பாடு நிலாவே தேன் கவிதை – பகுதி 11

*** முத்தமிழ்க் குயில்களின் ஆனந்தக்கும்மி..! ***

- Advertisement -

கடந்த பத்துக் கிழமைகளாக கங்கை அமரனின் பாடல் வரிகளில் நம் எஸ்.பி.பி என்னென்ன மாயங்கள் காட்டிப்பாடி நம்மை மயங்கினார் என்றும் அவரது இசையிலும் எப்படி உருகிப் பாடினார் என்றும் பார்த்தோம்… இவர்தம் இருவர் கூட்டணியும் சேர்ந்து பல பாடல்களை நமக்கு தந்திருக்கின்றனர். எல்லாவற்றையும் பதிவாய் எழுதிடத்தான் ஆசை.. காலமும் சூழலும் கருதி நாம் அடுத்தகட்டத்துக்கு நுழைய இருக்கிறோம்.. அதனால் முத்தாய்ப்பாக இன்னும் சில பாடல்களைப்பற்றி இங்கே நிறைவாகப் பார்க்கலாம்.

ஓர் ஆண் ஒரு பெண்ணைச் சீண்டி எள்ளலும் மகிழ்வும் கலந்து பாடும் பாடல்தான் இது. சீண்டலென்றாலே எஸ்.பி.பிக்கு சில்லுக்கருப்பட்டி தின்பதைப்போல.!

நில்லாத வைகையிலே   நீராடப் போகையிலே

சொல்லாத சைகையிலே  நீ ஜாட செய்கையிலே

கல்லாகிப் போனேன் நானும்  கண் பார்த்தா ஆளாவேன்

கைசேரும் காலம்  வந்தா தோளோடு தோளாவேன்

உள்ள கனத்ததடி  ராகம் பாடி நாளும் தேடி

நீ அடிக்கடி அணைக்கணும் கண்மணி கண்மணி

பதில் சொல்லு நீ சொல்லு நீ – என்று எஸ்.பி.பி. பாடும்போது யாரேனும் பதில் சொல்லாமல் கடந்துவிட முடியுமா! அம்மன் கோவில் கிழக்காலே என்ற மாபெரும் வெற்றிப்படத்தில் நாயகன் விஜயகாந்த் நாயகி இராதாவைப் பார்த்துப்பாடும் பாடல்தான் இது. பாடல் தொடக்கத்திலிருந்து இறுதிவரை எஸ்.பி.பியின் குரலில் அந்தச் செல்லச் சீண்டலும் மகிழ்வெள்ளலும் கொஞ்சமும் குறையாது ஆற்றுவெள்ளம்போல பாய்ந்து கேட்போரை நனைத்துக்கொண்டே இருக்கும்.

அடுத்து ஒரு பாடலில் முழுக்கவே காதல்பொங்கி வழியும் குரலுடன்தான் பாடுகிறார் எஸ்.பி.பி.

பட்டோடு பொன்னாடத்தான் பார்த்த

மனம் உன்னோடு தான்

கட்டாமலே எட்டாமலே தள்ளாடுதே என்று பாடும்போது தள்ளாடுதே என்ற சொல்லை மெய்யாகவே மகிழ்வில் தள்ளாடும் கிறக்கக்குரலோடு பாடியிருப்பார்.

செம்மேனியா செந்தாழம் பூவா….

அது உன்மேனியா ..பொன் மேனியா… என்ற வரியில் அது உன் மேனியா என்று பாடிவிட்டு ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு அடுத்து பொன்மேனியா என்று பாடுவார் எஸ்.பி.பி.. மயக்கும் சிரிப்பு அது. அச்சரணத்தின் இறுதியில் பாட்டின் பல்லவியைப் பாடும்போது “மத்தாளம்தான் கொட்டும் புது குத்தாலம்தான்” என்றவரியின் இறுதியில் மீண்டுமொருமுறை சிரிப்பார். ” என்ன மனுசன்யா இந்தாளு!” என்று தலையில் தூக்கிவைத்துக்கொண்டுக் கொண்டாடச்சொல்லும் நம்மை.  கும்பக்கரை தங்கையா படத்தில் வரும் பூத்துப் பூத்துக் குலுங்குதடி பூவு என்ற பாடல்தான் இது. எஸ்.பி.பியும் உமா ரமணனும் இணைந்து பாடியிருப்பர். பாலும் தெளிதேனும் கலந்து சுவைத்த குரலின்பத்தை வாரி வழங்கியிருப்பர் இருவருமே.

அடுத்த பாடல் கொஞ்சம் வேறுபட்ட பாடல் .. ஆங்கிலத்தில் தொடக்க வரிகள் அமைந்த பாடல்

செனோ ரீட்டா ஐ லவ் யூ

மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ என்று கொஞ்சம் அழுத்தமான குரலில் ஆங்கிலத்தில் பாடிவிட்டு அடுத்த வரியைத் தமிழில்பாடும்போது அப்படியே மென்மைக்குத் தன் குரலை மாற்றிவிடுகிறார்.

அழகோ அழகு அதிலோர் உறவு

அருகே இருந்து தவிக்கும் மனது – ஜானி படத்தில் வரும் இப்பாடலை முழுவதும் ஓர் ஊக்கத்துடன் பாடியிருப்பார். அழுத்தமான குரலும் மென்மையான குரலுமாய் மாற்றி மாற்றி நமக்கு ஒரு பாடல்விருந்தே வைத்துவிடுகிறார்.

இதுவுமொரு காதல் பாடல்தான்.. மெல்லிய பூங்காற்றாய் வருடிச்செல்லும் குரலில் எஸ்.பி.பி நம்மை உருக்கிவிடுவார்..

காற்று பூவோடு கூடும்… காதல் சங்கீதம் பாடும்

பார்த்து என் உள்ளம் தேடும் .. பாசம் அன்போடு மூடும்

இதயம் போடாத லயமும் கேட்டு .. இளமை பாடாத கவிதைப் பாட்டு

இமைகளில் பல தாளம்…. இசைகளை அது கூறும்

இரவிலும் பகலிலும் உனைப் பார்த்து பார்த்து பார்வை வாடும்…  என்று முதல் சரணம் முழுவதும் எஸ்.பி.பி தான் பாடுகிறார்.. மென்தென்றலில் ஆடும் இலைகள்போல அவரது குரல் பயணம் செய்கிறது. அதிலும் “உனைப் பார்த்து பார்த்து பார்வை வாடும்” என்று முடிக்கையில் அவரின் காந்தக்குரலில் ஈர்க்கப்பட்டுக் கேட்கின்ற நாமும் “மனதிலே ஒரு பாட்டு.. மழைவரும் அதைக்கேட்டு ” என்று பாடத்தொடங்கி விடுவோம். தாயம் ஒன்னு என்ற படத்தில் நாயகன் அர்ஜுனும் நாயகி சீதாவும் பாடி நடித்திருக்கும் இப்பாடலை நம் எஸ்.பி.பி சுசீலாம்மாவுடன் இணைந்து பாடி மயக்கியிருப்பார்.

அடுத்து வருவது ” காதல் கொஞ்சம் கம்மி .. காமம் கொஞ்சம் தூக்கல்” வகையான பாடல்.

இன்பத்துக்கு முகவுரை, என்றுமில்லை முடிவுரை,

நீயிருக்க ஏது குறை?  — என்று காதலின் அடுத்த கட்டத்துக்கு முகவுரை எழுதும் ஏக்கத்தோடும் இன்பத்தோடும் பாடும் எஸ்.பி.பி சரணத்தின் முடிவில்

ஆகா இது மார்கழி மாதம்,

அம்மாடியோ முன்பனி வீசும்,

சூடேற்றும் பூ முல்லை வாசம்! – என்று பெருந்தாபத்தில் கட்டுண்ட குரலோடு முடிக்கும்போது நாமும் நம்வசம் இல்லாது பறந்துகொண்டிருக்கும் நிலைதான் ஏற்படுகிறது. காதலோடு காமமும் சரியான விழுக்காட்டில் கலந்த குரலில் நம் எஸ்.பி.பியும் ஜானகியம்மாவும் கிறங்கடித்திருக்கும் இப்பாடல் முந்தானை முடிச்சு படத்தில் நாயகன் பாக்யராஜும் நாயகி ஊர்வசியும் ஆடிப்பாடும் “அந்திவரும் நேரம் வந்ததொரு ராகம் ” என்னும் பாடல்தான் இது.

அடுத்து வருவதும் ஒரு காதற்பாட்டுத்தான்… காதற்பாட்டைக் கேட்பதே தனியின்பம்.. அதிலும் கொஞ்சும் குரலோன் எஸ்.பி.பியின் குரலில் கேட்பதோ தனிப்பேரின்பம் அல்லவா!

கூடாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே

பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே – என்ற வரிகளில் மனத்தெளிவில்லாத ஒருவன் காதல்வயப்பட்டு அந்தக் காதல்போதையில் மனம் தெளிந்த நிலையில் பாடும் ஒருவனின் மனநிலையில் அழகாகப் பாடியிருப்பார் எஸ்.பி.பி..

“அந்தமுள்ள சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே” என்று மகிழ்வு பொங்கும் குரலில் கொஞ்சும் எஸ்.பி.பி அடுத்த சரணத்தில் “பூலோகம் இங்கு வானம் போலே மாறும் நிலை பார்த்தேன்” என்று காதலில் பிதற்றும் நிலையில் பாடி “முத்துமணியே பட்டுத்துணியே” என்று கொஞ்சும் இவ்வரிகள் ஆவாரம்பூ படத்தில் வரும் சாமிகிட்ட சொல்லி வெச்சு சேர்ந்ததிந்த செல்லக்கிளியே என்ற பாடலுக்குச் சொந்தமான வரிகள். நம் பாடும் நிலா எஸ்.பி.பியும் ஜானகியம்மாவும் இணைந்து பாடும் அத்தனை பாடல்களுமே ” அடி தூள் ” வகைதான்..

அடுத்துவரும் பாடல் கொஞ்சம் மாறுபட்ட பாடல்.. நாயகன் தெய்வத்தை நினைத்துப்பாட நாயகியோ அதை அப்படியே தனக்குப் பொருத்திக் கனா காண்கிறாள்.

கோடியில ஒருத்தியம்மா கோலமயில் ராணி

ஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும் மேனி

தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா?

ஊருலகில் அவளப் போல பேர் வருமா?

நல்ல பளிங்கு போல சிரிப்பு

மனசப் பறிக்கும் பவள விரிப்பு

விளங்கிடாத இனிப்பு

விவரம் புரிஞ்சிடாத துடிப்பு

சந்திர ஜோதி வந்தது போல்

சுந்தர தேவி ஜொலிப்பு – இப்படியெல்லாம் வர்ணனை செய்து பாடினால் நாயகியும்தான் பாவம் என்ன செய்வாள்? ஒவ்வொரு பாடலிலும் எஸ்.பி.பி சொற்களைப் பலுக்கும் முறையை எண்ணி மகிழாமல் இருக்கமுடியவில்லை. “விளங்கிடாத இனிப்பு விவரம் புரிஞ்சிடாத துடிப்பு” என்று பாடினாலும் நாம் சுவைத்துக் கேட்கத்தான் போகிறோம்.. ஆனால் கவிஞரோ எஸ்.பி.பியிடம் ” வெளங்கிடாத, வெவரம் ” என்று நாட்டுவழக்கிலேயே பாடச்சொல்ல எஸ்.பி.பியும் அதை அப்படியே பாடியிருப்பார். வில்லுப்பாட்டுக்காரன் என்ற படத்தில் இராமராஜனுக்காக நம் எஸ்.பி.பி பாடிய பாடல்தான் இது. வேறுபட்ட இசையில் மனத்தை மயக்கும் குரலில் எஸ்.பி.பி கலக்கியெடுத்திருப்பார்…

அடுத்துவருவது கொஞ்சமல்ல நிறையவே மாறுபட்ட பாடல்.. ஏக்கமும் கொஞ்சலும் சிணுங்கலும் பொங்கிவழியும் ஒரு பாடல். இம்மாதிரியான பாடல்களில் குரலில் அத்தனை உணர்வுகளையும் கொட்டிக்கலந்து மிகச்சரியாகப் பாடவேண்டுமெனில் இரண்டே இரண்டுபேர்தான் ஆகச்சிறந்த தேர்வு.. வேறு யார்? நம் எஸ்.பி.பியும் ஜானகியம்மாவும்தான்..! திகட்டத் திகட்ட இனிப்பினைத் திணித்து நம்மைச் சாவடித்து விடுவர் இருவருமே.. பொய்யென்று நினைப்போர் இப்பாடலை ஒருமுறை கேட்டுவிட்டு அதன்பின்னரும் பொய்யென்று சொல்லட்டும் பார்க்கலாம்.

“தனியா படிச்சா ஏறவில்லை

துணை நீ இருந்த போதும் புள்ள” என்ற வரியில் சிணுங்கலையும் ஏக்கத்தையும் விரவிப் பாடியபின் அடுத்து

“முதல் முதலாக படிக்கிற பாடம்

விடியிற நேரம் முடிக்கிற பாடம்

இதுதான் காதல் எனும் பாடம்” என்று காதலும் ஆர்வமும்  குழைத்துப்பாடி அதன்பின் ” அட நமக்கிந்த புதுப் பாடம் சலிக்காதம்மா” என்று ஆசையும் காமமும் கலந்துபாடிக் குரலொப்பமிட்டுப் பாடம் படிப்பதை உறுதி செய்துவிடுகிறார். கோயில்காளை  படத்தில் நாயகன் விஜயகாந்தும் நாயகி கனகாவும் ஆடிப்பாடும் ” பள்ளிக்கூடம் போகலாமா? அதுக்கு புத்தகத்த வாங்கலாமா? ” என்ற பாடல்தான்.. எஸ்.பி.பியும் ஜானகியம்மாவும் கேட்போரைக் கிறங்கடித்துவிடுவர். மீண்டெழுதல் என்பது சற்று கடினம்தான்.

அடுத்துவரும் பாடல் காதல்பாடல் அல்ல .. பொதுப்பாடல்தான்.. நாட்டுப்புறக்கலைஞர்களான காதலர் பாடும்வகையில் அமைந்த பாடல்.

ஆடும் குயிலு பாத்தா மயிலு ஆகா ஒயிலு

அப்பப்பா அப்பா ஆடும் போதும் பாடும் போதும் அது ஒரு ஸ்டைலு – என்று எஸ்.பி.பி பாடினால் மயிலென்ன குயில்கள் கூட ஆடுமென்று எண்ணித்தான் ஆடும் குயிலு என்று எழுதியிருப்பாரோ கவிஞர்!

நாட்டு சக்கரையே பாத்து சொக்குறேன் காத்து நிக்குறேன் – என்ற வரியில் நம்மைச் சொக்கவைத்துவிட்டு அடுத்து

” போடு மயிலாடும் பாறையில நாங்க ஆடிருக்கோம்

மதுரை மேங்காட்டு பொட்டலில மெடலு வாங்கி இருக்கோம்” என்று பாடும்போது நம்மை ஆடவைத்து விடுகிறார். ஆடமுடியாதவர்களைக்கூட உறுதியாகக் கீழிதழைப் பற்களால் அழுத்தித் தலையை ஆட்டவைத்துவிடுவார்… நாயகன் கார்த்திக் நாயகி நிரோஷா நடித்த பாண்டிநாட்டுத்தங்கம் என்ற படத்தில் வரும் இப்பாடலை நம் எஸ்.பி.பியுடன் இணைந்து துள்ளலாகப் பாடியிருப்பவர் சின்னக்குயில் சித்ரா. இருவரின் குரலும் போடும் ஆட்டத்தில் கேட்பவர் யாராயினும் ஆடுவது திண்ணம்.

அடுத்துவரும் பாடலுக்கு ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. கல்லூரிப் பிரிவுவிழாவில் மாணவர் பாடும்பாடலாக அமைந்தது இது.. உரையாடல்களோடு தொடங்கிப்பின் மெல்லிய பண்ணுடன்

“பாடம் படிச்சுகிட்டு பட்டங்களை வாங்கிட்டு

நாட்டை திருத்தனும்னு நல்ல வழி நடத்தனும்னு

நம்பளதான் பெத்தவங்க நம்பிகிட்டு இருக்கிறாங்க

நாம இப்ப போறவழி என்னவழி தெரியலையே” என்று  சோகமாகப்பாடிவிட்டு அதன்பின்னர் வேகமெடுக்கும் இசையுடன்

“அண்ணமாரே தம்பிமாரே அருமையான அக்காமாரே

ஆ..அண்ணமாரே தம்பிமாரே அருமையான அக்காமாரே

போடு.. அண்ணமாரே தம்பிமாரே அருமையான அக்காமாரே

ஒன்னுக்கொன்னு சேர்ந்திருந்தோம் ஒத்துமையா நாமிருந்தோம்

ஊரைத்தேடி போகப் போறோம் எப்ப மறுபடிப் பார்க்கபோறோம்” என்று பாடுகின்றனர். ஆம்.. இது எஸ்.பி.பி மட்டும் பாடும் பாட்டல்ல. கல்லூரி நண்பர்களுக்காக உண்மையான நண்பர்களான நம் எஸ்.பி.பி, இளையராஜா மற்றும் கங்கைஅமரன் மூவரும் இணைந்து பாடிய பாடல்தான் இது. பிரியும் நேரத்தில் சோகத்துடன் கொண்டாட்டம் கலந்து பாடிய பாடலாக மூவருமிணைந்து பாடிய பாடல்.. கேட்டுப்பாருங்கள்.. மூவரின் குரலும் நம்மை மகிழ்விக்கும் குரல்தான்.

பாவலர் சகோதரர்கள் என்ற இசைக்குழுவில் ஒன்றாகப் பாடித்திரிந்த எஸ்.பி.பி, கங்கைஅமரன், இளையராஜா என்னும் மூன்று இசைக்குயில்களுக்கும் மனமார்ந்த என் மதிப்பினையும் வணக்கத்தையும் படைக்கும்விதமாகத்தான் இப்பாடலை இறுதிப்பாடலாக எழுதினேன். ஆனந்தக்கும்மி என்ற படத்தில் வரும் பாடல்தான் இது. இதுவரை கேளாதவர் இப்போது கேட்டுவிடுங்கள்.

இதுவரையிலும் கங்கைஅமரனின் பாடல்வரிகளுக்கு நம் பாடும்நிலா  எவ்வாறெல்லாம் உயிரூட்டிப்பாடி நம்மை மகிழ்வூஞ்சலில் ஆடச்செய்தார் என்பதைப்பார்த்தோம். இரண்டாம் கேள்விக்கே இடமில்லாமல் அத்தனை பாடல்களுமே இசைஞானியின் இசையமுதுதான்..! இம்மூவர் கூட்டணியில் விளைந்த பாடல்முத்துக்களைக் கோக்கத் தொடங்கினால் அதன் நீளம் நீளும் நீளும் இன்னும் நீளும்… வாய்ப்பிருந்தால் வேறொரு காலத்தில் மீண்டும் அதைத் தொடர்வோம்.

மூன்று பேரும் கோத்த முத்துப்பாடல்களைப்பற்றி நாம் வியந்து பார்த்துக்கொண்டிருக்க ..நம் எஸ்.பி.பி எங்கே செல்கிறார்? எதையோ சொல்லச்சொல்ல அவர் நெஞ்சில் கீதம் எழுகிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். என்னவென்றுதான் பார்த்துவிடுவோம் … வரும் செவ்வாயில்…!

நிலாவின் விடியலில் இன்பம் தொடரும்…!

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

5 COMMENTS

  1. மூன்று நாளாய் இடைவிடாத மழை… இன்று கங்கை அமரன் இளையராஜா எஸ் பி பாலசுப்ரமணியம எஸ்.ஜனகி காதல் காதல் மழை (பாடல்கள்)

    எத்தனையோ முறை கேட்ட பாடல்கள் தான் என்றாலும் மீண்டும்.. உங்கள் வார்த்தைகளின் கட்டமைப்பில் மீண்டும் மீண்டும் அந்த பாடல்களை கேட்க தோன்றுகிறது.

    தொடர்ந்து எங்களை இசை மழையில் நினைத்துக் கொண்டிருக்கும் சகோதரி பிரபா தேவி அவர்களுக்கு, மனமார்ந்த வாழ்த்துகள் ??

    • மகிழ்வும் அன்பும் அண்ணா. தொடர்ந்து ஊக்கமளிக்கும் தங்களின் அன்பினில் நிறைகிறேன் ????

  2. வழக்கம்போல் சிறப்பு..

    தாங்கள் குறிப்பிட்டுள்ள தாயம் ஒன்னு,ஆனந்தக்கும்மி போன்ற படங்களின் பால்களை இன்னும் கேட்டதில்லை இனிமேல்தான் கேட்கவேண்டும்.

    இத்தனை முத்து முத்தான பாடல்களும் கங்கை அமரன் எழுதியதா என்றெண்ணி வியக்கிறேன். தமிழின் தலைசிறந்த பாடலாசிரியர்களில் ஒருவராகக் கொண்டாடப்படவேண்டியவர். சில்லறைகள்தான் ஓசையிடும், மதிப்புமிக்க நோட்டுக்கட்டுகள் அமைதியாகத்தான் இருக்கும் என்ற கூற்றுக்கேற்ப தன்னடக்கத்துடனேயே பெரும்பான்மையான மக்களுக்குத் தெரியாமல் இருந்துவிட்டார்.

    இனிமேல் நம் எஸ்.பி.பி, நம் இளையராஜா என்ற வரிசையில் கங்கை அமரனையும் நம் கங்கை அமரன் என்றே போற்றுவோம்.

    தங்களின் அடுத்த பதிவு எதைப்பற்றியதாக யாரைப் பற்றியதாக இருக்கும் என்று எண்ணக் குதிரையைத் தட்டிவிட்டிருக்கிறேன்..

    யாரைப் பற்றியதாக இருந்தால் என்ன?
    பாடும்நிலா ஒளிரும்வரை தங்கள் பதிவுகளைப் படிப்போம்.. தொடர்க வாழ்த்துகள்

    • வழக்கம்போல மகிழ்வூட்டும் கருத்துரைக்கு அன்பும் மகிழ்வும் மோகன்.?❤?

      மனதிலே ஒரு பாட்டு பாடலைக் கேட்டுப்பாருங்க… செம்மயா இருக்கும். மென்மையாய் வருடும் பாடல்.

      அண்ணன்மாரே தம்பிமாரே பாட்டில் பாட்டு தொடங்குவதற்கு முன் சில உரையாடல்கள் இருக்கும்.. நம் எஸ்.பி.பியும் கங்கைஅமரனும் பேசியிருப்பர். பாட்டைவிடவும் அது இன்னும் கேட்கச் சுவையாய் இருக்கும்.

      கங்கைஅமரனைப் போன்ற பணிவு வரவேண்டும் நமக்கும் என்பதைத்தான் ஒவ்வொரு பதிவெழுதும்போதும் எண்ணிக்கொள்வேன். இறையருள் நிரம்பப்பெற்றவர் அவர். ????

  3. பாடலை பகிர்கையில் இனி பாடலாசிரியர் பெயரையும் குறிப்பிட்டு பகிரவேண்டும். நிறையப்பாடல் அறியமுடிந்தது. சிறப்பாகத் தொடருங்கள் பிரபா…

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -