நான்காம் பரிமாணம் – 2

1. மொழி அதிகாரம் - 2ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

நான்தான் காலம் பேசுகிறேன். எனது பார்வையில் நான் கண்ட பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து உங்களுடன் கூறிக்கொண்டு வருகிறேன். சென்ற பகுதியில், மொழியின் துவக்கத்தை பற்றியும் முதல் மொழியான ஈர்ப்பு விசை பற்றியும் பிற்காலத்தில் வந்த பல்வேறு மொழிகளைப் பற்றியும் கூறினேன். இன்று உங்கள் உலகில் அதிகமாக பேசும் ஆங்கில மொழி ஒரு மீனால் பிரபலம் அடைந்தது என்பதை உங்களுக்கு விளக்கப் போகிறேன். அது எவ்வாறு என்று பார்ப்பதற்கு முன்னால் ஒலி வடிவமாக மொழி மாறியது எப்படி என்று நான் உங்களுக்கு கூற வேண்டும்.

ஒலியியல்

உங்கள் உலகின் விலங்கினங்களும் ஆதி மனிதர்களும், காட்டில் வேட்டையாடி மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டிய நிலைமையில் இருந்தனர். அப்போது ஒரே இனத்தை சேர்ந்த குழு ஒன்றாக வேட்டையாடினால் எளிமையாக தனக்கு வேண்டிய உணவை சேகரிக்க முடிந்ததை புரிந்து கொண்டது. இவ்வாறு ஒரே குழுவாக இருக்கும்போது, தன்னுடைய மனதில் தோன்றிய கருத்துக்களை மற்ற குழுவினர் புரிந்து கொள்வதற்காக பல்வேறு முறையில் முயற்சிகள் மேற்கொண்டன. முதலில் தான் சொல்ல வேண்டிய கருத்தை செய்து காண்பித்தே கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்தது. உதாரணமாக ஒரு விலங்கு, மற்றொரு விலங்குக்கு பழத்தைக் கொடுத்து சாப்பிட சொல்ல விரும்பினால், அந்த பழத்தை முதலில் எடுத்து தான் சாப்பிட்டு காண்பித்தது. இதில் என்ன பிரச்சனை? அவ்வாறு சாப்பிட்டு காண்பிக்கும் பொழுது, அந்த பழத்தை முதலில் தானே சாப்பிட்டு விடும் அல்லவா? பின்பு கொடுப்பதற்கு பழம் இல்லாமல் இரண்டு விலங்குகளுக்கும் சண்டை இட வேண்டும். இவ்வாறு பழம் கொடுக்க ஆசைப்பட்ட விலங்கு சண்டை போட்டுக்கொண்டு பிரிய வேண்டிவரும். இந்தப் பிரச்சனையை சரியாக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் உலகின் முதல் அகராதி (lexicon). அதாவது, ஒரு பொருளையோ ஒரு செயலையோ குறிப்பதற்காக ஒரு சப்தத்தை எழுப்பி அதை சமிக்ஞையாக பயன்படுத்தியது. மனிதனும் இப்படித்தான் கருத்துப் பரிமாற்றம் செய்ய ஆரம்பித்தான். ஆனால் மனிதனின் மூளையில் பல்வேறு விதமான யோசனைகள் வந்தது. படம் வரைவது மூலமாக கூட ஒரு கருத்தை ஆதி மனிதன் கூறமுடியும் என்று கண்டுபிடித்தான். இந்தப் படங்கள்தான் பிற்காலத்தில் எழுத்துக்களாக மாறியது. இப்படி உங்கள் உலகின் பல்வேறு இடங்களில் பலதரப்பட்ட மனிதர்கள் உருவாக்கிய அகராதியும் படங்களுமே பல்வேறு மொழிகள் ஆக உருவெடுத்தது. இந்த முதல் அகராதியை புரிந்து கொள்வது அவ்வளவு எளிது இல்லை. அந்த அகராதியில் உள்ள ஒலியை ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மாதிரி உண்டாக்கினர். இந்த ஒலியில் ஏற்பட்ட வித்தியாசம் கருத்து வேறுபாடாக மாறி அவர்களுக்கு சண்டையும் வந்தது. இந்த சண்டையை தவிர்ப்பதற்காக அனைவரும் ஒரே மாதிரி ஒலியைக் உருவாக்குவதற்காக முதல் ஒலியியல் (Phonetics) உண்டானது. உங்கள் உலகில் ஆதியில் தோன்றிய மொழிகள் அனைத்திற்கும் ஒரே ஒரு எழுத்துரு மட்டும்தான் இருந்தது. தமிழ், சமஸ்கிருதம், மற்றும் லத்தீன் போன்ற மொழிகளில் எழுத்து, ஒலியியல் என்று இருவேறு எழுத்துரு கிடையாது. ஆனால் நீங்கள் பேசும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு என்று ஒரு வடிவமும் அதை பேசுவதற்கு என்று மற்றொரு வடிவமும் உள்ளது. உதாரணமாக, island என்ற சொல்லை இஸ்லாந்து என்று கூறாமல் ஐலாந்து (i’land) கூறுவீர்கள். இந்த இஸ்லாந்து எழுத்துருவாகவும் ஐலாந்து (i’land) என்பது ஒலியியல் உருவாகவும் உண்டானது.

ஆங்கிலத்தின் கதை

ஒரே உருவமாக உள்ள தமிழ் மொழியை விட இரண்டு உருவமாக உள்ள ஆங்கில மொழி உலகத்திலுள்ள அதிக மக்களால் பேசப்படுவதற்கு காரணம் வரலாற்றில் ஒளிந்துள்ளது. ஆங்கிலம் என்ற மொழி லத்தீன், ஜெர்மன், பிரஞ்ச் முதலிய பல்வேறு உலக மொழிகளில் இருந்து கலந்து உருவாக்கப்பட்ட மொழியாகும். வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் பெருங்கடலில் வசித்த நாடோடி குழு வைக்கிங்(Viking) என அழைக்கப்பட்டனர். இவர்கள் படகுகள் மட்டும் கப்பல் செய்வதில் திறமை கொண்டிருந்தனர். ஆனால் கடலில் தொடர்ந்து பல நாட்கள் செல்லும் போது பல்வேறு மர்மமான நோய்கள் வந்து பயணியர் இறந்து விடுவர். இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டது. வைக்கிங் நாடோடிகள், கடலில் தாக்கு பிடிப்பதற்கு மீன்களைப் போன்று இருக்க வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தனர். இதற்காக அந்தப் பகுதியில் கிடைக்கும் cod எனும் ஒரு வகை மீனை பிடித்து அதன் கல்லீரலில் சுரக்கும் கொழுப்பை சாப்பிட்டு வந்தனர். என்ன அதிசயம்! அப்படி சாப்பிட்டவுடன் கடலில் யாரும் நோய்வாய்ப் படவில்லை. இந்த மீன் கல்லீரல் கொழுப்பை மர பீப்பாய்களில் மொத்தமாக சேகரித்து வைத்துக்கொண்டு வைக்கிங் நாடோடிகளால் பல மாதங்கள் தொடர்ந்து கடலில் பயணம் செய்ய முடிந்தது. இப்படி பல்வேறு இடங்களுக்குச் சென்று அவர்கள் கட்டமைத்த மொழி ஆங்கிலம் என்று அழைக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியது. இந்த மீன் கொழுப்பு எண்ணெய் ரகசியம் தெரியாததால் பல்வேறு பழங்குடியினர்களால் தன் சொந்த இடத்தை விட்டு வேறு எங்கும் கடலில் செல்ல முடியவில்லை. [பின்குறிப்பு: இந்த மீன் கொழுப்பு எண்ணையை (Cod liver oil) பிற்காலத்தில் நீங்கள் சர்வ சாதாரணமாக உங்கள் அருகில் இருக்கும் மருத்துவ கடையில் மாத்திரை வடிவில் வாங்கி வருகிறீர்கள். இந்த எண்ணெயில் உள்ள சத்துக்கு விட்டமின் (Vitamin) என்று பெயரும் வைத்துள்ளீர்கள். ஆரம்ப காலத்தில் இந்த மாத்திரை இல்லாமல் மக்கள் இதனை மர பீப்பாய்களில் சேகரித்து அதனை குடித்து வந்தனர். அது எவ்வளவு கொடுமையானது என்று உங்களுக்கு புரிய வேண்டுமென்றால் ஒரு மாத்திரையை வாங்கி அதனை நசுக்கி பாருங்கள், உங்களுக்கு புரியும் 🙂 ]

ஆங்கில மொழி என்பது பல்வேறு இடங்களில் மக்கள் பேசிய மொழிகளில் கூட்டமைப்பு என்று நான் கூறினேன். இந்தக் கூட்டமைப்பில் முதன்மையான மொழியாக விளங்குவது லத்தின் ஆகும். லத்தீன் அடிப்படைச் சொற்கள் மற்றும் சொற்றொடர்களை எடுத்துக்கொண்டு அதில் பல நாட்டு மொழிகளை சேர்த்து நவீன ஆங்கிலம் உருவானது. ஆங்கிலத்தில் பல்வேறு தமிழ் மற்றும் சமஸ்கிருதச் சொற்களும் உண்டு. 

யானை கொன்றான் எனும் சொல்லே Anaconda எனும் பெரிய வகை பாம்புகளை குறிக்கும் ஆங்கிலச் சொல்லானது.

தந்திரம் என்னும் சொல் Tantrum (பொருள்: திடீர் எழுச்சி) என்று ஆங்கிலத்தில் மாறியது.

பூரி ஜெகன்நாதர் இன் மிகப்பெரிய தேரைப் பார்த்து Juggernaut (பொருள்: தடுக்க முடியாத மிகப்பெரிய) எனும் சொல் உருவானது.

கட்டுமரம் என்ற தமிழ் சொல் Catamaran (பொருள்: படகு) என்று ஆங்கிலத்தில் மாறியது.

இன்று நீங்கள் பேசும் மொழியில் உள்ள சில சொற்கள், பல்வேறு மொழிகளிலும் அதே ஒலியுடன் கூறப்பட்டு வருகிறது. உதாரணமாக தமிழில் மேசை (Table) என்ற சொல், ஸ்பானிஷ் (Spanish) மொழியிலும் மேசா என்றே கூறப்பட்டு வருகிறது. இப்படி ஒன்றாக கலந்துவிட்ட பல்வேறு மொழிகளில் எது முன்பு வந்தது, பின்னால் வந்தது என்று கண்டுபிடிப்பது உங்களுக்கு மிகவும் சிரமமான காரியமாகும். ஆனால் அப்படி கண்டுபிடிக்க முயற்சி செய்து அதை வைத்துக் கொண்டு பல்வேறு மொழிச் சண்டையையும் விந்தையாக போட்டுக் கொள்கிறீர்கள்!

ஆங்கிலத்தில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை உங்களுக்கு கூறுகிறேன். ஒரு மொழி தொடர்ந்து வளர்ந்து வரவேண்டுமென்றால் மற்ற மொழிகளுடன் தொடர்ந்து உரையாடிக் கொண்டு, மற்ற மொழிகளில் உள்ள கலைச்சொற்களை தன்னுள் உள்வாங்கி அதனை உருவாக்கிட வேண்டும். அவ்வாறு காலத்துக்கு(எனக்கு) ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளாத மொழிகள் காலப்போக்கில்(என் போக்கில்) அழிந்து போகும். இது மொழிக்கு மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான ஒரு கோட்பாடாகும்.

உலகப் பொதுமொழி

உலகில் பல்வேறு இடங்களில் பல தரப்பட்ட மொழிகள் சமகாலத்தில் உருவானது என்று நான் கூறினேன். இப்படி தனித்தனியாக உருவான மொழிகளிலும் கூட பல சொற்கள் ஒரே மாதிரி இருக்கும். உதாரணமாக தாயை, அம்மா, மா, மாம், மம்மா, உம்மா என்று அதிகப்படியான மொழிகளில் கூறி வருகிறீர்கள். பசுக்கள் கூட மா என்றுதான் பேசுகிறது. இதற்கு பின்னால் ஒரு பெரிய காரணமும் உள்ளது. நான் இதுவரை கூறிய மொழியின் பரிணாமம் என்பது இயற்கையாய் நடந்தது. இப்படிப்பட்ட ஒரு பரிணாம வளர்ச்சியை செயற்கையாய் செய்தால் என்னாகும்? இந்தக் கேள்விகளுக்கான விடையை அடுத்த பகுதியில் கூறுகிறேன்.

(நான் சுழல்வேன்)

இந்த தொடரின் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

4 COMMENTS

  1. தெரியாத பல புதிய தகவல்களுடன் சுழன்றுகொண்டிருக்கும் காலத்திற்கு வாழ்த்துக்கள்…

  2. சீரான நடையில் தெளிவாக எடுத்துக்கூறியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -