மஹாபலி

கதையாசிரியர்: சுஜாதா

- Advertisement -

எந்த ஒரு நுட்பமான அல்லது சிக்கலான விடயத்தையும் எவருக்கும் புரியும்வண்ணம் எளிமையாக உணர்த்தும் வல்லமை பெற்ற சுஜாதா, இந்த மஹாபலியிலும் நம் உணர்ச்சியையும் சிந்தனையையும் ஒருசேரத் தூண்டி விடுகிறார்.

பிரகலாதனின் வாரிசான மகாபலி, கேரளத்தை ஆட்சி செய்த சக்கரவர்த்தி. இவரை இரணியகசிபுவின் வாரிசு என்றும் கூறலாம். மகாபலி, உலக மக்கள் அனைவரும் போற்றும் விதம் அறத்தை மீறாமல் நல்லாட்சிப் புரிந்தவர். கல்வி கேள்விகளில் சிறந்தவர். நல்லவராய் இருந்த போதிலும் தேவர்களை எதிர்த்த ஒரே காரணத்திற்காக விஷ்ணு பகவானால் பலியிடப்பட்டவர் என்கின்றன புராணங்கள். நிற்க.

சுஜாதாவின் மஹாபலி, மகாபலிபுரத்திலிருந்து தொடங்குகிறது. எழுத்தைத் தொழிலாகக் கொண்ட புரொபசர் சந்திரகுமாருக்கு, மூப்பால் பார்வை மங்க, உதவிக்கு ஆள் தேவைப்படுகிறது. பெரிப்ளுஸ் கிரேக்க யாத்திரை புத்தகம், ஹ்யுவான் சுவாங் என இலக்கியங்களில் ஊறித்திளைத்த இளைஞன் அஜயை புரொபசருக்கு மிகவும் பிடித்துப்போகிறது.  உற்றார் உறவினர் ஊரென எதுவுமேயில்லாமல் கர்ணனின் கவசம் போல்  ஒரு புத்தகப்பையைச் சுமந்துகொண்டு அவரிடம் வந்துசேர்கிறான்.

இரு இலக்கிய காதலர்களும் பல கருத்துக்களில் உடன்படாவிட்டாலும் அவர்களின் விவாதங்கள் எப்போதும் நிற்கவேயில்லை. கட்டிடக்கலையைக் கண்டு வியக்கிறார் சந்திரகுமார். அஜயோ அதைக்கட்டிய சிற்பியை மட்டும் புகழ்கிறான். இந்தியாவை ஒன்றிணைப்பது கலாச்சாரம் என்கிறார் அவர். ஏழ்மை என்கிறான் இவன். இவர்கள் இருவருக்கும் எப்போதும் ஒரே கருத்து இருந்ததேயில்லை. இலக்கிய நேசர்கள் எப்போதும் மாற்றுக்கருத்து கொண்டவரையும் இரசிக்கத் தான் செய்வார்கள் என்பதை அழகாகச் சித்தரிக்கும் கதாப்பாத்திரங்கள் இவர்கள்.

விடுமுறையில் வீட்டுக்கு வரும் சந்திரகுமாரின் மகளுக்கும் அஜய்க்கும் ஏற்படும் பழக்கம் காதலாய் மாறுமா என பேராவல்கொண்டு காத்திருக்கிறார் சந்திரக்குமார். அஜயோ அவளுக்கு கவிதைகளையும் வரலாறுகளையும் அறிமுகப்படுத்துவதில் தான் முனைப்பாக இருக்கிறான். ஒருநாள் அவர் மகளும் அஜயும் கடற்கரைக்கு சென்ற சமயத்தில் காவல்துறை வீட்டிற்கு வருகிறது. பதினெட்டு கொலை செய்த தீவிரவாதி டோனு தான் அஜய் என்கிறது. எத்தனை ஆதாரங்களைக் காண்பித்தாலும் சந்திரக்குமாரால் அவர்கள் சொல்வதை இம்மியளவும் நம்ப முடியவில்லை.  அவனுக்காக வாதாடிப் பார்க்கிறார். பலனில்லை.

அதி புத்திசாலி, அழகுணர்ச்சி மிகுந்தவன், படித்த சிந்திக்கத் தெரிந்தவன், அறம் பிறழாதவன் என எல்லா பண்புகளும் இருந்தும் மகாபலியைப் போல் அஜயும் தேவாதிதேவர்களுக்காகப் பலியிடப்படுகிறான்.

“சாவதற்குமுன் கடற்கரைக் கோயிலை ஒரு முறை நிலவில் பார்த்துவிட வேண்டும்” என்று ஓடி அங்கேயே மார்பில் குண்டோடு கிடப்பவனைப் பார்த்த புரொபசருக்கு “உங்களை ஒன்றுபடுத்த சுதந்திரப் போராட்டத்தின் போது ஒரு பொது எதிரி இருந்தான். இப்போது நமக்கு நாமே எதிரி” என்ற அஜயின் கூற்றின் ஆழமும் உண்மையும் புரிகிறது. 

“நம் இளைஞர்களை நம் கடற்கரையில் நாமே சுட்டுப் பலிவாங்கும் படியாக எங்கே, எந்தக் கட்டத்தில் இந்த நாட்டில் பெரியவர்கள் தப்பு செய்துவிட்டோம்? ” என்ற புரொபசரின் கேள்வியின் ஊடே நம் மனத்திலும் எங்கோ ஒரு மூலையில் எப்போதோ செத்துப்போன ஒரு போராளியின் முகம் பரிதாபமாக வந்து போகிறது. 

கதை முழுவதும் விறுவிறுப்பும் திருப்பங்களும் நிறைந்து இருந்தாலும். முடிவில் புரொபசரின் கேள்வி மட்டுமே மனத்தில் எஞ்சி நிற்கிறது. 

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -