மூக்குத்தி அம்மன்

சினிமா விமர்சனம்

- Advertisement -

உங்கள் முன் திடீரென்று கடவுள் வந்து “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டால் என்ன கேட்பீர்கள்? என்றாவது சிந்தித்ததுண்டா? RJ பாலாஜிக்கும் N.J. சரவணனுக்கும் அப்படி ஒரு யோசனை வந்திருக்கும் போல. அதன் விளைவு தான் டிஸ்னி ஹாட்ஸ்டாரின் மூக்குத்தி அம்மன் திரைப்படம். மக்களுக்குள் மலிந்துகிடக்கும் தேவையற்ற மூடநம்பிக்கைகளைக் கடவுளே வந்து சொன்னாலாவது கைவிடுவார்களா என்று முயற்சி செய்து பார்த்திருக்கிறார்கள் இந்தப் படக்குழுவினர். 

எத்தனையோ அம்மன் படங்களைப் பார்த்திருப்போம் இது அவற்றிலிருந்து கொஞ்சம் வித்தியாசமான படம். அம்மன் வில்லனை அழிப்பதற்காக வராமல் மக்களைத் திருத்துவதற்காக வருகிறாள். ஒரு முழுநீள நகைச்சுவைப் படமாக இருந்தாலும் படம் முழுவதும் இன்றைய காலகட்டத்தில் மக்களை ஏமாற்றி கோடிகளில் புரண்டுகொண்டிருக்கும் கார்பரேட் சாமியார்களுக்கு எதிராகச் சண்டை செய்துகொண்டே இருக்கிறது. இந்த மதம் அந்த மதம் என்று எந்த கணக்கும் இல்லாமல் எல்லா மதங்களிலும் இந்த ஆன்மீக அப்பாடக்கர்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே தான் இருக்கிறார்கள். இவர்களின் மூலதனம் மக்கள் மனதில் அடிப்படையாக இருக்கும் பயம் என்கிறது படம். 

அம்பானி முதல் அடுத்தவேளை சோற்றுக்கு வண்டியிழுக்கும் அன்றாடங்காய்ச்சி வரை அத்தனை பேருக்கும் நாம் எதைச் செய்தால் இன்னும் பணம் சம்பாதிக்க முடியும் இன்னும் நம் வாழ்வை வசதியாக்கிக் கொள்ள முடியும் என்ற சிந்தனை இருந்துகொண்டே தானிருக்கிறது. இந்தச் சாமியார்களில் பெரும்பாலானோர், நீ இதைச் செய்வதால் தான் இப்படி ஆகிவிட்டாய். இதற்கு இந்தப் பரிகாரம் செய். அதற்கு அந்தப் பரிகாரம் செய். எனத் தொடர்ந்து உங்களின் மனதில் பயத்தை விதைத்துக்கொண்டே இருப்பார்கள். பகுத்தறிவு பேசும் கட்சிகளின் தொலைக்காட்சி சானல்களைத் திறந்தால் கூட வடக்கே சூலம், தெற்கே மூலம், பச்சை கலர் சட்டை போடு, மஞ்சள் கலர் பேண்ட்டுப் போடு, இன்னைக்கு உனக்கு சந்தார்ஷ்ட்டமம் சாமியே நேர்ல வந்து என்ன வேணும்ன்னு கேட்டாலும் வாயைத் திறந்துவிடாதே. இப்படி எதையாவது சொல்லி மிரட்டி உங்களை மனதளவில் ஊனப்படுத்திக்கொண்டே தானிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தங்களைக் கடவுளின் ஏஜன்ட் போலக் காட்டிக்கொண்டு அவர்கள் வழியாக மட்டுமே நாம் கடவுளை அடையமுடியும் என்பதைப் போல் ஒரு பிம்பத்தை கட்டமைத்து வைத்திருக்கிறார்கள் அதையே தொடர்ந்துகொண்டும் இருக்கிறார்கள். 

இன்றைய சூழலில் அரசியல்வாதிகளைக் கூட எதிர்த்துவிடலாம் ஆனால் இப்படிப் பட்ட கார்பரேட் சாமியார்களை எதிர்ப்பது என்பது மிக மிகச் சவாலான காரியம் மட்டுமல்ல மிக ஆபத்தான காரியமும் கூட. அதனால் இந்தப்படத்தைத் தைரியமாக எடுத்த RJ பாலாஜிக்கும் நடித்த நயன்தாராவிற்கும் ஒரு சபாஷ்.

ஏங்கல்ஸ் ராமசாமியாக வரும் RJ பாலாஜி மற்றும் அவரின் மூன்று சகோதரிகளையும் சேர்த்து நான்கு பிள்ளைகளின் தாயாக ஊர்வசி. தாத்தாவாக மௌலி என அழகான ஒரு குடும்பம். படத்தின் முதல் காட்சியிலேயே படம் எதைப் பற்றியது என்பதைச் சொல்லிவிடுகிறார் RJ பாலாஜி. இயற்கை எழில் கொஞ்சும் நாகர்கோவில் பகுதியில் பதினோராயிரம் ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து அங்கே ஆசிரமம் கட்டத் துடிக்கும் ஒரு போலிச் சாமியார். அவன் முகத்திரையைக் கிழித்து எப்படியாவது அந்த நிலங்களைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று, தான் வேலை செய்யும் மிகச் சிறிய உள்ளூர் சேனல் வழியாகப் போராடிக்கொண்டே இருக்கும் RJ பாலாஜி. RJ பாலாஜியைப் பயன்படுத்தி போலிச் சாமியார் பகவதி பாபாவின் சதியை எப்படி மூக்குத்தி அம்மன் முறியடிக்கிறார் என்பதே மீதிக் கதை.

RJ பாலாஜி சாதாரணமாக ஐந்து நிமிடம் பேசினாலே பத்து நகைச்சுவைக்கு மேல் வந்துவிடும். ஒரு படமே நடித்திருக்கும் போது நகைச்சுவைக்குப் பஞ்சம் இருக்குமா என்ன? தன் இயல்பான அப்பாவித்தனமான கொஞ்சம் பைத்தியக்காரத்தனம் கலந்த நடிப்பால் படம் முழுவதையும் நகைச்சுவைகளால் நிறைத்துள்ளார். இவர் மட்டுமல்ல இவரின் தாயாக வரும் ஊர்வசியும் வில்லனாக வரும் அஜய் கோஷும் கூட பெரும்பாலும் நகைச்சுவை தான் செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் RJ பாலாஜி தான் படம் முழுவதும் நடிப்பு சொல்லிக்கொடுத்தாரோ என்பது போல் இருந்தது அவர்களின் நடிப்பு. நகைச்சுவை மற்றும் சீரியஸ் காட்சியென இரண்டிலுமே அசத்தியிருந்தார் ஊர்வசி. ஆனால் வில்லனாக வரும் அஜய் கோஷ் அந்த அளவிற்கு ஒரு பெரிய வில்லனாக மனதில் பதியவில்லை. மௌலி அவர்களுக்கும் கூட பெரிய கதாபாத்திரம் இல்லை. மிகச் சொற்பமான வசனங்கள் தான் பேசுகிறார். தங்கைகளாக வரும் மூன்று பேரும் அவர்களின் வேலையைச் சரியாகச் செய்திருந்தனர்.

அம்மனாக வரும் நயன்தாராவை முதல் முதலில் கடவுளாகக் காட்டும்போது ஏற்படும் சிலிர்ப்பு அடுத்தடுத்து ஏற்படுவதில்லை. அந்தச் சிலிர்ப்பும் கூட படத்தில் வரும் விசுவல் எபக்ட் மற்றும் பின்னணி இசையால் தான். படத்தில் நடிப்பிற்கான பெரிய தேவை எதுவும் இல்லை. முதல் பாதியிலிருந்த ஒரு விறுவிறுப்பு பிற்பாதியில் இல்லை. ஒரு மிகப்பெரிய சாமியாரை விஜய் தொலைக்காட்சி வாயிலாக RJ பாலாஜி அம்பலப்படுத்தும் காட்சிகள் கூட பெரிதாக எடுபடவில்லை. 

பேஸ்புக் வாட்சப்களில் வலம் வந்த பல சாமியார்களை ஆங்காங்கே அஜய் கோஷ் பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறார். இந்தப் படத்தின் சாமியாருக்கான எந்த ஒரு தனித்தன்மையும் இல்லை. பகவதி பாபா ஒரு நகைச்சுவை சாமியாராகத் தான் தெரிந்தாரேத் தவிரக் கடவுளே வந்து எதிர்க்க வேண்டிய ஒரு பெரும் வில்லனாகத் தெரியவேயில்லை.

படத்தின் இசையும் பரவாயில்லை ரகம் தான். வெகு நாள்களுக்குப் பின் அம்மா L.R.ஈஸ்வரி அவர்களின் குரலைக் கேட்டதில் மகிழ்ச்சி. நாகர்கோவிலில் நடக்கும் கதையாக இருந்த போதிலும் அந்த ஊர் வட்டார வழக்கு எங்குமே கேட்கவில்லை. இடையிடையில் மலையாளம் கூட வந்தது நாகர்கோவில் வட்டார வழக்கு எங்குமே வரவில்லை. 

என்னதான் ஒரு ஆழமான அவசியம் பேச வேண்டிய கதைக் கருவைக் கொண்டிருந்தாலும். அதில் எதையுமே திரைக்கதை வெளிப்படுத்தவில்லை. திரைக்கதையில் இன்னும் மெனகட்டிருக்கலாம்.

எந்த விதமான லாஜிக் சிந்தனைகளும் இல்லாமல் படத்தைப் பார்த்தால் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு நல்ல நகைச்சுவைத் திரைப்படம்.

நமக்குக் காது குத்திக்கொண்டிருக்கும் பல சாமியார்களின் உண்மை முகங்களை உரித்துக்காட்டுகிறாள் இந்த மூக்குத்தி அம்மன். 

நன்றி

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

2 COMMENTS

  1. ஏன் மூக்குத்தி அம்மன்னு பேர் வச்சிருக்காங்க? கே.ஆர்.விஜயாம்மாவுக்குப் பிறகு அம்மன் என்றாலே இரம்யா கிருஷ்ணன்தான்… ஆயிரம் நயன் வந்தாலும் கிட்ட நிக்க முடியுமா!!!! ???

    • பெருந்தெய்வங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கிராமத்து தெய்வங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்ட மூக்குத்தி அம்மனைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். படத்திலும் மூக்குத்தி அம்மன் வெங்கடாசலபதியை வணக்கும் ஊர்வசியைப் பார்த்து காண்டாவது போல் காட்சிகள் உள்ளன. இரம்யா கிருஷ்ணன் <3

Comments are closed.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -