நகரம்

கதையாசிரியர் : சுஜாதா

- Advertisement -

மதுரை அரசு மருத்துவமனைக்கு தன் உறவினர் ஒருவரைப் பார்க்கச் சென்ற சுஜாதா, அங்கே மருத்துவமனையின் நிலை கண்டு, அந்த பாதிப்பில் எழுதிய கதைதான் ” நகரம்”. இன்றளவும் அவரின் சிறுகதைகளில் ஆகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. சிறுகதை வெளிவந்து சில நாட்களில்,மதுரை அரசு மருத்துவமனையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன என்பதை அறியும் போது, கதையின் வீச்சு எத்தகையது என்பது புரியும்.

ஒரு எழுத்தாளனுக்கு மிக அவசியமான ஒன்று, தன்னைச் சுற்றியிருக்கும் விசயங்களை, மனிதர்களை கூர்ந்து கவனிக்கும் திறன். சுஜாதாவின் ஒவ்வொரு படைப்பை வாசிக்கும் போதும் என்னை மிகவும் பிரமிப்படையச் செய்வது அவரது கூரிய அவதானிப்பு. அவர் மதுரையைச் சேர்ந்தவர் அல்ல. ஆனால் கதையின் ஆரம்பப் பத்திகளில் அவர் தரும் மதுரை குறித்த விவரிப்பு அந்நகரை, அதன் மனிதர்களை அப்படியே படம் பிடிக்கிறது.

ஒருமுறை மட்டுமே சென்ற மருத்துவமனையைச் சுற்றி இத்தனை நுணுக்கமாக தகவல்கள் கொண்டு கதையை பின்னியிருப்பது அவருக்கே சாத்தியமான ஒன்று.

சிறு நகரங்களில், கிராமங்களில் இருந்து முதல்முறையாக நகரம் வருபவர்களுக்கு தெரியும். அது எத்தகைய பதற்றத்தையும் மனக்கலக்கத்தையும் உண்டு பண்ணும் என்று.

கிராமத்தில் இருந்து வள்ளியம்மாள், சுரம் வந்த தன் மகள் பாப்பாத்தியுடன் மதுரை நகர அரசு மருத்துவமனைக்கு வருகிறாள். அங்கே தன் மகளை உள்நோயாளியாக அட்மிட் செய்வதற்காக பெரும்பாடு படுகிறாள். மருத்துவமனையின் சிக்கலான கட்டமைப்பு, படிப்பறிவில்லாத வள்ளியம்மாளை அலைக்கழிக்கிறது. உண்மையில் படித்தவர்களுக்கே சமயங்களில் அரசு அலுவலகங்களில் இத்தகைய அனுபவங்கள் நேரிடும் எனும்போது வள்ளியம்மாள் போன்றோரின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லை. பயத்துடனும் தவிப்புடனும் மருத்துவமனை வளாகத்தில் அவள் அலைந்து திரியும் காட்சி நம் மனதை பிசைகிறது. மனிதர்களைக் கையாளும் மருத்துவமனைகள் இயந்திரத் தன்மையோடு இயங்குவது இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மக்களின் பயத்தைப் போக்க வேண்டிய இடம், அதை அதிகரித்து காசு பார்க்க விழைகிறது.

பலராலும் வாசிக்கப்பட்ட விவாதிக்கப்பட்ட சிறுகதைதான் என்றாலும் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதிதாகவே இருக்கிறது. சென்ற முறை வாசிக்கையில் இதைத் தவற விட்டோமே என்று தோன்றுகிறது. 1972 ம் ஆண்டு எழுதப்பட்ட கதை, இந்தக் காலத்திற்கும் கச்சிதமாகப் பொருந்திப் போவது வேதனை தரும் விசயம்தான்.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -