பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 33

மானே மயக்கம்தானே .. மானே மயக்கம்தானே..!!!!!!!!!!

- Advertisement -

தேசிங்கு இராஜேந்தரின் பாடல்வரிகளில் எவ்வாறெல்லாம் கோலோச்சினார் நம் எஸ்.பி.பி என்று கடந்த பத்துக் கிழமைகளில் ஒவ்வொரு பாடலாகப்  பார்த்தோம்.. அந்தப் பத்துப்பாடல்களைத் தாண்டியும் அவர் கோலோச்சிய சில பாடல்களை இன்று இப்பதிவில் நாம் காணலாம்.

அதில் முதலாவதாக நாம் பார்க்கப்போவது தன்னந்தனி காட்டுக்குள்ள என்ற பாடல். என் தங்கை கல்யாணி என்ற படத்தில் வரும் அப்பாடலொடு சேர்த்து மொத்தம் எட்டுப்பாடல்களைப் பாடி அயர்த்தியிருக்கிறார் நம் பாடும்நிலா.

இப்பாடலின் தொடக்க இசையே பேரூக்கத்தை நம் மனத்தில் புகுத்திவிடும். துள்ளலிசையில் அமைந்த பாடல் இது.. நம் பாடும்நிலாவுடன் இணைந்து பட்டையைக் கிளப்பியிருப்பவர் சின்னக்குயில் சித்ரா. குற்றால அருவியில் குளிர குளிரக் கொண்டாட்டமாய்க் குளிப்பது போன்றதொரு உணர்வினைக் கடத்திவிடுகிறது இப்பாடல். அதிலும் நம் எஸ்.பி.பி குரலில் பாடலெங்கும் தூவியிருக்கும் சிணுங்கல்களையும் கொஞ்சல்களையும் கேட்கையில் காதுகளில் தேனருவி பாய்கின்றது.. 

மழை செஞ்ச ஜாலம் சில நனஞ்ச கோலம்

யம்மா யம்ம ய ம யம்மா

ஹோ யம்மமமா மா மா

துணைக்கு இருக்கேன் கிட்ட வாயேண்டி

துணிஞ்சு வந்து ஒண்ணு தாயேண்டி

நந்தவனம் நனைஞ்சுபோச்சு

இந்த மனம் கரஞ்சு போச்சு

அம்மம்மா ஹோய் அம்மமா

யம்மா யம்மா ஹோ ய ம யம்மா

மேற்சொன்ன இவ்வரிகளையெல்லாம் பாடும்நிலா பாடும்போது அமிழ்தம் அருந்திக்கொண்டே பாடியிருப்பாரோ என்று  தோன்றுகிறது. அவ்வரிகளில் மிளிரும் தமிழின் சுவையையும் சொல்லாமல் கடந்துசெல்ல முடியாது.  அதிலும் அந்தச் ” சில நனைஞ்ச கோலம்” என்ற வரிக்காவே நம்ம டி.ஆர்க்கு பெரியதொரு வணக்கம். தமிழ்க்காதலன் ஒருவனின் வரிகளை மொழிக்காதலன் ஒருவன் குரலிசைத்தால் அங்கே உருவாவதுதான் இம்மாதிரியான தெய்வீகப்பாடல். கூடுதல் சிறப்பாக இப்படத்தில் எட்டு பாடல்களை நம் எஸ்.பி.பி பாடியிருக்கிறார். எண்ணிப்பார்க்கையிலே உள்ளம் உவகையிலும் பெருமையிலும் விம்முகிறது.              

அடுத்து ஒரு பாடல் இரயில் பயணங்களில் படத்திலிருந்து..  அட யாரோ பின்பாட்டு பாட . இதுவொரு குத்துப்பாட்டு வகைமை என்றுதான் சொல்லவேண்டும். குத்துப்பாட்டு என்றால் கொண்டாட்டமான ஆடிப்பாடும் மனநிலையை உருவாக்க வேண்டும் என்பதுதானே விதி. அதற்காக எவ்விதத்திலும் மொழிக்கு இடர் ஏற்படுத்தாது, உயர்நிலைச் சொற்களைக் கையாண்டு தன் கற்பனைக் குதிரையை ஓடவிட்டிருப்பார் நம் டி.ஆர்.! குத்துப்பாட்டுகளில் கூட கொஞ்சும் தமிழின் இனிப்பினைத் திகட்ட திகட்டத் தந்த கவிஞன் நம் டி.ஆர்.

மானே மயக்கம்தானே

மானே மயக்கம்தானே

அடி தாலி கட்டத்தாண்டி

மெல்ல தேதி சொல்லி வாடி ஹோய் ஹோய் ஹோய்

அடிக் கைப்பட்டு மெய் பட்டு மைப்பொட்டு கலைஞ்சாலென்ன

தேனு கொழச்ச வீணை சுரத்த

நீ தேடிப் புடிச்சே பேசிச் சிரிச்சே

இந்த வரிகளிலெல்லாம் எஸ்.பி.பியின் குரலும் டி.ஆரின் தமிழும் காதலன் காதலிபோல கட்டித்தழுவிடும் அழகுணர்வினைக் கேட்டு மகிழலாம்.

அடுத்து ஒரு தாயின் சபதம் திரைப்படத்தில் வருகின்ற அம்மாடியோ ஆத்தாடியோ பாடல். இதுவும் குத்துப்பாட்டு வகைமைதான். ஆனால் வரிகளில் விளையாடும் தமிழின் பொலிவினைப் பாருங்கள்.

அம்மாடியோ ஆத்தாடியோ

அவள் மேனிதான் கண்ணாடியோ

பிரேக் டான்சர் பிரேக் டான்சர்

இறந்திட்ட கிளியோபட்ரா பிறந்திட்ட மாயம் என்ன?

பறந்திட்ட கிளியப் பாத்து பிரம்மன்தான் விடச்சதென்ன?

மகராணியாய் ஏற்றிடவா மலரடியைப் போற்றிடவா?

தகதிமி ஸ ரி ஸா திமிகிட நி ஸ ரி

ஜுணுதக த நி ஸ ப ப ப ப பா…

இவ்வரிகளிலெல்லாம் சும்மா புகுந்து விளையாடியிருப்பார் எஸ்.பி.பி. அதிலும் அந்த இசையொலித் துணுக்குகளை அவர் பாடும் அழகைக் கேட்க நாம் என்ன தவம் செய்திருக்க வேண்டும்! முறைப்படி இசையைக் கல்லாதவர் போலவா தெரிகிறது? இசையையே காலையில் தேநீராகக் குடித்திருப்பார்போலும். உமிழும் சொல்லெல்லாம் தேனாகவன்றோ சொட்டுகின்றது! இங்கும் நம் டி.ஆரின் தமிழினை வியக்காமல் செல்ல முடியுமா என்ன? விடைத்தல் என்றதொரு சொல்லை இதுவரையிலும் வேறு யாரேனும் தம் பாடல்களில் எழுதியிருக்கின்றனரா? இல்லையென்றேதான் தோன்றுகிறது. அப்பப்பா ..என்னவொரு மொழியாளுமை கொண்ட கவிஞன்!

அடுத்து மைதிலி என்னைக் காதலி என்ற படத்திலிருந்து ஒரு சோகப்பாடல். நானும் உந்தன் உறவை நாடிவந்த பறவை என்னும் பாடல். பாடலின் தொடக்கத்தில் இருவரிகள் பாடியபின் ஆஆஆஆ ஆஆ ஆஆ  என்றோர் இசைப்பண்ணினை  நம் எஸ்.பி.பி பாடும்போது நம் கண்ணீர்ச்சுரப்பிகள் குபுகுபுவென கண்ணீரைச் சுரக்கத் தொடங்கிவிடுகின்றன. ஒரு பாடலின் தன்மையையும் சூழலையும் அதில் புதைந்துள்ள உணர்வினையும் முழுதாக உள்வாங்கிப் பாடும் பாடகர்கள்தாம் அக்காலகட்டத்தில் மிகுந்து இருந்தனர். அப்படி முழுதாய் உள்வாங்கியதை அவர்தம் குரல்வழியே அப்படியே கொஞ்சமும் குறையாமல் கேட்பவர்க்கும் அதைக்கடத்தும் வித்தை சிலர்க்கே இருந்தது. அதில் முதன்மையானவர் நம் எஸ்.பி.பி. நன்றாகச் செழித்து நிறைந்து வழியும் தேன்கூட்டிற்குத் தீ வைத்துவிட்டால் அத்தேனீக்கள் ஓலமிடுமல்லவா? அவ்வோலத்தினொடு இணைந்தே அக்கூட்டின் தேனும் வழிந்து சிந்துமல்லவா? அதைப்போன்றதொரு நிலையினைக் குரலில் கொண்டுவந்து சோகத்தின் ஓலமிடுதலையும் தேனின் இனிமையினையும் ஒன்றாய்க்கலந்து நம்மை விம்மி விம்மி அழவைத்து விடுகிறார் நம் பாடும் நிலா. 

எண்ணெய் இழந்த பின்னும்

எரிய துடிக்க எண்ணும்

தீபம் போல மனம் அலைகிறது

என்னை இழந்த பின்னும்

உன்னைக் காக்க எண்ணும்

இதய அரங்கம் இங்கு அழைக்கிறது

வாழ்வது ஒரு முறை

உனக்கென வாழ்வது முழுமை என்பேன்

சாவது ஒரு முறை

உனக்கென சாவதே பெருமை என்பேன்

நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை

தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை

சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனைந்ததடி

உயிரே… உயிரே…

இரண்டாவது சரணத்தை அழாமல் கேட்டுக் கடந்துவிடுவது என்பது நடக்காத செயல். கண்கள் அழாவிட்டாலும் கட்டாயம் நம் மனம் அழும். உயிரை உலுக்கும் குரலும் நெஞ்சை அறுக்கும் சோக வரிகளும் இணைந்தால் அழுகை பொங்காமல் வேறென்ன செய்யும்? அதிலும் கடைசியில் பல்லவியை மீண்டும் பாடுகையில் நம் எஸ்.பி.பி குரல் உடைந்து கமறுகிறது..சுடுமணலில் மீனாய்த் துடிக்கின்றது.. நெஞ்சைப்பிளந்து குருதியை உறையவைக்கும் குரல் அது..!

எண்ணெய் இழந்த பின்னும் எரியத் துடிக்க எண்ணும் தீபம் போல மனம் அலைகிறது என்னும் ஒற்றைவரியே நிறைகோலின் முள்ளாய் நின்று நம் டி.ஆரின் தமிழின் பெருமையினை எடைபோட உதவிடுகிறது.

அடுத்து உயிருள்ளவரை உஷா திரைப்படத்திலிருந்து இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ என்ற பாடலைப் பார்ப்போம். இதுவொரு இணைப்பாட்டு. நம் எஸ்.பி.பியுடன் சேர்ந்து பாடியிருப்பவர் சசிரேகா.

ரதி என்பேன் மதி என்பேன்

கிளி என்பேன் நீ வா – என்ற வரியில் நீ வா என்று பாடும்போது மட்டும் குரல்வளையில் ததும்ப ததும்ப ஏக்கத்தை வழிய விட்டிருப்பார்.

முகத்தைத் தாமரையாய்

நினைத்து மொய்த்த வண்டு

ஏமாந்த கதைதான் கண்கள்

சிந்து பைரவியின் சிந்தும் பைங்கிளியின்

குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள்

பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்

அதில் பரதமும் படிக்குது அபிநயம்

அமுதம் என்ற சொல்லை

ஆராய்ச்சி செய்வதற்கு

அவனியில் அவளே ஆதாரம்

பாவை இதழது சிவப்பெனும் போது

பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது?

ஒவ்வொரு வரியையும் கேட்கையில் எதை வியப்பது? எதை விடுவது? என்றே தெரியவில்லை. அப்படியொரு இக்கட்டான நிலையில் நம்மை நிறுத்திவிடுகின்றனர் டி.ஆரும் எஸ்.பி.பியும். இருப்பூர்தித் தண்டவாளங்கள்போல இருவரின் திறமையும் ஒருங்கே சென்றதால்தான் தரத்திலும் இனிமையிலும் உயர்ந்து சிறந்த  பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

இசைக்கு இளையராஜா, பாடல்களுக்கு கண்ணதாசன் வாலி வைரமுத்து புலமைப்பித்தன் இன்னும் பலரும், இயக்கத்திற்குப் பாரதிராஜா,  பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மணிரத்தினம், மகேந்திரன் இன்னும் பலர் என ஒரு பட்டாளமே  கொடிகட்டிப் பறக்கையில் இசை, பாடல்கள், இயக்கம் என அனைத்தையும் ஒற்றை ஆளாய் நின்று செய்து தன் வெற்றிக்கொடியைப் பட்டொளி வீசிப் பறக்கவிட்டவர் நம் தேசிங்கு இராஜேந்திரன் என்ற டி.ஆர். அவர் தன் செயல்களில் யாரையும் முன்மாதிரியாக வைத்துப் போலச்செய்தலை மேற்கொள்ளவில்லை. இயக்கத்திலும் சரி, இசையிலும் சரி, பாடல்கள் எழுதுவதிலும் சரி தனக்கென ஒரு தனித்துவத்தை வைத்துக்கொண்டார்.  அனைத்தையும் ஒற்றை ஆளாய் நின்று செய்தாலும் எதிலுமே அவர் சோடை போகவில்லை.. மாறாகப்  புடம்போட்ட பொன்னாகவே மிளிர்ந்தார். திரைக்கதையால் பெண்களைத் தன்பால் ஈர்த்தவர் தன் தீந்தமிழ்ப் பாடல்வரிகளால் இளைஞர்க்குழாமைத் தன்பக்கம் ஈர்த்திழுத்து வைத்துக்கொண்டார். இதுவரையிலும் கேட்காத பல சொற்களின் பயன்பாடு, புதுமையான உவமைப் பயன்பாடு என தமிழில் அவர் ஒரு தேர்ந்த கவிஞனாய் இளைஞர்க்குழாம் நடுவே அரியணைபோட்டு அமர்ந்துகொண்டார்.

இன்றைக்குத் தொழில்நுட்பம் தன் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றம் கண்டுள்ளது. அதனால் திரைத்துறையில் கலை இயக்குநர் பெருமக்களுக்கு அவர்தம் வேலையினை எளிதாகச் செய்திட கணினி பெரிதும் உதவுகிறது. தொழில்நுட்பம் அவ்வளவாகத் தலைகாட்டாத அக்காலக்கட்டத்தில் தன் படங்களின் பாடல்காட்சிகளில் பிரம்மாண்டத்தைக் காட்டியவர் டி.ஆர். ஒவ்வொரு பாடலுக்கும் அவர் அமைத்திருக்கும் செயற்கைச் சூழலானது மாறுபட்டே இருக்கும். எல்லாவற்றிலும் தன் திறமையின் தனித்துவத்தினை மிக ஆழமாக ஊன்றினார். அதில் முளைத்த புகழ் மரங்களோ வானளாவி உயர்ந்து நின்றன.  அத்துணைத் திறமையான டி.ஆர் தன் படங்களில் பெரும்பாலான பாடல்களைப் பாடும் வாய்ப்பினை நம் எஸ்.பி.பிக்கே வழங்கியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாது எஸ்.பி.பி தனக்குப் பிடித்தவாறே பாடல்களையும் பாடிக்கொள்ளலாம் என்றும் சொல்லியிருக்க வேண்டும். இளமை மதர்ப்புடன் நீர்நிலைகளில் நீந்தும் இளைஞனைப்போல ஒவ்வொரு பாட்டிலும் மாயவித்தைகள் காட்டியிருப்பார் எஸ்.பி.பி.

டி.ஆரின் விரல்வழி பிறந்த தமிழனையும் பாடும் நிலா எஸ்.பி.பியின் குரல்வழி பிறந்த தமிழினையும் கேட்க நாமெல்லாம் பெரும்பேறு பெற்றிருக்க வேண்டும்.

திரைப்பாடல்துறையில் புகழ்மிக்க பாடலாசியர்களாகப் பெரிதும் அறியப்படாத நமது கங்கை அமரன், ஆர்.வி.உதயகுமார் மற்றும் டீ.இராஜேந்தர் ஆகிய மூவரின் அமுதத்தமிழ் வரிகளை நம் பாடும்நிலா பாலு எவ்வாறெல்லாம் கொஞ்சியும் கெஞ்சியும் விஞ்சியும் கிறங்கியும் மயங்கியும் மகிழ்ந்தும் பாடியிருக்கிறார் என்று எனக்குத் தெரிந்தவகையில் என் மொழியில் சொல்ல விரும்பினேன். விண்ணில் உலாவச் சென்றிருக்கும் நம் பாடும்நிலாவுக்கு நான் செய்யும் அன்புப்படையலாக அது இருக்கும் என உளமார நம்பினேன். கூடுதலாக நீங்கள் கொடுத்த பேரூக்கத்தில்தான் முப்பத்துமூன்று பதிவுகளை என்னால் எழுத முடிந்தது.

பாடல் வரிகளைத் தந்து பேருதவி செய்த பாடலாசிரியப் பெருமக்களான கங்கை அமரன், ஆர்.வி.உதயகுமார், டி.இராஜேந்தர் ஆகிய மூவர்க்கும் என் தலைதாழ்ந்த அன்பு வணக்கமும் நிறைநன்றியுடன் கூடிய மகிழ்வாழ்த்தும் உரித்தாகுக..! உங்கள் தாள்களில் என் நன்றி மலர்களைத் தூவி மகிழ்கிறேன்.

நாள்தோறும் ஒரு தாயைப்போல , தந்தையைப்போல தன் குரலால் எப்போதுமே என்னை அரவணைத்துத் தனிமையை உறவாக்கி மகிழச்செய்யும் என் அன்பின் பாட்டுத்தந்தை பாடும்நிலா எஸ்.பி.பிக்கு என் பேரன்பின் முத்தங்களை உடுக்களாக்கி விண்ணில் தூவுகின்றேன். உங்கள் பேரொளிக்கு அழகு சேர்க்கும்பொருட்டு அவை மினுக்கிக்கொண்டே இருக்கட்டும்.

ஒவ்வொரு கிழமையும் தவறாது எனது பதிவினைப்படித்து , மேலான கருத்துக்களையும் பகிர்ந்து என்னை ஊக்கப்படுத்தி எழுதிவைத்த உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் என் பேரன்பினையும் பெருமகிழ்வையும் உளமார உரித்தாக்குகிறேன்.

இறையருளும் தமிழ்த்தாயும் விரும்பினால் மீண்டும் வேறொரு கருவினில் தொடர்பதிவு ஒன்றினைச் சிறிய இடைவேளைக்குப் பிறகு தொடங்கலாம் என்று விழைகிறேன். மீண்டும் உங்கள் அனைவர்க்கும் எனது பேரன்பும் பெருமகிழ்வும்..!!!

முற்றும் ?

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

2 COMMENTS

  1. பெருமழை சொல்லாமல் நின்று விடுவதைப் போல்..
    சட்டென்று நிறுத்தி விட்டீர்களே கவிதாயினி..

    கடந்த 33 வார தொடராக எழுதிய திரையிசை பாடல்களை பற்றிய நுணுக்கமான பார்வை மேலும் மிகச் சிறந்த பாடலாசிரியராக என்றும் நிலைத்திருக்கக் கூடிய கங்கை அமரன், ஆர் வி உதயகுமார்,டி ஆர் இவர்களின் மொழிநடை தனிச்சிறப்பு. அழகிய சொல்லாடல், சமூகப்பார்வை, காதல், கேலி, கிண்டல் கிராமத்துப் பின்னணி இப்படி அனைத்து பாடல்களையும் ஒவ்வொன்றாய் தொகுத்து ஒரு வார வாரம் வாசித்தவர்கள் எல்லாம் வாசகர் களாக்கிய பெருமை உங்களது மொழி நடைக்குண்டு…
    மீண்டும் ஒரு தொடரை எதிர்பார்த்து காத்திருப்பவர்களில்.. நானும் ஒருவன்..??

    • பேரன்பு அண்ணா…

      சிறு இடைவெளி விட்டுவிட்டுப் பின் வேறொரு களத்தில் எழுதலாம் என நினைத்திருக்கிறேன்

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -