ஜகம் அழிவதில்லை

சிறுகதை

- Advertisement -

வன் அம்மா தன் பையன் பெயரில் கட்டாயம் ‘ஷ’னா வர வேண்டும் என்று அவன் பிறந்து மூன்று மாதங்களுக்குப் பல பெயர்களைச் சலித்தெடுத்து, “அஷோக்” என்று வைத்தாள். தன் சொந்தத்தில் யாருக்கும் அப்படியான ஒரு பெயர் இல்லை என்று பல காலம் பெருமைப்பட்டுக் கொண்டாள். ஆனாலும் அந்த ‘ஷ’னா ஒருநாளும் அவள் வாயில் நுழையவே இல்லை. ‘அசோக்கு…’ என்றே சாகும் வரை அழைத்தாள். இன்று அஷோக்கை அஷோக் என்று கூறினால் அங்கு யாருக்கும் தெரியாது. கிறுக்கன் என்றால் உடனே கண்டுகொள்வார்கள். அவன் அம்மா உயிரோடு இருந்தவரை அவனை யாரும் ஒருவார்த்தை சொல்ல விட்டதில்லை. அந்தத் தெருவின் முதல் வீட்டில் இருந்த கண்ணப்பன் ஆசாரி ஒருமுறை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவனை, “கிறுக்குப் பயலே இங்கே வாடா.. ” என்று அழைத்து விட அவர் வீட்டின் முன் நின்று மண்ணைத் தூற்றி அவள் பேசிய பேச்சில் அவள் இருக்கும் வரை அவனை அப்படி அழைக்க அங்கு யாருக்கும் துணிவு வரவில்லை.

எல்லா அம்மாக்களும் நினைப்பது போல் தன் பையனுக்கும் ஒரு கல்யாணம் நடந்து விட்டால் எல்லாம் சரியாகிப் போகும் என்று கருதி தூரத்து சொந்தத்தில் ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணமும் செய்து வைத்தாள். கல்யாணமான இரண்டாவது நாள் அவள் கூலி வேலைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போது மருமகள் வீட்டில் இல்லை. அவள் தான் அதை எண்ணிப் பலநாட்களுக்கு ஒப்பாரி வைத்தாள். ஆனால் அவனிடம் மனைவி என்று ஒருத்தி வந்ததும் போனதும் எந்தவொரு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை..

அவனுக்கு என்று அவன் அம்மா ஒரு வீட்டை விட்டுவிட்டுப் போயிருந்தாள். சிறிய ஓட்டு வீடு. இப்போது பரமாரிப்பு இல்லாமல் விரிசல் விடத் துவங்கியிருந்தது. சிமென்ட் தரை பெயர்ந்து ஆங்காங்கே குழிகள் தோன்றியிருந்தன.  வெளிப்புறம் பச்சை வண்ணம் அடித்திருந்ததற்கான அறிகுறி சில இடங்களில் மட்டும் எஞ்சியிருந்தது. வீட்டிற்குள் என்ன நிலை என்று இதுவரை யாருக்கும் தெரியாது. அவனே அம்மா இறந்தபின் அதிகம் வீட்டிற்குள் சென்றதில்லை. அதற்கான தேவையும் இருக்கவில்லை. வீட்டிற்கு வெளியே ஒரு திண்ணை இருந்தது. அதுதான் அவன் எப்போதும் வாசம் செய்யும் இடம். அம்மாவின் ஞாபகம் வந்தால் அந்தத் திண்ணையில் உட்கார்ந்தபடி வீட்டிற்குள் திரும்பியவாறு ஏதாவது பேசிக் கொண்டிருப்பான். சில நேரம் கால்களைக் கட்டிக்கொண்டு சத்தமாக அழுவான்.

அந்தத் திண்ணையில் அமர்ந்து தெருவைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரங்களில் அவன் பார்வை நிலை கொள்ளாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும். திடீரென ஏதோ முடிவு செய்தவனாய் எழுந்து சுற்றி இருக்கும் தெருக்களில் உலா வருவான். இரு கைகளையும் ஒரு கழுகைப் போல இருபுறம் விரித்து வீசியபடியே நடப்பான். தன் ராஜாங்கத்தைச் சுற்றிப் பார்க்கும் அரசனைப் போன்று அந்த நடை இருக்கும். சுற்றுப் பயணம் முடித்த கையோடு அந்த ராஜாங்கத்தில், கொஞ்சமேனும் மதிப்போடு வெளியே கிடக்கும் பொருட்களில் சில காணாமல் போய்விடும்.

ரு முறை மின்துறை ஊழியர்கள் புதிய மின் கம்பத்தை ஊன்றியதோடு, பழைய கம்பத்தை அகற்றாமல் சென்றுவிட அது அங்கேயே கிடந்தது. சில நாட்களில் அவன் பகல் நேரங்களை அந்தக் கம்பத்தின் அருகில் கழிக்க ஆரம்பித்தான். அவன் கையில் எங்கிருந்தோ தேற்றிக் கொண்டு வந்திருந்த சின்ன சுத்தியல் ஒன்று இருந்தது. அந்தக் கம்பத்தின் மேலேயே நாள் முழுதும் படுத்திருப்பவன், ஆள் நடமாட்டம் குறைந்திருக்கும் வேளைகளில் எழுந்து உட்கார்ந்து சுத்தியலால் தட்டிக் கொண்டிருப்பான். யாரேனும் வருவது தெரிந்தால் சுத்தியலைப் போட்டுவிட்டு கால் மடக்கி அதன் மீதே படுத்துக்கொண்டான். மூன்றே நாட்களில் மொத்தக் கம்பத்தையும் பிளந்து உள்ளிருந்த கம்பியை எடுத்து விட்டான்.

கம்பியை இழுத்துக் கொண்டு அவன் காயிலான் கடைக்கு அருகில் செல்லும் போது இரண்டு மின் ஊழியர்கள் பைக்கில் வந்து அவனைச் சட்டையோடு கொத்தாகப் பிடித்தனர். மின் வாரிய அலுவலகத்தில் சட்டையைக் கழற்றி உட்கார வைத்தனர். குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த நேரம் முழுவதும், “கும்பிடுறேன். விட்ருங்க சார்… கும்பிடுறேன். விட்ருங்க சார்” என அங்கிருந்த ஒவ்வொருவரையும் பார்த்துத் தரையைத் தொட்டு வணங்கியபடியே இருந்தான். ஜேஈ வந்த போது அவரையும் அதுபோல் வணங்கினான்.

“இவன்தானா அது?”

“ஆமா சார்.” ஃபோர்மேன் பாலு சொன்னார்.

“தெங்கனப் பய மாதிரி இருக்கான்..”

“ஆளு பாக்க தான் அப்படி… சரியான திருடன். மூணு நாளு அதே இடத்துல ஒக்காந்து சின்ன சுத்தியல வச்சிப் பொளந்திருக்கான் சார்.”

“ஏன்டா ராஸ்கல்… உங்க அப்பன் வீட்டு சொத்தா? கொண்டு போயி விக்கப் பாத்திருக்க?”

“உங்களோடதுன்னு தெரியாதுங்க. எதோ தெரியாம செஞ்சுட்டேங்க.. விட்ருங்க சார்.. புண்ணியமாப் போகும்.” எழுந்து போய் நாற்காலியில் அமர்ந்திருந்தவரின் கால்களைப் பிடித்துக் கொண்டான்.

“விடுறா.. விடுறா கால..” எழுந்து கைகட்டியபடி நின்றான்.

“சரி வெரட்டி விடுங்க.. இவன வச்சி என்ன பண்ண.”

“நடிக்கிறான் சார்…”

“இல்ல சார்.. உங்க கிட்ட சங்காத்தமே வச்சிகிட மாட்டேன்..” மறுபடியும் காலைப் பிடிக்க வந்தான்.

“டேய்.. கிட்ட வராத.. நாத்தம் புடுங்குது.. பல்லு கில்லு வெளக்குற பழக்கம் இருக்கா இல்லையாடா??”

அவன் பிசுபிசுத்த மஞ்சள் பற்களைக் காட்டிச் சிரித்தான்.

“எப்பவாச்சும் சாம்பல் கிடைச்சா வெளக்குவேன்.”

“நல்ல ஆளுடா.. இந்தத் தடவ விடுறேன். இன்னொரு வாட்டி ஏதும் என் காதுக்கு வந்துச்சு… தொலைச்சிடுவேன் மவனே.”

போகச் சொன்னதும் மின் கட்டணம் செலுத்தி விட்டு வரும் வாடிக்கையாளர் போல் பதவிசாக கண்களில் அலட்சியத்தோடு கைகளைப் பின்னால் கட்டியபடி வெளியேறினான்.

அந்தத் தெருவாசிகளுக்கு அவ்வப்போது அவனால் சில இடையூறுகள் ஏற்பட்டாலும் அவனோடு இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்ளப் பழகியிருந்தார்கள். சில கைதேர்ந்தவர்கள் அவனைச் செலவில்லாமல் வேலை வாங்கவும் தெரிந்து வைத்திருந்தனர். சிறு குழந்தைகளைச் சோறு உண்ண வைப்பதற்கும் தெருவில் விளையாடும் பிள்ளைகளை வீட்டிற்குள் அழைப்பதற்கும் அவன் பெயரை அங்கிருந்த தாய்மார்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.

அவனை நேரில் கண்டுவிட்டால் குழந்தைகளின் பேச்சும் ஆட்டமும் அடங்கிவிடும். ஓடி ஒளிந்து கொள்வார்கள். அவனுக்கு என்றுமே அவர்கள் ஒரு பொருட்டாய் இருந்ததே இல்லை. ஆனால் அந்தத் தெருவில் கூடும் அத்தனைப் பிள்ளைகளுக்கு அவன் ஒரு நல்ல பேசுபொருளாய் இருந்தான்.

அவர்களிடையே அவனைப்பற்றிய பல கதைகள் உலாவின. அவனுக்குப் பூனை ரத்தம் என்றால் கொள்ளைப் பிரியம். பூனையைப் பிடித்துக் கழுத்தைத் திருகி ரத்தத்தை உறிஞ்சிவிட்டு கறியைப் பச்சையாகவே தின்று முடிப்பான். தனியாக விளையாடும் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு போய் அவன் வீட்டிற்கு கீழே இருக்கும் ரகசிய அறையில் அடைத்து வைப்பான். பின் மொத்தமாக ஒரு சாக்கில் கட்டித் தூக்கிச் சென்று ஒருநாள் கடையில் விற்று விடுவான். அவன் அம்மா இன்றும் ஆவியாக அந்த வீட்டிற்குள் தான் இருக்கிறாள். அவனுக்குத் தினமும் சமைத்துப் போடுகிறாள் என்று ஆளாளுக்கு தங்களின் கற்பனைத் திறனுக்கேற்ப அவனைப் பற்றிக் கதை வளர்த்தார்கள்.

தெருமுனையில் ஒரு சின்ன ஹோட்டல் இருந்தது. பகல் மற்றும் இரவு வேளைகளில் இயங்கியது. அங்கே காலை நேரத்தில் ஹோட்டல் வாசலைப் பெருக்கித் தண்ணீர் தெளித்து வைப்பான். மதிய நேரங்களில் மீந்திருப்பவற்றில் ஏதாவது அவனுக்குக் கிடைக்கும். பெரும்பாலும் கிடைப்பது குஸ்கா தான். அபூர்வமாக சில சமயம் தவறுதலாக சில கோழித் துண்டங்கள் அவன் குஸ்காவில் வந்துவிடும். அன்று நாளெல்லாம் அவனுக்குக் கொண்டாட்டமாக இருக்கும். ஹோட்டல் முதலாளி சொல்லாமலே வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வான்.

“என்னடா ஆட்டம் பலமா இருக்கே. இன்னைக்கு விருந்து தானா?” என்று மாஸ்டர் கண்ணடிப்பார்.

“நம்ம ஓட்டலு.. நாம தானே அண்ணே பாக்கணும்..” அசட்டுச் சிரிப்போடு கூறுவான்.

விற்றுத் திங்க உருப்படிகள் கிடைத்த சில நாள்கள் தவிர மற்ற நாள்களில் ஹோட்டலுக்குச் சென்று கொடுத்த வேலையைச் செய்து குஸ்கா சாப்பிட்டான்.

விடிந்து வெகு நேரம் ஆகியிருந்தது. அவன் போர்த்தியிருந்த கிழிந்த போர்வையையும் தாண்டி வெயில் அவனை ஊடுருவியது. வெக்கை பொறுக்க முடியாமல் எழுந்து உட்கார்ந்தான். வயிற்றில் கப கபவென ஒரு எரிச்சல். தெருவே வெறிச்சோடியிருந்தது. நான்கைந்து நாய்கள் மட்டும் எப்போதும்போல் சண்டையிட்டபடி குரைத்துக் கொண்டே ஓடியபடியிருந்தன. அதில் செவலை நாய் ஒன்று இவனைப் பார்த்ததும் கவனத்தை இவன் பக்கம் திருப்பிக் குரைக்க ஆரம்பித்தது. தங்களுக்குள் இருந்த சண்டையை மறந்து புது எதிரியைக் கண்ட உற்சாகத்தில் மற்ற நாய்களும் சீக்கிரமே வந்து சேர்ந்து கொண்டன. அவன் அவைகளைச் சிறிதும் சட்டை செய்யாதவனாய்ப் பார்வையை அலைய விட்டான். எங்குமே ஆள் நடமாட்டம் இல்லை. அவன் எழுந்து நடக்கத் தொடங்க நாய்களும் அவனைச் சூழ்ந்து கொண்டு குரைத்தவாறு அவனோடு வந்தன. ஒரு கல்லை எடுத்து வீசி அவற்றை விரட்டினான். அவனைப் பார்த்தவாறே இன்னும் ஆக்ரோஷமாய்க் குறைத்துக் கொண்டு அவை சிதறி ஓடின.

அவன் ஹோட்டல் இருக்கும் சாலைக்கு வந்தான். ஹோட்டல் பூட்டியிருந்தது. தெருவில் ஒன்றிரண்டு இரு சக்கர வாகனங்கள் மந்த கதியில் போய்க் கொண்டிருந்தன. வெகு சிலரே தெருவில் நடமாடினார்கள். அவர்களும் துணி போன்ற ஒன்றினால் பாதி முகத்தை மூடியபடி சென்றனர். அவனுக்கு அதிசயமாக இருந்தது. சிறிது நேரம் அங்கேயே நின்றபடி கடந்து செல்பவர்களின் முகங்களை உற்றுப் பார்த்தவன் திடீரென வெடித்துச் சிரித்தான். தலை இருபக்கமும் ஆட்டியவாறு முன்னும் பின்னுமாய் நடந்த படியே சிறிது நேரம் கைகளைத் தட்டிச் சிரித்துக்கொண்டிருந்தான். 

பின்னர் ஹோட்டல் பக்கம் திரும்பி எதையோ தேடினான். ஹோட்டலின் ஷட்டர் ஓரம் ஒரு சணல் சாக்கு இருப்பதைக் கண்டான். கைகளில் அதன் இரு முனைகளையும் பிடித்தவன் அதனைச் சுருட்டி வாயோடு சேர்த்துக் கட்டினான். மறுபடியும் சாலைக்கு வந்து போவோரை வேடிக்கை பார்த்தான். சிலர் அவனைப் பார்த்துச் சிரித்துகொண்டு சென்றனர். ஒருவன் பைக்கை நிறுத்தி அவனைப் பலகோணங்களில் புகைப்படம் எடுத்தான். இவன் வாயைத் திறந்து சாக்கிற்குள் பல்லைக் காட்டி நின்றான். சிறிது நேரத்தில் மனித நடமாட்டம் முற்றிலும் இல்லாமல் போனது. இவனுக்கு வாயைச் சுற்றி நம நமவென்று அரிப்பு ஏற்படத் தொடங்கியது. வாயில் கட்டியிருந்த சாக்கைக் கழற்றி எறிந்தான்.

பின் ஞாபகம் வந்தவனாய் அங்கு ஓரத்தில் கிடந்த விளக்குமாறை எடுத்துச் சரசரவென வாசலைப் பெருக்கத் தொடங்கினான். நீல நிறப் பீப்பாயிலிருந்து சிறு வாளியில் தண்ணீர் எடுத்து வந்து தெளித்தான். பின் ஹோட்டலின் ஷட்டர் முன்னால் கைகளைத் தலைக்கு வைத்துப் படுத்து விட்டான்.

திடீரென ஷட்டரை வேகமாக தட்டும் ஓசை கேட்டது. திடுக்கிட்டு கண் விழித்தான்..

“யார்ரா நீ.. இங்க என்ன படுத்துட்டு இருக்க. எந்திரி.” அவன் தலைக்கு மேலே ஒரு போலீஸ்காரர் தெரிந்தார்.

அவனுக்கு என்ன நடக்கிறது என்பது புரிய சில நொடிகள் பிடித்தது. அவனின் நிதானம் அவரை மேலும் ஆத்திரமூட்டியது.

“எந்திர்றா நாயே… ஊரே வீடுக்குள்ள கெடக்கு. உனக்கென்ன இங்க படுக்க..?” அவனை மிதிக்கப் போவது போல் காலைத் தூக்கினார்.

அவன் வேகமாக உருண்டு விலகிப் பின் எழுந்தான்.

“நா இங்க வேலை பாக்குறேன் சார். முதலாளி வந்து கதவத் தொறக்கட்டும்னு கொஞ்சம் உடம்ப சாச்சேன்.. அதுக்கு போய் கத்துறயே.” அவன் உரக்கக் கூறினான்.

“என்னடா எதிர்த்துப் பேசுற. வாயக் கிழிச்சிருவேன். ஓட்டல்லாம் தொறக்கக் கூடாதுன்னு அரசாங்கம் உத்தரவு போட்ருக்கு.. உன் முதலாளி மட்டும் வந்து கதவத் தொறப்பானா? கிளம்பு..கிளம்பு.. இங்கெல்லாம் படுக்கக் கூடாது. வீட்டப் பக்கம் போ.”

அவன் இருகைகளாலும் தலையைச் சொறிந்தபடி அங்கேயே நின்றான்.

“கிளம்புடான்றே…” அவர் கையை ஓங்கவும் அவன் வாயில் வசவுச் சொற்களை முணுமுணுத்தபடி தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினான்.

அவன் பக்கத்து வீட்டிலிருக்கும் லட்சுமி குப்பையைக் கொட்டுவதற்காகக் கதவைத் திறந்து கூடையோடு வெளியே வருவது தெரிந்தது. எதிரில் இவனைக் கண்டும் காணாததுமாய்த் தெருவின் ஓரம் ஒட்டியபடி நடந்து வந்தாள். அவனைக் கடக்கும் போது நடையில் வேகத்தைக் கூட்டினாள்.

“யக்கா.. லச்சுமி அக்கா… நேத்திருந்து ஒன்னும் சாப்டல.. சாப்பாடு இருந்தா கொடுக்கா…” அவள் நடக்க நடக்க அவன் குரல் உயர்ந்து கொண்டே போனது.

“யக்கா…. யக்கோவ்”

“திருட்டுப் பயலுக்கு சாப்பாடு வேணுமாம்ல.. இன்னைக்கு சாப்பாடு போட்டா அப்புறம் தெனமும் நாய் மாதிரி என் வீட்டு வாசல்ல வந்து நின்னுரும்.” காலி இடத்தில சென்று குப்பையைக் கொட்டியவள் வீடு நோக்கித் திரும்பி நடந்தாள். அவன் அவள் போட்டிருந்த கம்பிக் கோலத்தைக் காலால் தேய்த்தபடி வாசலில் நின்றிருந்தான்.

“யக்கா.. ரொம்பப் பசிக்குதுக்கா.. எதாவது சாப்ட இருந்தாக் கொடேன். ஓட்டலும் இன்னைக்குத் தொறக்கல.”

“மூதேவி.. கோலத்தை விட்டு தள்ளி நில்றா முதல்ல. ஒழுங்கா இடத்தை இப்ப காலி பண்ணல விளக்கமாறு பிஞ்சிரும் சொல்லிட்டேன். எப்போ எவனுக்கு நோயி வருமோனு பயந்து கெடக்குறோம். எங்கெங்கேயோ திரியிற நாயி என் வீட்டு முன்னாடி வந்து நிக்காத. போடா..போடா..” அவள் கையிலிருந்த கூடையினை அவன் முன் வீசி விரட்டினாள். அவன் அவளை முறைத்தபடியே திரும்பி நடந்தான்.

“என்னடா மொறைக்கிற… கிறுக்கனுக்கு மொறப்பப் பாரு. கண்ணு முழியத் தோண்டிருவேன்” அவள் வேகமாக கதவைச் சாத்தும் ஒலி அவனுக்குப் பின்னால் கேட்டது.

நேராகச் சென்று தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டான். கண்களை அழுத்தமாக மூடித் திறந்தான். வயிற்றில் எரிச்சல் அதிகமாகியிருந்தது. இரு கைகளையும் தொடையின் மேல் வைத்துப் பரபரவெனத் தேய்த்தான். தனக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் ஞாபகப்படுத்திக் கொள்பவன்போல் சத்தமாகச் சொல்லத் தொடங்கினான். அங்கிருந்த தென்னை மரத்தின் மேலிருந்த காக்கைகள் மட்டும் அவனுக்கு பதிலளிப்பது போல கூட்டமாக கரைந்து கொண்டிருந்தன.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

2 COMMENTS

  1. Nice story. Good presentation. முடிவு இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக தெளிவாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.. ஒரு வேளை எனக்குப் போதவில்லையோ??

  2. தங்களின் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி?. ஊரடங்கின் முதல் நாள் அவனுக்கு எப்படி கழிந்தது என்பதைப் பதிவு செய்வதே நோக்கமாக இருந்தது. எனவே முடிவு என எதையும் அறுதியிட்டு கூறவில்லை.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -