நெஞ்சம் மறப்பதில்லை – திரைப்பட விமர்சனம்

- Advertisement -


செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, ரெஜினா கசாண்ட்ரா, நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்த நெஞ்சம் மறப்பதில்லை படம் இந்த வாரத்தில் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு உளவியல் திகில் (psychological thriller)  வகையைச் சேர்ந்தது என்று பரவலாக பேசப்பட்டு வந்தாலும் உண்மையிலேயே அவ்வாறு இருக்கிறதா என்று இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.


ஆங்கிலப் படங்களில் “கிறிஸ்டியன் மூவி” என்று ஒரு தனிப்பட்ட வகை(Genre) உண்டு. இந்தப் படங்கள் அனைத்தும் மதம் மற்றும் மதம் சார்ந்த கோட்பாடுகளை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும். அதிகப்படியான ஆங்கிலம் பேசும் நாடுகளில் கிருத்துவ மதமே பரவலாகக் காணப்படுவதால் இந்த வகைக்கு கிறிஸ்டியன் மூவி என்று பெயரிடப்பட்டது. கிருத்துவர்கள் மட்டுமல்லாது அனைவரும் பார்த்து ரசிக்கும்படியாக மதங்களின் புனித நூல்களில் இருக்கும் உன்னதமான பல கருத்துக்கள் இந்தப் படங்களில் நிறைந்திருக்கும். நெஞ்சம் மறப்பதில்லை படம் தொடங்கியவுடன் பல்வேறு விதமான கத்தோலிக்க கிறிஸ்தவ நம்பிக்கைகள் இந்த படத்தில் காட்டப்படுகிறது. ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்த ரெஜினா கசாண்ட்ரா தன்னுடைய வருமானம் முழுவதையும் அந்த இல்லத்திற்கே கொடையாக கொடுக்கிறார். மேலும் ஒரு எளிமையான சேவை மனப்பான்மை கொண்ட வாழ்வை தேர்ந்தெடுத்து வாழ்கிறார். இது போன்ற பாத்திரங்கள் பல்வேறு படங்களில் வந்திருந்தாலும் மதத்தை முன்னிலைப்படுத்திய பல்வேறு காட்சிகள் இருப்பதால் இந்தப் படமும் ஒரு “கிறிஸ்டியன் மூவி” வகையைச் சார்ந்தது என்று யோசிக்கத் தோன்றுகிறது. படத்தின் ஆரம்பத்திலேயே காட்டப்படும் சில அமானுஷ்ய காட்சிகள், இது ஒரு திகில் படமாக இருக்கக்கூடும் என்கின்ற சந்தேகத்தையும் வரவழைக்கிறது. 


படத்தில் எஸ் ஜே சூர்யா வந்தவுடன் தான் முக்கிய கதை ஆரம்பிக்கிறது. காமுகனாக எஸ் ஜே சூர்யா காட்டும் முகபாவனைகள் சிரிப்பையும் பயத்தையும் ஒருங்கே வரவழைக்கிறது. அவர் நடிக்கிறாரா இல்லை இயல்பாக இருக்கிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிகவும் நேர்த்தியான நடிப்பு. மொத்த படத்தையும் தூக்கி நிறுத்தும் ஒற்றை கதாபாத்திரமாக எஸ் ஜே சூர்யா விளங்குகிறார். கதையில் வரும் ஒரு கொலையும், கொலைக்குப் பின்னால் வரும் பேய் பழிவாங்கும் படலமும் தான் படத்தின் இரண்டாம் பாதி. ஒரு கிருத்துவ-திகில் கதையை சுவாரஸ்யமாக கலந்து கட்டி செல்வராகவன் நமக்கு கொடுத்து இருக்கிறார் என்று எதிர்பார்த்தால் இறுதியில் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.


நான் முன்பே கூறியது போல ஆங்கிலத்தில் பல்வேறு தரமான “கிறிஸ்டியன் மூவி” வந்துள்ளது. இந்த படங்களின் வெற்றிக்கு காரணம் அதன் முழு கவனமும் எந்த ஒரு மறைமுகமான குறிக்கோளும் இல்லாமல் மதத்திலுள்ள நல்ல கோட்பாடுகளை எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதனால் தான். ஆனால் இந்த படத்தில் செல்வராகவன் அதனை தவறாக கையாண்டிருக்கிறார் என்று யோசிக்கத் தோன்றுகிறது. மற்றவர்களை தாழ்த்தி காட்டுவதன் மூலமாக ஒரு சாராரை உயர்த்திக் காட்டுவது எப்பொழுதுமே ஒரு தரம் தாழ்ந்த மனநிலையை மட்டுமே குறிக்கும். இந்தப்படத்தில் மாற்றுமதம் மட்டுமல்லாது கடவுள் எதிர்ப்பாளர்களை அடையாளப்படுத்தும் சில பெயர்களைக் கூட செல்வராகவன் தேவையே இல்லாமல் திணித்து உள்ளார். அப்படிப்பட்ட பெயர்களும் காட்சிகளும் இந்த படத்தின் கதைக்கு எந்த விதத்திலும் துளியும் பயன்படவில்லை. படத்தில் இதுபோன்று நிறைந்துள்ள பல்வேறு காட்சிகளில் ஒன்றே ஒன்றை வேண்டுமானால் எடுத்துக்காட்டுக்கு கூறிவிடுகிறேன். ஒரு அபலைப் பெண்ணை பலவந்தப்படுத்தி பின்பு கொலை செய்யும் வில்லனை தேடி விசாரிப்பதற்காக தேவாலயத்தில் இருந்து ஒரு கன்னியாஸ்திரி வருகிறார். அந்த வில்லன் தன்னுடைய அறையில் இருந்து வெளிவரும் பொழுது பின்னணியில் இந்து மதத்தில் கடவுளை துயிலெழுப்பும் துதி பாடப்படுகிறது.  செல்வராகவன் எதற்காக இப்படிப்பட்ட பல்வேறு காட்சிகளை வைத்துள்ளார் என்பது அவருக்கே வெளிச்சம். இருந்தாலும் திகில் படத்திற்கே உரிய பரபரப்பு சில காட்சிகளில் படத்தில் வந்து போகிறது. ரெஜினா, நந்திதா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா போன்றவர்கள் படத்திற்கு தங்களுடைய பங்களிப்பை எந்த குறையும் இல்லாமல் செய்து கொடுத்துள்ளனர். 


இந்த படத்தில் மாற்று மதத்தை பற்றி எந்த ஒரு நேரடியான எதிர்ப்பும் கூறப்படவில்லை. இருந்தாலும் பல்வேறு காட்சிகளில் இலைமறைகாயாக செல்வராகவன் காட்டும் மாற்று மத வெறுப்பு பளிச்சிடுகிறது. ” வேற்றுமையில் ஒற்றுமை” எனும் அடிப்படைக் கோட்பாடுதான் இந்திய சமுகத்தின் அமைதியை கட்டிக்காக்கும் ஒற்றை இழையாக இருந்து வருகிறது. இந்தப் படத்தின் ஆழத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் வன்மம், நம்முடைய அடிப்படைக் கோட்பாட்டை தகர்த்தெரிந்து துருவப்படுத்துதல்(Polarization) எனப்படும் ஆபத்தான நிலைக்கு நம்மை தள்ளுவதற்கு உதவி செய்வது போல் உள்ளது. நேரடியாக சொல்லப்போனால், கிருத்துவ மதத்தில் உள்ள அன்பு சார்ந்த கருத்துகள் மற்றும் திகில் படத்திற்கு உரிய விறுவிறுப்பு ஆகிய இரண்டு நல்ல விஷயங்களையும் வெறுப்பு எனும் விஷ விதையின் மேலே முலாம் பூசிக் கொடுக்க செல்வராகவன் முயன்றுள்ளார். இதனை ஒரு கலைப்படைப்பாக மட்டும் பார்க்கும் அளவிற்கு நமது கலாச்சாரம் இடம் கொடுக்காது. எந்த ஒரு கலை வடிவத்திற்கும் நாம் உயர்ந்த மதிப்பளிப்பதால் தான் நாடகக் கலைஞர்களுக்கு இந்திய விடுதலைப் போராட்ட விழிப்புணர்வை நாடகங்களின் மூலமாக மக்களுக்கு கொண்டு சேர்க்க முடிந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் நாடகக் கலையில் சிறந்து விளங்கிய பல்வேறு கலைஞர்கள் தலைவர்களாகவும் வர முடிந்தது. அப்படியிருக்கும் நிலையில், பல்வேறு வித்தியாசமான படங்களை நமக்கு கொடுத்த செல்வராகவன் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும்.


உலகில் சயனைடு போன்ற கொடும் விஷத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட இனிப்பான சர்க்கரையை அதிகமாக சாப்பிட்டு சர்க்கரை நோயினால் உயிர் இழப்பவர்கள் தான் மிகவும் அதிகம். அதுபோலவே, நேரடியான வன்மத்தை வெளிப்படுத்தும் படங்களை விட இதுபோன்ற இலைமறைகாயாக வன்மத்தை வெளிப்படுத்தும் படங்களால் சமூகத்திற்கு விளையும் தீங்கு அதிகமாகத்தான் இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

இளையகருப்பன்
இளையகருப்பன்
தமிழ் மீது பற்றுக்கொண்ட குழந்தை. வரலாறு, அறிவியல் மற்றும் பயணங்கள் மூலமாக உலகை தினமும் கற்றுக்கொள்ள முற்படும் மாணவன். கவிதைகள் மீது காதல் கொண்ட இளைஞன். தொழில்முறையில், கணிப்பொறி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளன், மாலைநேர எழுத்தாளன். மெய்ஞ்ஞானத்தை பகுத்தறிந்து கொள்ளத் துடிப்புள்ள முதியவன்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -