம் கட்டித் தலை சாய்ந்து போக – இறுதியில்
கால்களும் துவண்டு மண்ணில் வீழ்ந்ததாம்

தலையை பெருமை என்றும்
காலை சிறுமை என்றும்
முடிவு செய்த முட்டாள்கள் யாரோ?

இரண்டும் இன்றி ஏது இயக்கம்
இதயத்தால் இணைந்தால் ஏன்
இந்த மயக்கம்?

ஒவ்வொரு உறுப்பும் உடலின் உறுதுணை
ஒன்றின்றி மற்றொன்று உய்ய வழி ஏது?
பிரித்தாளும் சூழ்ச்சியால்
பகையாகும் உறுப்புக்கள்
எதிரெதிரே போர் தொடுத்து
பயனற்றுப் போகும் முன்னர்

ஓர் வழி உண்டாம் ஒற்றுமையாய் வாழ்ந்திடவே
உள்ளத்தின் பாதையாம் அது
உறுதுணையான பாலமாம் அது

அதன் வழி தொடர்பிருந்தால்
அற்ப சண்டைகள் தீருமாம்

அன்பெனும் ஜீவ நதியாம் அது
அறியாமையைப் போக்குமாம்

ராகவ் மிர்தாத்
ராகவ் மிர்தாத்http://www.rakavmirdath.com
மனித உளவியலையே மாற்றக்கூடிய சக்தி படைத்த சினிமாவில் தானும் ஒரு தவிர்க்க முடியாத பங்காற்ற வேண்டுமென்ற தணியாத கலைத்தாகத்தால் உந்தப்பட்ட படைப்பாளி, இயக்குனர், எழுத்தாளர்.இவரது படைப்புகள் வெகுவிரைவில் வெள்ளித்திரையில் காணக்கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி.தேசிய விருது பெற்ற “பாரம்" படத்தின் திரைக்கதை மற்றும் வசனகர்த்தா.இவருடைய “மிருணா” என்கிற குறும்படம் ரீகல்டாக்கீஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -