நான்காம் பரிமாணம் – 8

2. ஊழி அதிகாரம் - 3ஆம் பகுதி

- Advertisement -

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்

ஊழி அதிகாரத்தைத் தொடங்கி, காலமான என்னைப் பற்றி பல்வேறு தகவல்களை உங்களுக்கு தொடர்ந்து கூறிக் கொண்டு வருகிறேன். பொருட்களின் சுழற்சியால் ஏற்படும் காலத்தைப் பற்றி உங்களுக்கு சென்ற பகுதியில் கூறினேன். மேலும், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவை கொண்டு உருவாக்கப்பட்ட நாட்காட்டிகளை பற்றியும் கூறினேன். இன்று இது இரண்டையும் கலந்து உருவாக்கப்பட்ட சூரிய-சந்திர நாட்காட்டியை பற்றி கூறப்போகிறேன். அது தெரிவதற்கு முன்னால், சூரியனையும் சந்திரனையும் மட்டுமே கொண்டு ஏன் உங்கள் உலகில் நாட்காட்டிகள் உருவாக்கப்படுகின்றன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.


கோள்களின் நகர்வு


சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் சூரியனை சுற்றி வருகின்றன என்றும் பல்வேறு கோள்களின் துணைக்கோள்கள் அனைத்தும் அந்தக் கோளைச் சுற்றி வருகின்றன என்றும் உங்களுக்குத் தெரியும். எடுத்துக்காட்டாக பூமி சூரியனையும், சந்திரன் பூமியைச் சுற்றி வருவதை எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் பூமியில் இருந்து கொண்டு வானத்தைப் பார்த்தால் சூரியனும் சந்திரனும் எப்போதுமே தொடர்ந்து ஒரே பாதையில் வட்டமடித்துக் கொண்டே வருவதை உணரலாம். ஆனால் பூமியில் இருந்துகொண்டு வேறு எந்த கிரகத்தை வானத்தில் பார்த்தாலும் இதுபோன்று ஒரே பாதையில் சீராக வட்டம் அடிக்காது. மாறாக மற்ற கிரகங்கள் அனைத்தும், முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருப்பது போன்று உங்களுக்கு தோன்றும். எளிதாக புரிந்து கொள்வதற்காக உங்களுக்கு ஒரு ஒப்பீட்டைக் கூறுகிறேன் கேளுங்கள். நீங்கள் ஒரு நான்கு சக்கர வண்டியில் வேகமாக சாலையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது சாலையில் இருக்கும் மற்ற சில வாகனங்களை நீங்கள் முந்திக் கொண்டு செல்கிறீர்கள் அல்லவா? அந்த வாகனமும் உங்கள் வாகனத்தை போலவே முன்னேறிக் கொண்டுதான் செல்கிறது ஆனால் வேகம் சற்று குறைவு. அப்படிப்பட்ட வேகம் குறைந்த ஒரு வாகனத்தை நீங்கள் பார்க்க நேரும்போது தொடக்கத்தில் அந்த வாகனம் உங்களுக்கு முன்னால் இருக்கலாம். ஆனால் நீங்கள் அதிக வேகத்துடன் சென்று அதனை முந்தி விடுவீர்கள். அப்படி நடக்கும் பொழுது, முன்னால் இருந்த ஒரு வாகனம் பின்னால் சென்றால், நான்கு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து இருக்கும் உங்களுக்கு அவ்வாகனம் பின்னோக்கி நகர்வது போன்று தானே தெரியும். இதுதான் கோள்களிலும் நடக்கிறது. 

நீங்கள் பூமியில் உட்கார்ந்து கொண்டு சனி கிரகத்தை பார்த்தால் சில காலம் முன் நோக்கி செல்வது போன்று தெரியும் சனிகிரகம், மற்ற நேரங்களில் பின்னோக்கி நகர ஆரம்பித்து விடும். சனிக்கிரகம் எப்பொழுதும் ஒரே சீராக சூரியனை சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பூமி அதைவிட வேகமாக சூரியனை சுற்றும் பொழுது, சனிக்கிரகம் பின்னோக்கி நகர்வது போன்று உங்களுக்கு தோன்றும். இப்படி முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டு இருந்தால் உங்களால் காலத்தை கணக்கிடுவது மிகவும் கடினம் ஆகிவிடும் அல்லவா? இதனால் தான் பூமியில் உள்ளவர்களுக்கு சூரியன் சந்திரனை தவிர வேறு கோள்களை வைத்து நாட்காட்டி அமைப்பது கடினம். முடிவாக, நாட்காட்டி அமைப்பதற்கு அந்தப் பொருள் உங்களை சுற்றி வர வேண்டும் இல்லை என்றால் நீங்கள் அந்த பொருளை சுற்றி வர வேண்டும். உங்களோடு போட்டி போட்டுக் கொண்டு சுற்றிவரும் பொருளை வைத்து உங்களால் நாட்காட்டி அமைக்க முடியாது. ஒருவேளை நீங்கள் சூரியனில் குடியிருந்தால் ஒன்பது கிரகங்களையும் வைத்து ஒன்பது நாட்காட்டிகளை உருவாக்கியிருக்க முடியும். உங்கள் பார்வைக்கு கிரகங்கள் பின்னோக்கி நகர்வது போன்று தோன்றுவதை உங்கள் விஞ்ஞானிகள் வக்கிர கதி நகர்வு (retrograde motion) என்று கூறுகிறார்கள்.


சூரிய-சந்திர நாட்காட்டி


வேறு கிரகங்களை வைத்து நாட்காட்டி அமைக்க முடியாது என்பதால் உங்களால் முடிந்த சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு கோள்களை கொண்டு இரண்டு நாட்காட்டிகளை அமைத்து விட்டீர்கள். இந்த இரண்டு நாட்காட்டிகளிலும் சில குறைகள் உள்ளன.  சந்திர நாட்காட்டியை எடுத்துக்கொண்டால், அளப்பதற்கு எளிதாக இருந்தாலும் பருவநிலையை இந்த நாட்காட்டி குறிக்காது. உங்கள் ஹிஜிரி நாட்காட்டியில் உள்ள முதல் அல்-முஹர்ரம் மாதம், கோடைக்காலம், மழைக்காலம், பனிக்காலம் போன்ற எந்த பருவ நிலையிலும் வருடாவருடம் மாறிக்கொண்டிருக்கும். இதற்கு அடிப்படைக் காரணம், இந்த நாட்காட்டியில் ஒரு வருடம் என்பதற்கு 354 நாட்கள் மட்டும்தான். ஏனென்றால் சந்திரன் சராசரியாக 28-29 நாட்களில் இருபிறைகளை கடந்து முழு வட்டம் அடித்து அடுத்த மாதத்திற்கு சென்றுவிடுகிறது. பருவநிலை என்பது சூரியனை பொருத்து இருப்பதால் 365 நாட்கள் இருக்கும் வருடத்திலேயே பருவ நிலை சீராக இருக்கும். 


சூரிய நாட்காட்டியில் இந்த பிரச்சனை இல்லை. அது சூரியனை மட்டுமே வைத்து கணக்கிடப்படுவதால் பருவ நிலை சீராக இருக்கும். டிசம்பர் (December) மாதம் என்றால் எப்பொழுதுமே உலகின் வடக்கு பக்கத்தில் இருப்பவர்களுக்கு குளிர் காலம் ஆகவும் தெற்கு பக்கத்தில் இருப்பவர்களுக்கு வெயில் காலமாக மட்டும்தான் இருக்கும். பிரச்சனை என்னவென்றால் சூரிய நாட்காட்டியை ஒரு சாதாரண மனிதன் வானத்தைப் பார்த்து எளிதாக கணிக்க முடியாது. கணிக்க முடிந்த அறிவியல் அறிஞர்கள் எழுதிக் கொடுத்த அட்டவணையைப் பார்த்து தான் மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 
அப்படியானால் இந்த இரண்டு கோள்களையும் கலந்து ஒரு சாதாரண மனிதன் வானத்தை பார்த்து கணிக்க கூடிய முறையில், அதேசமயம் பருவநிலையும் மாறாமல் கணிப்பதற்கு உருவாக்கப்பட்டது தான் சூரிய-சந்திர நாட்காட்டி. இந்தியாவில் பிறந்த அனைத்து மதங்களிலும் இந்த நாட்காட்டி தான் தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நாட்காட்டியை ஒவ்வொரு மொழியும் எடுத்துக் கொண்டு தங்களுடைய பெயரில் தமிழ் வருடம், தெலுங்கு வருடம் என்றும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. அடிப்படையில் இவை அனைத்துமே ஒரே சூரிய-சந்திர நாட்காட்டி தான். 


சூரிய-சந்திர நாட்காட்டி இரண்டு வகைப்படுகிறது. சூரியனை பிரதானமாக வைத்துக்கொண்டு அதன் மேல் சந்திரனின் நகர்வை பதியவைத்து உருவாக்கப்படுவது சவுரமனை (Sauramana) முறை எனவும், சந்திரனை பிரதானமாக வைத்து கொண்டு சூரியனின் நகர்வை அதன்மேல் பதியவைத்து உருவாக்கப்படுவது சந்திரமனை (Chandramana) முறை எனவும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் கொண்டாடப்படும் தமிழ் வருடமும் கேரளத்தில் கொண்டாடப்படும் விசூ வருடமும் சவுரமனை நாட்காட்டிகள். ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் கொண்டாடப்படும் உகாதி வருடம் எனப்படுவது சந்திரமனை நாட்காட்டிகள். 


சவுரமனை நாட்காட்டி என்பது சூரியன் எந்த நட்சத்திர கூட்டத்திற்கு அருகில் இருக்கிறது என்பதை வைத்து கணக்கிடப்படுகிறது. ஆனால் சூரியன் உதிக்கும் பொழுது பின்னால் இருக்கும் நட்சத்திரம் தெரிவதில்லை என்று முன்பே கூறியிருந்தேன் அல்லவா?. இதனை எளிதாக கணிப்பதற்கு ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமி அன்று நிலா எந்த நட்சத்திரத்துடன் இருக்கிறதோ அந்த அதுவே மாதத்தின் பெயராகவும் கூறப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தை எடுத்துக்கொண்டால், பௌர்ணமி அன்று நிலா சித்திரை நட்சத்திரத்துடன் சேர்ந்து இருக்கும். அதேசமயம் கார்த்திகை மாதத்தை எடுத்துக்கொண்டால், சந்திரன் பௌர்ணமி அன்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கும். இதை அனைவராலும் எளிதாக உங்கள் கண்களைக் கொண்டே பார்க்க முடியும். சூரியனை அடிப்படையாக வைத்து அமைவதால் சித்திரை மாதம் என்றால் வட புலத்தில் இருக்கும் அனைவருக்கும் எப்பொழுதுமே வெயில் காலமாக மட்டும் தான் இருக்கும். அதேசமயம் சந்திரனைப் பார்த்து எளிதாக கணித்து விடவும் முடியும்.

சந்திரமனை நாட்காட்டியில் சந்திரனை அடிப்படையாக கொள்வதால் ஒவ்வொரு வளர்பிறை முதலாம் பிறையும் மாத தொடக்கமாகும். அதனால் சந்திரனைப் பார்த்து எளிதாக உங்களால் காலத்தை சொல்லிவிட முடியும். பருவநிலையை சரி செய்வதற்காக வருடக் கடைசியில் அதிகமாதம் எனும் கணக்கை சேர்த்து வருடத்திற்கு 365 நாட்கள் கொண்டு வந்து விடுவீர்கள். வேண்டுமானால் உகாதி புதுவருடத்தை எடுத்துப் பாருங்கள். எப்பொழுதுமே வளர்பிறை முதல் நாளன்று தான் வரும். அதேசமயம் பருவநிலையும் சரி செய்யப்பட்டுவிட்டது. இப்போது புரிகிறதா ஏன் இரண்டையும் கலந்து நாட்காட்டியை உருவாக்கினீர்கள் என்று? மற்ற கிரகங்களை வைத்து நாட்காட்டியை உருவாக்க முடியாததாலும், சூரியன் சந்திரன் ஆகியவற்றில் உள்ள வசதியான நிலைப்பாடுகளை கலந்து நீங்கள் உருவாக்கிய புத்திசாலித்தனமான முயற்சிதான் இது. 
உங்கள் உலகிலுள்ள பல்வேறு மூலைகளிலும் சூரியன், சந்திரன் மற்றும் சந்திர-சூரியன் ஆகிய மூன்று நாட்காட்டிகளை மீண்டும் மீண்டும் கண்டுபிடித்து, தாங்கள் தான் முதலில் கண்டுபிடித்ததாக பேசிக்கொண்டு நடந்த சண்டை சச்சரவுகளுக்கு குறைவே இல்லை. மொத்தம் மூன்று தான் என்று விஞ்ஞானப்பூர்வமாக உங்கள் உலகம் உணர்ந்த பின்பும் கூட மதம், மொழி, நாடு என்று பிரித்துக் கொண்டு நாட்காட்டிகளை வேடிக்கையாக உங்களுக்கு மட்டும் சொந்தம் கொண்டாடி வருகிறீர்கள்!

உடலின் காலம்

இரு பொருட்கள் இணைவதால் உருவாகும் அதிர்வை வைத்துக்கொண்டு நொடிகள் போன்ற துல்லியமான காலக் கணக்கை உருவாக்கிய நீங்கள் கோள்களின் சுழற்சியால் மாதம், வருடம் போன்ற பெரிய அளவையை உருவாக்கினீர்கள். மாதம், வருடம் போன்ற காலக்கணக்கு உருவானதால் உலகில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுக்கும் அனைவரும் புரிந்து கொள்ளும் படி ஒரு நேர குறியீட்டை உங்களால் உருவாக்க முடிகிறது. உதாரணமாக, ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 60 முதல் 70 ஆண்டுகள் என்று அளந்து வைப்பதற்கு இந்த கோள்களின் கணக்கு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 
அப்படியானால் உங்கள் உடல் தானாகவே இவ்வளவு ஆண்டுகள் முடிந்துவிட்டது என்று கணக்கு செய்துகொண்டு காலாவதியாகி விடுகிறதா? இல்லவே இல்லை. இந்த வருடக் கணக்கு எல்லாம் நீங்கள் உருவாக்கிக் கொண்டது. உங்கள் உடலுக்கு இது வருடம் என்றும் மாதம் என்றும் தெரியாது. உங்கள் உடல் காலத்தை கணக்கிடும் முறையே வேறு. அதை உணர்ந்து கொண்டால் காலத்தைப் பற்றிய ஒரு முக்கியமான ரகசியத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அது என்னவென்று அடுத்த பகுதியில் கூறுகிறேன் காத்திருங்கள்.

(நான் சுழல்வேன்)

குறிப்பு: ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6 மணிக்கு புதிய தகவலோடு உங்களை சந்திக்க நான் வருவேன்.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -