நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நூலாசிரியர் - நம்மாழ்வார்

- Advertisement -

நூல்: நான் நம்மாழ்வார் பேசுகிறேன்… -பசுமைப் போராளியின் வாழ்கை வரலாறு

பதிப்பகம்: விகடன் பிரசுரம்

விலை: ரூ.255

சமீப காலங்களில் விவசாயம் நோக்கி ஈர்க்கப்படும் இளைஞர்கள் பெருகிவிட்டார்கள். கைநிறைய சம்பளம் கிடைக்கும் வேலையை உதறிவிட்டு நிலங்கள் வாங்கி பயிர் செய்யத் தொடங்கி விட்டனர். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் என கிராமத்திலிருந்து நகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தவர்களை மீண்டும் கிராமத்திற்கு அழைத்து வந்த பெருமை நம்மாழ்வாருக்கு உண்டு. அவர் தனது வாழ்நாள் பணியாகவே இதனைச் செய்தார். தனது வாழ்க்கையையும் அதில் தான் சந்தித்த போராட்டங்களையும் நம்மாழ்வாரே எழுதி இருக்கும் நூல் தான் “நான் நம்மாழ்வார் பேசுகிறேன்”. இயற்கை விவசாயத்தில் இறங்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆரம்பப் புள்ளியாக விளங்குகிறது இந்நூல்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் இளங்காடு கிராமத்தில் பிறந்தவர் நம்மாழ்வார். இளங்கலை விவசாயம் கற்று கோவில்பட்டியில் இருக்கும் அரசு வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தபோது அங்கு செய்யப்படும் ஆராய்ச்சிகளால் மக்களுக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பதை உணர்ந்து அங்கிருந்து விலகினார். பின்னர் தன் வாழ்நாள் முழுவதையும் இயற்கை விவசாயத்திற்காக அர்ப்பணித்துவிட்டார்.

எளிய மக்களோடு ஒருத்தராக பழகி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியிருக்கிறார். முறையாக விவசாயம் பயின்றவராக இருந்தாலும் பாமர மக்களிடம் இருந்தும் கற்றுக் கொள்ள எந்தத் தயக்கமும் அவர் காட்டவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்து பெண் ஒருவர் சொன்ன “அடிக்காட்டுல, நடுமாட்டுல, நுனி வீட்டுல..” என்கிற விடுகதைதான் தன்னை இயற்கை விவசாயத்தில் வேகமெடுக்க வைத்தது என்று தான் போகிற இடங்களில் எல்லாம் சொல்லியிருக்கிறார்.

ஒவ்வொரு கிராமத்திற்கு அவர் செல்லும் போது அந்த வட்டாரத்தில் நிலவும் சமூக உறவுகள், தட்பவெப்ப நிலை, வேலை வாய்ப்புகள், கல்வித் தரம், காட்டு விலங்குகளின் தொந்தரவுகள் என பல விஷயங்களையும் உள்ளூர் மக்களிடம் இருந்து தெரிந்து கொண்ட பின்னர் தான் தனது பணியைத் தொடங்குவார். ‘அறியா நிலைக்குச் சென்றால் தான் அறிய முடியும்’ என்பதனை வேதவாக்காகவே கொண்டிருந்தார். அழியும் நிலையில் இருந்த பல பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்திருக்கிறார்.

வேம்பிற்கான காப்புரிமையை வெளிநாட்டினர் கையிலிருந்து நம் நாட்டிற்குப் பெற்றுத் தந்தது நம்மாழ்வாரின் சாதனைகளில் ஒன்று. அந்தச் சம்பவத்தை அவரின் வார்த்தைகளில் தெரிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும்.

“கோர்டுக்கு வெளியே பல நாட்டுக்காரனும் நின்னுக்கிட்டு இருக்கான். நான் வேப்பங்குச்சியை எடுத்து வாயில் வச்சு நல்லா கடிச்சேன். ஒருத்தன், ‘என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?னு’ கேட்டான். ‘பிரஷ் பண்றேன்’னேன். ‘எது பேஸ்ட்?’னு கேட்டான். ‘குச்சிக்குள்ளேயே இருக்கிற கசப்புச் சாறுதான் பேஸ்ட்’ கடைசியா, ‘என்னோட பிரஷை தூக்கிப் போட்டா, நுண்ணுயிருங்க தின்னுட்டு மண்ணை வளமாக்கும், உன்னோட பிளாஸ்டிக் பிரஷை தூக்கிப் போட்டா, மண்ணுல இருக்குற நுண்ணுயிரிகளைக் கொல்லும்னு’ சொன்னேன். எல்லாரும் பேய் அறைஞ்ச மாதிரி ஆயிட்டாங்க. கோர்ட்டுக்குள்ள, ’எங்க ஊர் விவசாயிங்க வேப்பந்தழையையும், மாட்டுக் கோமியத்தையும் கலந்து, பூச்சி விரட்டிய தெளிக்கிறான். உங்களுக்கு மேரி மாதா மாதிரி எங்களுக்கு மாரியாத்தா பொம்பளை தெய்வம். அவளுக்கு வேப்ப இலையில தான் மாலை போடுவோம்’னு சொல்லி சங்கப் பாடல் தொடங்கி, கூழ் வார்க்கும் போது பாடும் கும்மிப் பாட்டுவரை எல்லாத்தையும் பாடிக் காட்டினேன்.” இந்த வெற்றிக்குப் பிறகு நம்மாழ்வாருக்கு “வேம்பாழ்வார்” என்கிற பட்டம் வழங்கப்படிருக்கிறது.

இயற்கையுடன் இயைந்த வாழ்வை விரும்பிய அவர், இறுதிவரை அதனையே கடைபிடித்துள்ளார். உயிர்ச் சூழல் பன்மயம் நம் மண்ணிற்குப் புதிது அல்ல என்பது குறித்து அவர் தரும் விளக்கம் நம்மை வெகுவாய்ச் சிந்திக்க வைக்கிறது.

விகடன் இந்த மாபெரும் மனிதரின் வாழ்க்கையை மிக எளிய நடையில் சீரிய முறையில் தந்திருப்பது பாராட்டுதற்குரியது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் சம்பவங்கள் வண்ணச் சித்திரங்களாக விரிவது வாசிப்பிற்கு மேலும் சுவை கூட்டுகிறது.

தன்னை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்போடு பிணைத்துக் கொள்ளாமல் இந்தியாவின் பல கிராமங்களுக்கும் சென்று அலைந்து திரிந்து இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை நாடறியச் செய்திருக்கிறார் நம்மாழ்வார். தான் சரி என்று நினைக்கும் விஷயத்திற்காக எத்தகைய வாய்ப்புகளையும் உதறத் தயங்காதவர். எந்தக் கடினமான சூழலையும் தனக்குச் சாதகமாக்கியிருக்கிறார். அவரது வாழ்கையே அனைவரும் படித்துப் பின்பற்ற வேண்டிய ஒரு பாடம்தான். இந்நூலைப் படித்து முடிக்கையில் உடனடியாக இயற்கை விவசாயத்தில் நாமும் இறங்க வேண்டும் என்ற உந்துதல் தோன்றாமல் இருக்க முடியாது.

பதிப்புரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதைப் பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வாருக்குக் கொடுக்கலாம். இன்றைய இளைஞர்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல்.

இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சுட்டவும்.?

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -