பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 29

அவன் மனத்தேரிலே நீயும் கொடிமுல்லையாம் !!!!!!!!!!!!!!

- Advertisement -

கல்யாணக் கொண்டாட்டத்தில் நம் எஸ்.பி.பி இருக்கிறார் என்று சொன்னேனல்லவா? அங்கே என்ன செய்கிறார் என்று பார்க்கலாம். 

அட இவர்தான் பாடுகிறாரா? தங்கைக்குக் கல்யாணமென்று கொண்டாட்டத்தில் இருக்கும் ஓர் அண்ணனின் உடலுக்குள் மாயாவிபோல் புகுந்து இவரே வாழ்த்திப் பாடுகிறார்போலும். குரலிலும் உணர்விலும் அருவியாய்ப்பொங்கி வழிந்து நதியாய் ஓடுகிறது மகிழ்வு.

கல்யாணம் என்றாலே அதுவொரு கூட்டு மகிழ்ச்சியைத் தரும் நிகழ்வு. பெண்ணும் மாப்பிள்ளையும் முடிவாயிற்று என்றாலே அன்றிலிருந்து கல்யாணம் வரையிலும் நடக்கின்ற கொண்டாட்டங்களைப் பார்த்தால் ஒரு குட்டித்திருவிழாபோல இருக்கும். உறவுகள் எல்லோருக்குமே ஒரு கொண்டாட்ட மனநிலையைத் தந்துவிடும்.

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று முன்னோர் சொல்லியிருக்கின்றனர். ஆயிரம் காலத்துப் பயிர் என்பதைவிடவும் ஆயிரமாயிரம் வாழ்த்துகள் அங்கே விதைக்கப்பட்டுப் பயிராகும் என்பதே மனம் மகிழ்த்தும் உண்மை.

வாழ்த்து என்பது தமிழனின் தலையாய பண்பு, இன்னும் சொல்லப்போனால் தனித்துவமான பண்பும்கூட… ஆம், ஒரு குழந்தை பிறந்ததும் பாடுகின்ற தாலாட்டுப் பாட்டினில் முழுக்கவும் அப்பிள்ளையினை வாழ்த்தித்தான் பாடுகிறோம். ஒரு மனிதன் இறந்துவிட்டால் பாடுகின்ற ஒப்பாரிப் பாட்டிலும் அம்மனிதனின் புகழினைச் சொல்லி சொல்லி வாழ்த்தித்தான் ஆற்றாமையோடு பாடுகிறோம். மகிழ்விலும் பெருமிதத்திலும் அழுகையிலும் கூட நாம் வாழ்த்துகிறோம். அட இவ்வளவு ஏன்? மிகுந்த சினத்தில் கூட ” நீ நல்லாயிருப்பா ” என்றே சொல்லிச் சண்டையிடுகிறோம். இத்தனைக்கும் மேலாக இறைவனையே வாழ்த்தி வழிபடுவதுதான் நம் தமிழ்மரபு. இப்போது புரிகிறதா நான் ஏன் வாழ்த்து என்பது தமிழனின் தலையாய தனித்துவமான பண்பு என்று சொன்னேனென்று?

இங்கே தன் தங்கைக்குக் கல்யாணம் என்று ஓர் அண்ணனுக்குத் தாங்கவொண்ணாக் கொண்டாட்டம்.. கொண்டாட்டம் என்றாலே அங்கு இசையும் பாட்டும் இருக்கவேண்டும்.. பாட்டு என்றாலே அங்கே நம் பாடும் நிலா எஸ்.பி.பி இருக்க வேண்டும்… இது இசையுலகின் மாற்றமுடியாத மகிழ்வான விதி. இது நம் எஸ்.பி.பி தனித்து ஆட்சி செய்யும் ஒரு தனிப்பாட்டு.

என் கண்ணப் போல நெனச்சித்தான் ஒன்ன வளத்தேன்

உன் எண்ணம் போலக் கல்யாணம் பேசி முடிச்சேன்

என் கண்ணப் போல நெனச்சித்தான் ஒன்ன வளத்தேன்

உன் எண்ணம் போலக் கல்யாணம் பேசி முடிச்சேன்

மகராசாவைப் போல் நல்ல மாப்பிள்ளையாம் – அவன்

மனத்தேரிலே நீயும் கொடிமுல்லையாம் –

இதச் சொன்னா ஒனக்கேன் வெக்கம்?

ஒன் வாழ்வில்தானே என் சொர்க்கம்…

இயல்பான ஒரு மென்தாளத்தில் இல்லாது கொஞ்சம் வேகமாய்ச் சலசலத்து ஓடும் சிற்றாறின் நீரோட்டம் போலப் பாடியிருக்கிறார் மேற்சொன்ன வரிகளை. பேச்சுவழக்கிலேயே எழுதப்பட்ட பாடலைக் கொஞ்சமும் சுவை மாற்றாது அப்படியே உயிர்த்தன்மையோடு பேச்சுவழக்கில் பாடி அயர்த்துவதில் நம் பாடும் நிலாவுக்கு நிகர் அவரேதான். அப்படிச் சீரான வேகத்துடன் ஓடும் நதியானது சட்டென்று ஒரு சிறு வட்டமடித்துபின் தன் பாதையில் மீண்டும் ஓடுவதைப்போல இறுதி இருவரிகளைப் பாடுகிறார்.  நீரானது வட்டமிடுகையில் அதன் வேகம் சற்றே மாறுபட்டு ஒன்றாய்க் குவிந்து அங்கேயொரு சிறு சுழலை உருவாக்கி விடும். அது பார்ப்பதற்கு அத்துணை அழகாக இருக்கும். அதேபோலத்தான் அவ்விறுதி வரிகளில் நம்மைச் சுருட்டித் தனக்குள் இழுத்துக் கொள்கிறார் எஸ்.பி.பி.. அதிலும் ஒனக்கேன் வெக்கம்? என்று பாடிச் சிரிக்கும் இடமானது இயல்பாகவே தங்கைகளைச் சீண்டிக் கேலிசெய்யும் அண்ணன்களின் குரலாகவே ஒலிக்கிறது. அவ்விரு வரிகளும் பொதுவான வரிகள்தான். அதைக் காதலன் காதலிக்குப் பாடினாலும் பொருந்திவிடும்தான். அதனால் மிகக்கவனமாக அதைக் கையாண்டு முழுக்க முழுக்க ஓர் அண்ணனின் பாசஉணர்வினை மட்டுமே தன் குரலில் வெளிப்படுத்தியிருப்பார் நம் எஸ்.பி.பி. 

அடக்கத்த ஒடுக்கத்த கடைபிடிச்சி

புருஷன் குடும்பத்தில் கௌரவத்த நெல நிறுத்தி

அடக்கத்த ஒடுக்கத்த கடைபிடிச்சி

புருஷன் குடும்பத்தில் கௌரவத்த நெல நிறுத்தி

குத்துவிளக்காகவே நீயும் ஒளிவீசணும்

குலப்பெண்ணாகவே நீயும் புகழ் சேக்கணும்

நம் மனித மனமானது நிலையில்லாது அலைபாய்ந்து கொண்டிருக்கும் ஒன்று. அதற்குப் பிடிக்காத ஒன்றுதான் அறிவுரை சொல்வது. மிகவும் வேண்டப்பட்டவர் மிகமிக வேண்டப்பட்ட விதத்தில் சொல்லும்போது சில அறிவுரைகளை அது ஏற்றுக்கொள்ளும்.. நாம் சொல்லும் அறிவுரையானது வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதுபோல இருக்கவேண்டும்.. வாழைப்பழத்திற்கும் வலிக்கக்கூடாது, ஊசிக்கும் வலிக்கக்கூடாது.. அப்படிப்பட்ட அறிவுரைகள் கொஞ்சமேனும் மனத்தினில் நிலைத்து நிற்க வாய்ப்புண்டு. அடர்வான சொற்களால் சொல்லப்படும் அறிவுரையைவிடவும் எளிமையான இலகுவான சொற்களைச் சுமந்துவரும் அறிவுரைகள் எளிதில் காதுக்குள் நுழைந்து மணவீட்டிற்குள் சென்று உட்கார்ந்துவிடும். இன்னொரு வீட்டிற்கு வாழப்போகும் தன் தங்கைக்கு அப்படித்தான் இந்த அண்ணனும் அறிவுரை சொல்லிப்பாடுகிறார். ..

மேற்சொன்ன வரிகளில் இலகுவாக அறிவுறுத்திப் பாடிவிடுபவர் அடுத்த இறுதிவரிகளில் அவளுக்கான ஆசையைத் தன்னாசையாக எண்ணி அங்கே பாடுகிறார்.

இந்த அண்ணன் கையில் தவழ

ஒரு மழலை வேணும் மகிழ –

அந்தச் சிரிப்புக்கு ஈடுயிணை எங்கேனும் உண்டா? சொல்லுங்கள். எஸ்.பி.பிக்கே உரித்தான தனிச்சிறப்பு அது!

முதல் சரணம் கணவனெனும் உறவில் தொடங்குகிறது. இரண்டாம் சரணம் குடும்பம் என்னும் அமைப்பினைச்சொல்லிக் குழந்தைச் செல்வத்துடன் நிறைவடைகிறது. பல்லவியில் அண்ணன் தங்கை உறவின் பிணைப்பு சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி அழகாகவும் சீராகவும் அடுக்கப்பட்டிருக்கும் சொற்கோப்புக்குள் தன் குரலெனும் மாயத்தால் நம்மைக் கட்டிப்போடுகிறார் எஸ்.பி.பி.

தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம்

தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம்

கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும்

தங்கச்சிக்குக் கல்யாணமாம்

தெருவெங்குமே கொண்டாட்டமாம்.

பீப்பி பீப்பீப்பீ டும்டும்டும் பீப்பீப்பீ டுடும்டும்டுடும்டும்டும்

— இதுதான் பல்லவி. இது இப்பாடலில் நான்கு முறை பாடப்படுகிறது. நான்கிலுமே முடிக்கும் வரிகளில் வேறுவிதமாகப் பாடியிருக்கிறார் .. கொஞ்சம் துள்ளல், கொஞ்சம் கேலி, மகிழ்வான சிரிப்பு எனக் கலந்துக்கட்டுப்பாடி நான்குமுறையும் நான்கு பரிமாணங்களைத் தன் குரலில் காட்டியிருக்கிறார்.

பொதுவாக நாம் பேசும்போது வல்லின எழுத்துக்களை நன்கு அழுத்தித்தான் பலுக்குவோம்.. அதோடுகூட சில மெல்லின இடையின எழுத்துக்களையும். அதை அப்படியே இப்பாடலில் பாடியிருப்பதை நீங்கள் கேட்கலாம். இடையின ரகரத்தை அழுத்தமேற்றி வல்லின றகரம்போலப் பாடியிருப்பார். ஒவ்வொரு பாடலுக்கும் போட்டியாக நம் எஸ்.பி.பி அவரது முந்தைய பாடல்களைத்தான் எடுத்திருக்க வேண்டும். அதனால்தான் அதைவிடவும் சிறப்பாகவும் சிறுசிறு மாயங்களுடனும் பாடிவிடுகிறார். 

இப்பாடலில் வழக்கம்போல பல்குரல் வித்தைகள் ஏதும் அவர் செய்யவில்லை.. மாறாக நம் டி.ஆரின் குரலையே படியெடுத்துத் தன் குரல்வளைக்குள் ஒட்டிக்கொண்டு பாடியதைப்போல அச்சு ஒட்டாக அவரது குரலைப்போலவே தன் குரலை மாற்றிப் பாடல் முழுவதும் பாடியிருக்கிறார்.  பாற்கடலில் இருக்கும் மாயக்கண்ணனைப்போல நம் எஸ்.பி.பி பாட்டுக்கடலில் இருக்கும் மாயக்கண்ணன்.

தங்கைக்கோர் கீதம் என்ற படத்தில் டி.யாருக்காக நம் எஸ்.பி.பி பாடிய பாடல்தான் இது. பல்வேறு இசைத்த தொகுப்பினைக் கேட்ட உணர்வினை நமக்குக் கொடுத்திருப்பார் இசையமைப்பாளரும் இப்பாடலை எழுதியவருமான தேசிங்கு இராஜேந்தர். இப்பாடலில் முதல் சிறப்பு எஸ்.பி.பி என்றால் அடுத்த சிறப்பு நம் டி.ஆரின் நடனம். பாடலின் இடையிசைப் பகுதிகளில் அவரின் நடன அசைவுகளைப் பார்க்கத் தவறாதீர்கள் மக்களே.  இப்பாடலைப் பலமுறை பார்த்தபிறகு எனக்கொரு பழமொழியே தோன்றிவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆம். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பதைப்போல தேசிங்குஇராஜேந்தரின் கற்றை முடியும் தாளம் போடும் என்பதுதான் அது….

சரி.. தங்கைக்கு வாழ்த்து பாடியாயிற்று.. இனி அடுத்து என்ன? என்று நாம் கேட்க முற்படுவதற்குள் எங்கேயோ ஓடிவிட்டார் எஸ்.பி.பி. பின்னாலேயே துரத்திக்கொண்டு சென்றால் ஒரு பெண்ணிடம் மயக்குமொழி பேசிக்கொண்டு நிற்கிறார். நீயும் வெட்கத்தை விட்டுவிட்டால் உனக்குச் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் என்று சொல்கிறார். என்னதான் நடந்திருக்கும் என்று அடுத்த கிழமைவரை சிந்தித்துக்கொண்டே இருங்கள்… நானும் செவ்வாயன்று ஓடோடி வந்து சொல்லிவிடுகிறேன்.

தேசிங்கு இராஜேந்தரின் மைதானத்தில் நிலா விளையாடும்…!!!!!!

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

4 COMMENTS

  1. இயல்பான ஒரு மென்தாளம் போட்டுக்கொண்டு படிக்கும் படி இருக்குங்க

    • மகிழ்வன்புங்க நீதி … தொடர்ந்து தங்கள் ஊக்கத்தைப் பின்னூட்டம் வழியே தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  2. மீண்டும்… ஒரு பாடலின் மூலம் கல்யாண வீட்டிற்கே கைபிடித்து அழைத்துச் சென்றிருக்கிறீர்கள். அதில் அண்ணன் தங்கை குடும்ப உறவுகள் அதன் துள்ளல், மகிழ்ச்சி ஆகியவற்றை எஸ்பிபி அவர்களும், டிஆர் அவர்களின் பாடல் வரிகளிலும் இசையிலும் காலத்தால் அழியாத பாடல் என்றே சொல்லலாம். மீண்டும் பழைய நினைவுகளுக்கு அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு முறையும் தனது உச்சரிப்பு மூலமும் குரலில் இனிமையாலும் ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்ட எஸ்பிபி போல பாடும் நிலா தேன் கவிதை என்ற இந்த 29 வாரங்களில் எங்கள் இதயம் எங்கும் நிரம்பி விட்டீர்கள்.
    நன்றியோடு.. மனமார்ந்த வாழ்த்துகள் கவிதாயினி பிரபாதேவி அவர்களே ???❣️❣️

    • தங்களின் தொடர்ந்த பேரூக்கத்திற்கு எனது பேரன்பு அண்ணா.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -