விரலால் சிந்திப்பவர்கள்

ஆசிரியர் : ச.சுப்பாராவ்

- Advertisement -

ஆசிரியர் : ச.சுப்பாராவ்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை :₹90

ச.சுப்பாராவ் சிறந்த சிறுகதை எழுத்தாளர். சிறந்த மொழிபெயர்ப்புக்கான பல விருதுகளைப் பெற்றுள்ளார். ‘ நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு ‘ , ‘ இந்திய பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் ‘, ‘ உலக மக்களின் வரலாறு ‘ உள்ளிட்ட பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

சிறந்த மனிதர்களைப் பற்றி தெரிந்து கொள்வதே சுவாரஸ்யமானதுதான். அதுவே உலகின் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகள் எனும்போது சுவாரஸ்யம் இன்னும் கூடுதல்தான். புகழ்பெற்ற உலக எழுத்தாளர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய தொகுப்பு இது.

ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றி வெளிவந்த வாழ்கை வரலாற்று நூல்கள் மற்றும் கட்டுரைகளில் இருந்து சுவையான விஷயங்களை கோர்த்துத் தந்துள்ளார் சுப்பாராவ். முக்கியமாக அவர்கள் எழுத்திற்காக மேற்கொள்ளும் உழைப்பு குறித்து எழுதியுள்ளார்.

ஐசக் அசிமோவில் ஆரம்பித்து புதுமைப்பித்தன், பம்மல் சம்பந்த முதலியார், கல்கி, டான் பிரவுன், ஊ. வே. சா, பாலோ கொய்லோ, ஷேக்ஸ்பியர், துர்கனேவ், முரகாமி, எம்.டி.வாசுதேவன் நாயர் என்று பல மொழி எழுத்தாளர்களையும் தொட்டுச் செல்கிறது புத்தகம்.

தீபம் நா.பார்த்தசாரதியின் படைப்புகள் மட்டும் தெரிந்த எனக்கு அவரைத் திரைப்படத்தில் நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்துள்ளன என்ற செய்தி ஆச்சர்யம் அளித்தது. கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவல்களின் தொடக்கப்புள்ளிகள் எங்கிருந்து கிடைத்தன போன்ற தகவல்கள் ருசிகரமானவை.

ஆர்தர் கானன் டாயில், கிரஹாம் கிரீன் போன்ற சில எழுத்தாளர்களைப் பற்றி படிக்கையில் அவர்களின் எழுத்தை மிஞ்சிய சாகச வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

சாகச நாயகன் ஜேம்ஸ் பாண்டை உருவாக்கிய இயான் பிளெமிங், தங்க டைப்ரைட்டரில் தனது நாவல்களை வடித்துள்ளார். அலெக்ஸாண்டர் டூமாஸ் எழுதுவதற்கு அசிஸ்டன்ட்களை வைத்துள்ளார். மனைவியுடன் ஹோட்டல் நடத்திக் கொண்டிருந்த ஹருகி முரகாமி, திடீரென நாவல் எழுதும் எண்ணம் தோன்ற, உடனே கடைக்கு ஓடிப் போய் பேனாவும் சில பேப்பர்களும் வாங்கி வந்து எழுதத் தொடங்கியிருக்கிறார். இன்றும் மராத்தான் ஓட்டத்தின் மூலம் தனது எழுதும் ஆற்றலையும் அதிகரித்துக் கொள்கிறார். இப்படி பக்கத்திற்கு பக்கம் விறுவிறுப்பான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

சுப்பாராவின் தங்கு தடையற்ற எழுத்துநடை கட்டுரைகளைச் சுலபமாக வாசிக்கக் செய்கிறது. கூடவே அளவாக கலந்திருக்கும் நகைச்சுவை, வாசிப்பிற்கு சுவை கூட்டுகிறது. ஒரு தேர்ந்த வாசகனாக அவர் ஒவ்வொரு எழுத்தாளரையும் பார்த்து அதிசயிக்கும் போது நாமும் இணைந்து கொள்கிறோம். புத்தகக் காதலர்களை, அதன் ஆசிரியர்கள் மீதும் காதல் கொள்ள வைக்கும் கட்டுரைத் தொகுப்பு.

இந்துமதி மனோகரன்
இந்துமதி மனோகரன்https://minkirukkal.com/author/indumathi/
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -