வீரயுக நாயகன் வேள்பாரி

நூலாசிரியர் : சு.வெங்கடேசன்

- Advertisement -

தொடக்கத்தில் இத்தனைப் பக்கங்களா என்று மலைப்பாகத் தான் இருந்தது. படிக்கத் தொடங்கியவுடன் தூக்கம் வர மறுத்தது அடுத்து என்ன அடுத்து என்ன என பாரியோடு கைகோர்த்து ஓட வைத்தது.

உலகம் போற்றும் கவிஞரான கபிலர் காட்டிற்குள் சென்றவுடன் குழந்தையாகி காட்டை நமக்குக் காட்சிப் படுத்திருக்கிறார். காட்டிற்குள் வாழ்பவர்கள் பாவம் காட்டுவாசிகள் ஏதும் அறியாதவர்கள் என்பது போன்ற சிற்றறிவு கொண்ட என்னைப் போன்றோருக்கு. கானகங்களில் இருப்பவர்களின் பேரறிவை எடுத்துரைக்கிறது இந்தக் கதை. காட்டிற்குள் இருக்கும் ஊருக்குள் காட்டு விலங்குகள் அண்டாத வகையில் இயற்கையாக அவர்கள் அமைத்திருக்கும் நாகப்பச்சை வேலிக்கு சமமான அறிவு இப்போதும் நம் எவரிடமும் இல்லை என்பதே உண்மை. காட்டில் ஒளிந்துகிடக்கும் ஒவ்வொன்றும் ஆச்சரியம் தான். அதிலும் கதையினூடே பாரியோடு பயணம் மேற்கொள்ளும் போது அவன் வாய்மொழியில் அதைக் கேட்கும் போதும் அந்த உணர்சிகளை வெறும் வார்த்தைகளில் வடித்துவிட முடியாது என்றே எண்ணுகிறேன்.

எத்தனை வகையான செடிகள், கொடிகள், மரங்கள், பாம்புகள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள். அத்தனையும் உண்மையா இல்லை சு.வெ.வின் கற்பனையில் உதித்ததா தெரியவில்லை. ஆனால் அத்தனையையும் பார்க்கும் அனுபவம் படிக்கும் நமக்குக் கிடைத்துவிடுகிறது.

காட்டில் இருக்கும் தேவவாக்கு விலங்கைக் கொள்ளையடித்துச் செல்லும் திரையர்களை தேக்கனும் பாரியும் விரட்டும் போதெல்லாம் என்னால் நிலைகொள்ள முடியவில்லை. ஒரு கையில் வேலை ஏந்திக்கொண்டு நானும் திரையர்களை விரட்டிக்கொண்டிருந்தேன். என்ன ஒரு ஓட்டம்! என்ன ஒரு காட்சியமைப்பு! இறுதியில் திரையர் குலத் தலைவன் காலம்பனும் பாரியும் சந்தித்துக்கொள்ளும் காட்சியெல்லாம் உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சம். எவ்வளவு கல்நெஞ்சக்காரராக இருந்தாலும் உங்கள் விழிகள் கசியாமல் இருக்காது.

முருகனின் காதல் தொடங்கி பாரியின் காதல், நீலனின் காதல், செம்பா தேவின் காதல் என காதல் கதைகளுக்கும் பஞ்சமில்லாமல் காதலையும் சொக்க வைக்கும் சோமபானத்தில் கலந்து நம்மைக் கிறங்கடிக்கிறார் கதையின் ஆசிரியர். முருகனைக் கடவுளாகவே பார்த்துப் பழகிய எனக்கு அவன் காதல் கதைகள் அவனை உலகின் முதன்மையான காதல் அடையாளச் சின்னமாக மாற்றியது. பெண்கள் இப்பகுதியைப் படிக்கும் போது கவனமாகவே படியுங்கள். முடிந்தால் படிக்காமல் தவிர்த்துவிடுங்கள். இல்லையேல் முருகனின் சொக்குப்பொடியில் மயங்கி அவன் சோமபானத்தில் வீழ்ந்துவிடுவீர்கள்.

கார்த்திகை நட்சத்திரத்திற்கு முருகன் சொல்லும் விளக்கம். திசைவேழர் மற்றும் அவரின் சீடர் அந்துவனின் வானியல் அறிவு. ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கண்ணாலேயே அளந்து அவரவர் பிறந்ததினதிற்கேற்ப கணக்கட்சிதமாக  மாளிகளைகளின்  மேற்கூரையில் வரைவது. என்று கதையில் சொல்லப்பட்டிருக்கும் வானியல் சார்ந்த அறிவு நம்மை திகைக்கவைத்துவிடுகிறது.

பாண்டியனின் செல்வச் செழிப்பு, சோழனின் யானைகள், சேரனின் தந்திரங்கள். அவர்களுக்குள் இருக்கும் போட்டி, பகை ,யார் பெரியவர் என்ற அகங்காரம். இத்தனையும் மீறி பாரி என்ற சிற்றசு கூட இல்லை மலைவாழ் மக்களில் ஒரு குடியின் தலைவன். அவனை எதிர்த்து மூன்று பேரும் வெவ்வேறு காரணங்களுக்காக போர் புரிந்தாலும் தனியே வெல்லமுடியாது என்ற ஒரே காரணத்தில் ஒன்று சேர்கிறார்கள். அவர்களோடு வஞ்சமும் துரோகமும் தந்திரமும் கூட கைகோர்க்கிறது. 

மூவேந்தர்கள் மட்டுமல்ல முன்னூறு வேந்தர்கள் வந்தாலும் காட்டில் பாரியை ஒன்றும் செய்துவிட முடியாது. அங்கு ஒரு புல் கூட அவனுக்காகப் போர் புரியும். சூழ்ச்சியால் பாரியை கீழே இறக்கிப் போர் புரிகிறார்கள். அப்படியும் வென்றார்களா? என்ற கேள்வியின் விடை தான் கதையின் முடிவு.

இதுவரை எந்தச் சினிமாவிலும் காட்ட முடியாத மிகப் பிரமாண்டமான போரை நமக்குள் நிகழ்த்தி முடித்துவிடுகிறார் சு.வெ. எத்தனை எத்தனைப் போர்த் தந்திரங்கள். எவ்வளவு பெரிய படையையும் இயற்கையின் உதவிகொண்டு சின்னஞ்சிறு படையோடு நுங்கு சீவுவதைப் போல் சீவித் தள்ளிவிடுகிறார்கள் பாரியின் படையினர். கதையைப் படித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது இப்போதும் கண்களை மூடி யோசித்தால் தீக்களிப் பூசி நெருப்பிற்குள் இருந்து வெளி வந்து வாள் வீசும் நீலனின் ஒளிவீசும் மேனி என் கண்களுக்குள் எரிந்து அணைகிறது. சின்னஞ்சிறு படையோடு நீலனை மீட்கச் சென்று மடியும் இராவதன். அவனை கையில் ஏந்தி வரும் முடியன். பழையன், பழைச்சி, கூழையன், குலநாகினி, எவ்வி, ஆதினி, தேக்கன், உதிரன் என பறம்பின் ஒவ்வொரு உயிரும் என் உறவினர்களாகி இன்னும் வாசம் செய்கிறார்கள்.

நாவாய்களை அழித்து திரையர்களை மீட்டு வருவது, சோழனின் யானைகளைக் கொண்டே சோழனை விரட்டுவது. நீள் வாய் நாய்களை நம்பி வந்த சேரனுக்கு பதிலடி தந்தது. ஈக்கிகள் செறிந்த போர்களத்தில் பின்வாங்கி மூவேந்தர் படைகளைச் சிக்க வைப்பது. என போர் தந்திரங்களுக்கான அகராதியாகவே இந்தப் புத்தகம் இப்போது காட்சியளிக்கிறது. ஒருவேளை வருங்காலத்தில் முன்காலத்தைப் போல் ஆயுதம் ஏந்திப் போர் புரியும் சூழல் வந்தால் இந்தக் கையேடு ஒன்றை வைத்தே எந்த எதிரியையும் வென்றுவிடலாம்.

கதையில் வீரம், காதல், வானியல், இயற்கை பற்றிய பேரறிவைப் போல தியாங்களுக்கும் இடம் அதிகமாகவே ஒதுக்கப்பட்டிருக்கிறது. மூவேந்தர்களின் கோள்சொல்லியாக வந்து தர்மம் மீறமுடியாமல் துடிக்கும் திசைவேழர், இளவரசி பொற்சுவை, தேக்கன், காலம்பனின் மகன் என இவர்கள் ஒவ்வொருவர் இறக்கும் போதும். அவர்களின் தியாகங்களால் நம் முன் வானளவு உயர்ந்து நிற்கிறார்கள்.

போரை நிறுத்த கபிலர் எவ்வளவோ முயல்கிறார் ஆனால் பேராசை கொண்ட மூவேந்தர்கள் பறம்பின் சொத்துகள் மீது கொண்ட வெறியாலும் தங்களிடம் இருக்கும் பெரும் படையை நம்பியும் கபிலரை நிராகரிக்கிறார்கள். கபிலர் மூவேந்தர்களைப் பார்த்து “அதோ அந்த யாழை எடுத்துக்கொள்ளுங்கள். நான் பண் பாடுகிறேன். நான்கு நடன மங்ககைகளை அழைத்துச் செல்வோம். பாரியைப் பாடி விட்டு. பாரி உன் மலையைத் தா என்றால் தந்துவிடுவான்” என்று சொல்லும் காட்சியெல்லாம் திரையரங்காக இருந்திருந்தால் கைதட்டி விசிலடித்திருப்பேன். பாரியின் வள்ளல் தன்மையை எவ்வளவு அழகாக கூறிவிட்டார் சு.வெ. 

எத்தனை எத்தனை சிற்றசுகளையும் சிறுகுடிகளையும் வேந்தர்கள் அழித்து ஒழித்துள்ளார்கள். கொற்றவைக் கூத்தில் வேந்தர்களிடமிருந்து தப்பிய ஒவ்வொரு குடியின் எஞ்சிய வாரிசுகள் வெஞ்சினம் வைத்து ஆடும் காட்சிகள் இன்றளவும் ஆங்காங்கே அழிந்துகொண்டிருக்கும் சிறுகுடிகளின் கடைசி வாரிசுகளை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.  கதையின் ஒவ்வொரு பகுதியும் விளக்க வருடங்கள் கூடப் போதாது. அவரவர் வாசிப்பனுபவத்தில் உண்மையில் பாரியோடு வாழலாம். அப்படி என்னை சிலகாலம் வாழ வைத்த சு.வெங்கடேசனுக்கு நன்றி. 

நீங்களும் வாசித்து பாரியோடு வாழ்வீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.

இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க கீழேயுள்ள இணைப்பைச் சுட்டவும்.?

ஜெயக்குமார்
ஜெயக்குமார்https://minkirukkal.com/author/jeyakumar/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வமுடையவர். சிறுகதைகள், கதை மற்றும் நூல் விமர்சனங்கள், கட்டுரைகளை மின்கிறுக்கல் தளத்திற்காக எழுதி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்

படைப்புகள்

- Advertisement -