பாடு நிலாவே .. தேன்கவிதை ! – பகுதி 9

நாமெல்லாம் தெய்வப் படைப்பு !

- Advertisement -

வனப்பான வழியில் நிறைந்திருந்த பூக்களெல்லாம் நம் எஸ்.பி.பிக்கு அழைப்பு விடுத்தனவே.. அவர் அழைப்பை ஏற்றுக்கொண்டாரா? ஏற்றுக்கொண்டு என்ன செய்தார்?  

இந்தப்பாடல் வேகமான துள்ளிசையுமல்ல … மெதுவான மெல்லிசையுமல்ல.. மெல்லிசையும் துள்ளிசையும் கலந்த நடுத்தரமான பாடல் இது.. இட்ட அடி நோகாமலும் பாதம் பட்ட நிலம் அதிராமலும் யாரையும் ஆடவைக்கும் பாடல் என்று சொல்லலாம். மெல்லிய உடலசைவுகள் கொடுத்து ஆடிப்பாருங்கள் இந்தப்பாடலை விடவே மாட்டீர் என்றைக்கும். அத்தனை சுவையான பாடலிது.

ஆத்தோரம் பூங்கரும்பு

காத்திருக்கு சிறு எறும்பு

அக்கரையில் ஆயிரம் பூ.. பூப்பு..

பூங்கரும்பினைக்கண்ட எறும்புக்கு எத்தனை மகிழ்வாக இருக்குமோ அதே மகிழ்வுடன் இவ்வரிகளைப் பாடுகிறார் நம் எஸ்.பி.பி.

கரும்பு என்று சொல்லும்போது “க” என்ற எழுத்தைக் கொஞ்சம் அழுத்தித்தான் சொல்வோம். ஆனால் இதுவோ பூங்கரும்பல்லவா..! மென்மையாகச் சொன்னால்தான் முழுமையான பொருள் வெளிப்படும் என்று எஸ்.பி.பிக்குத் தெரியாதா என்ன? அவர் பூங்கரும்பு என்று சொல்வதைக் கேளுங்கள். அத்தனை மென்மை! அடுத்தவரியில் வரும் சிறு எறும்பு என்பதையும் அவ்வளவு அழகாகப் பாடுகிறார். சிற்றெறும்பு என்பதைக்கூட எளிதாய்ப்பாடி விடலாம். சிறு எறும்பு என்பதைப் பிசிறில்லாமல் தெளிவான பலுக்கலோடு  இரு சொற்களாகப் பாட வேண்டுமே. இம்மாதிரியான சிறுசிறு இடங்களில்தான் தனது தனித்தன்மையை எஸ்.பி.பி வெளிப்படுத்தி நம் மனங்களைக் கொள்ளை கொள்கிறார்.

எப்போதும் மாராப்பு

எடுப்பான பூந்தோப்பு

எண்ண எண்ண எங்கும் தித்திப்பூப்பு – என்ன அழகான கற்பனை பாருங்கள். அழகான பூந்தோப்பு, செழிப்பான பூந்தோப்பு, வண்ணமயமான பூந்தோப்பு என்றெல்லாம் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம் பொதுவாக.. ஆனால் கங்கைஅமரனோ எடுப்பான பூந்தோப்பு என்கிறார். எடுப்பான தோற்றம் என்பதை ஆள்களின் உருவத்தோடு தொடர்பு படுத்துவதுதான் என்றாலும் இந்த உவமை கூடுதல் கவித்துவமாக மிளிர்கிறது. எடுப்பான மாராப்பு என்று நேரடியாகச் சொல்லியிருந்தால் மிக இயல்பான ஒன்றாகவோ அல்லது சற்றே உடற்கூறினை வெளிப்படுத்தும் பாலினவகையாகவோ எண்ணிக்கொள்ள வேண்டியிருந்திருக்கும். அதையே மாராப்பு என்பது எடுப்பான பூந்தோப்பு என்று சற்றே மாற்றிச்சொல்லி ஒட்டு மொத்த சொல்லிலும் பொருளிலும் அழகியலைத் திணித்துவிட்டார் கங்கைஅமரன். அதுதான் கவித்துவம்!

வழி முழுதும் வனப்பு

எனக்கழைப்பு புது தொகுப்பு

வகுப்பு கணக்கு எடுப்பு – என்ற வரிகளை எஸ்.பி.பி பாடும்போது திரும்பத் திரும்ப கேட்டுப் பாருங்கள்.. ஒரு வழுவழுப்பான தங்கக் கிண்ணத்தில் நிறைந்திருக்கும் தேன் அதன் விளிம்பிலிருந்து சீராக வழிவதைப்போன்றதொரு குரலில் பாடியிருப்பார். எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத குரல்..!

ஏழைகளின் நல்லுழைப்பு

என்ன இங்கு அவர் பிழைப்பு

வாழ்வு வரும் என்று எதிர்பார்ப்பு – இவ்வரிகளில் சிறப்பு ழகரமானது நான்கு சொற்களில் வருகிறது. அடுத்தடுத்து ழகரம் தொடர்ந்து வருகையில்  ஓரிடத்தில்கூட பிசகாமல் பாடுவதுதான் தமிழுக்கு ஒருவர் செய்யும் சிறப்பாக இருக்கமுடியும். அப்படி நம் தமிழன்னைக்கு முழுமதிப்பு செய்தவர்களில் நம் எஸ்.பி.பியும் ஒருவர். நறுக்கு தெறித்தாற்போல சொற்களை உதிர்ப்பதில் வல்லவர்.

இக்காலப் பிள்ளைகளுக்கு எஸ்.பி.பி பாடல்களைக் கேட்கப் பழக்குங்கள். மனத்தில் மென்மையும்  சொற்களில் தெளிவும் பணிவும் இயல்பாகவே வந்து சேரும். எஸ்.பி.பி மட்டுமல்ல அப்போதுள்ள பாடல்களில் 95 விழுக்காடு பாடல்கள் அப்படித்தான் இருக்கும். இப்போதுள்ள பாடல்களில் இசையோ வரியோ எல்லாமே கடாமுடா என்றுதான் உருட்டுகின்றன. செவிப்பறை கிழியாமலிருந்தால் தப்பித்தோம்.

வீணாக இழுக்கும் வம்பு

வினையாகும் கைகலப்பு

விட்டுவிடு சின்னதம்பி ஏய்ப்பு – எவ்வளவு அடிப்படையான வாழ்வியல் கோட்பாட்டினை எளிய வரிகளில் சொல்லிவிட்டார் கங்கைஅமரன். அதைத் தேன்சொட்டும் எஸ்.பி.பியின் குரலில் கேட்கும்போது பாறையே இளகிவிடும்.. கல்மனம் இளகிப் பண்பட்டுவிடாதா என்ன? அறிவுரை சொல்லும் வரிகள் என்பதற்காய்க் குரலில் அடர்வினை ஏற்றாமல் மென்மையாகவே பாடுகிறார் எஸ்.பி.பி.. அது ஒரு தாய் பிள்ளையிடம் அறிவுரை சொல்வதைப்போல தோன்றுகிறது.

கையோடு எடு சிலம்பு

கலந்தாட நிமிர்ந்தெழும்பு – என்ற வரியில் அந்த நிமிர்ந்தெழும்பு என்ற சொல்லை எஸ்.பி.பி பாடுவதைக் கேட்கும்போது மெய்யாகவே ஒரு மிடுக்கு நமக்குள் சட்டென்று நுழைகிறது… அவரும் ஒரு மிடுக்குடன்தான் அச்சொல்லைப் பலுக்கியிருப்பார். அவர் பாடும்போது அந்தச் சொல்லே நிமிர்ந்து எழும்பித்தான் குரல்வளை வழியாக வெளிவருகிறது.

விறுவிறுப்பு இருக்கு சுறுசுறுப்பு

அருவெருப்பு ஒதுக்கு வரும் சிறப்பு – என்ற வரிகளும் மேலிருந்து கீழிறங்கும் நீராய் ஒரே சீருடன் வேகம் மாறாது தரைதொடுவதைப்போல பாடியிருக்கும் அழகே அழகு..  அப்படி மேலிருந்து கீழிறங்கிய நீரானது ஒருநொடி நின்று பிறகு சமதளத்தில் பாயத்தொடங்குவதுபோல அடுத்த வரிகளைப் பாடுகிறார்..

வனமெல்லாம் செண்பகப்பூ

வானெல்லாம் குங்குமப்பூ

தென்பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ…

இதில் வரும் தென்பொதிகை என்ற சொல்லை அப்படியே பேச்சுவழக்காக மாற்றித் தென்பொதிக என்று பாடுகிறார் எஸ்.பி.பி. அது அவ்வரிக்கு இன்னும் அழகு சேர்க்கிறது. பொதுவாகவே சிற்றூர்ப் பேச்சுவழக்கு மொழியில் பாட்டெழுதுவதில் கங்கைஅமரனை அடித்துக்கொள்ளவே முடியாது எனலாம். அவர் எண்ணத்தை அப்படியே பாடுவதில் எஸ்.பி.பிக்கு நிகர் எஸ்.பி.பிதான். 

நாடோடிப்பாட்டுக்காரன் என்ற படத்தில் வரும் பாட்டுதான் இது.. கார்த்திக் மோகினி நடித்த படம். துறுதுறுவென இருக்கும் ஓர் இளைஞனின் கதாப்பாத்திரம் என்று நினைத்ததும் அதில் முழுமையாய்ப் பொருந்திவிடும் ஒரு நற்பேறு நடிகர் கார்த்திக்கிற்கு இருந்தது. எஸ்.பி.பியின் ஒவ்வொரு வரிக்கும் தனக்கேயுரித்தான முகபாவனைகளையும், உடலசைவுகளையும் காட்டி பட்டையைக் கிளப்பியிருப்பார். தொலைவில்நின்று கார்த்திக் பாடுவதைக் கேட்கும் மோகினியோ ஆர்வம், புன்னகை, சிரிப்பு என்று முகபாவனையை மாற்றிமாற்றி நம் மனத்தை ஆட்கொண்டுவிடுவார்.

யாரேனும் சினமாகவோ, முறைப்பாகவோ இருந்தால் ” இவனென்ன நம்பியாரா? ” என்று எண்ணுமளவுக்கு கெட்டவனாகவே பெரும்பாலான படங்களில் நடித்திருந்த நடிகர் நம்பியார் இப்பாடல் முழுவதும் சிரித்துக்கொண்டே சிறுசிறு நடன அசைவுகளையும் செய்திருப்பது பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கிறது.

அதற்குள் நம் எஸ்.பி.பி எங்கே போய்விட்டார்? விறுவிறுப்பு சுறுசுறுப்பு என்று பாடியதும் சுறுசுறுப்பாகி நான் நீந்தப்போகிறேன் என்று விறுவிறுவென்று போய்க்கொண்டிருக்கிறார்… பதிவையும் பாட்டையும் பொருத்திப் பாருங்கள் ஒருமுறையேனும்… அதற்குள் நான் எஸ்.பி.பி எங்கே நீந்தப்போகிறார் என்று கண்டுபிடித்து வந்து உங்களிடம் செவ்வாய் மலர்ந்து சொல்லிவிடுகிறேன்.

கங்கையின் நிலாவின் நீச்சல் தொடரும்….

இத்தொடரின் எல்லாப் பதிவுகளையும் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

பாடு நிலாவே…. தேன் கவிதை!

அ. பிரபா தேவி
அ. பிரபா தேவிhttps://minkirukkal.com/author/prabhadevi/
தன் சீரிய தமிழாலும் கவிதைகளாலும் பலர் மனம் வென்ற கவிஞர். தேர்ந்த படிப்பாளி. நெல்லையைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் பாடல்கள் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். கதைகள் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்.

6 COMMENTS

  1. அடடா..படிக்கப் படிக்க இடையில் நிறுத்தவே முடியாத அளவிற்கு அருமையான எழுத்துநடை இன்னும் கொஞ்சமேனும் நீண்டிருக்கக்கூடாதா? இந்தப் பாடலைப் பற்றிய ஆய்வுரை என்ற எண்ணம் தோன்றுகிறது.

    அதிலும் அந்தத் பொற்கிண்ணத்திலிருந்து வழியும் தேன் என்றெதெல்லாம் அத்தனை அழகு!

    நான் சிறுவத்தில் மிகவும் சுவைத்துக் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று
    அதன் வரிகள் ஒவ்வொன்றும் மனப்பாடமாய்த் தெரியும்..

    கையோடு எடு சிலம்பு
    கலந்தாட நிமிர்ந்தெழும்பு

    விறுவிறுப்பு இருக்கு சுறுசுறுப்பு

    போன்ற வரிகள் நான் அடிக்கடி முனுமுனுத்துக் கொண்டிருப்பவை..

    ஆனால் இந்தப் பதிவைப் படிக்கும் வரை அது எந்தப்படம், அதில் நடித்தது எந்தநடிகர் என்றெல்லாம் தெரியாது எழுதியது யார் என்றெல்லாம் தெரியாது இசைஞானியின் இசையும், பாடும் நிலாவின் குரலும் என்பது மட்டுமே அறிந்தவை..

    இந்தப் பாடலை முதல்முறை கேட்டபோது உண்டான ஒரு சிலிர்ப்பான உணர்வு இந்தப் பாடலைப் பற்றிய தங்களின் பதிவைப் படிக்கும்போதும் உருவாகிறது..

    தொடர்ந்து இதுபோன்ற நல்ல பதிவுகளைத் தாருங்கள் ..மகிழ்ச்சி..!

    • தங்களது பின்னூட்டம் பேரூக்கம் தருகிறது ஒவ்வொருமுறையும். இம்முறை தங்களின் பின்னூட்டத்தைப் படித்து வியந்தேவிட்டேன். அந்தளவுக்குச் சுவைத்துப் படித்திருக்கிறீர்கள். மகிழ்வும் அன்பும் மோகன். ??????

  2. எழுத்தைக் கொண்டு தேன்கூடு கட்டி அதை படிப்போருக்கு தேனின் சுவையை அள்ளித் தெளிக்கும் உங்கள் எழுத்து நடைக்கு வாழ்த்துகள் ????

    • எழுத்துத் தேன்கூடு…. ஆகா… படிக்கும்போதே இனிக்கிறது அண்ணா. தொடர்ந்து தாங்கள் அளிக்கும் ஊக்கம் பெரும்பலமாய் நின்று எழுதத் தூண்டுகிறது. அன்பும் மகிழ்வும் அண்ணா ???????

  3. அருமையான பதிவு.பெரும்பலான என்று உள்ளதுசரியாக பதிவிடவும்.வாழ்த்துகள்.வளர்க தும் ரசனை.

    • மிக்க மகிழ்வும் நன்றியும் அம்மா.

      தட்டச்சுப் பிழைகளைச் சரிசெய்துவிடுகிறோம்.

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -